தலித்களுக்கு மட்டும் ஏன் மர்ம மரணங்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கணவன், மனைவி, அண்ணன், தங்கை, மகன், மகள் என யாராவது இறந்தால் ஒரு மூன்று மாத துக்கம். பிறகு அவ்வப்போது வந்துபோகும் துயர். இன்னும் கொஞ்சம் தொலைவிலான உறவுகளின் மரணங்களுக்கோ மூன்று நாள். பெரும்பாலும் கருமாதி தினக் கறிச்சோற்றில் துக்கம் ஜீரணமாகிவிடுகிறது. அதுவும் வயதானவர்கள் என்றால் பிணத்தை எடுக்கும் முன்பே வீட்டில் ஆங்காங்கே சிரிப்பும் நிறைந்துவிடுகிறது. விபத்துகளில் சாகும் இளைஞர்கள் என்றால் பலமான உச்சுக்கொட்டல்கள்.

பொதுவாக, ஏதாவது காரணங்கள் இருக்கும் மரணங்கள் மறைமுகமாக ஒரு நிம்மதியைத் தாங்கி வருபவை. துயரின் பாரத்தை அந்தக் காரணங்கள் தாங்கும். ஆனால் இவற்றில் எதிலும் என்னால் ரோஹித் வெமுலாக்களின், சரவணன்களின், முத்துகிருஷ்ணன்களின் மரணங்களை பொறுத்திப் பார்க்க முடியவில்லை. நோய்களாலும் அல்லாமல், விபத்துக்களாலும் அல்லாமல், முழு தற்கொலைகளாகவும் இல்லாமல், சமூக சீர்கேட்டால் நிகழும் இம்மரணங்களை சாதாரண செய்தியாக ஒரு உச்சுக்கொட்டல் கூட இல்லாமல் இச்சமூகத்தால் கடந்துபோய்விட முடிகிறது.

Why Dalit students targetted?

இவை ப்ளாக்மெயில் கொலைகள். இந்த மரணங்கள் முற்றுப்புள்ளிகள் அல்ல, கமாக்கள். "நீங்கள் படிக்க வந்தால் இப்படித்தான் சாவீங்கடா," என மத்திய கல்வி நிறுவனங்களை ஆதிக்கத்தில் வைத்திருக்கும் உயர்சாதி வெறியர்களின் எச்சரிக்கை. காண்டீனில் இருந்து வகுப்பறைகள் வரை ஆதிக்கம் செலுத்திக்கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் மர்ம மரணங்கள் என்ற பெயரில் வெளியாகும் இச்செய்திகளை மர்ம மரணங்களாகவே மறந்துவிடுகிறோமே தவிர, அதெப்படி மர்ம மரணம் அடைகின்றவர்கள் எல்லோருமே தலித்களாக இருக்கிறார்கள் என சிந்தித்திருக்கிறோமா? அது ஏன் ஒரு உயர் சாதிக்காரனுக்கு கூட மர்மமரணம் ஏற்படுவதில்லை? மர்ம மரணம் என்பதென்ன எப்போதும் தலித்துகளுக்கும், எப்போதாவது பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மட்டும் வரும் அரிய வியாதியா? உலகில் வேறெங்காவது ஒரு மதத்தில் உள்ள மைனாரிட்டிகளால் அதே மதத்தில் உள்ள மெஜாரிட்டிகளின் மேல் இத்தனை வன்முறையை திணிக்க முடியுமா?

மிகச் சாதாரணமாக, "இப்பலாம் யாரு சாதி பாக்குறா? ," "இந்த தலித் பயல்களுக்கு ரொம்பத் திமிரு," "அவங்கள்ளாம் இப்ப மாறிட்டாங்க," என பொதுப்புத்தியில் திணிக்கப்பட்ட பொய்யைச் சுமந்துகொண்டு திரிவதுதான் இந்த கொலைகளுக்கான ஊக்கம். அதைத்தான் எல்லாவற்றையும் அப்படியே நம்பி, வெறும் செய்தியாக மட்டுமே கடக்கும் நம்மில் பலர் செய்துகொண்டிருக்கிறோம்.

முதலில் ஊழல்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை என நம்பவைக்கப்படுகிறீர்கள். பின்னர் அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களின், கட்சிகளின் சமகாலத் தலைவர்கள் மீதான வெறுப்பு உங்கள் மீது திணிக்கப்படுகிறது. அந்த வெறுப்பை இயக்கங்களின் மீதானதாக்கிக் கொள்கிறீர்கள். இயக்கங்களின் மீதான அந்த வெறுப்பை கொள்கைகளின் மீதானதாக்கிக் கொள்கிறீர்கள். இந்த தவறை ஆதாரமாகக் கொண்டுதான் உயிர்களைக் காவு வாங்கும் சாதி வெறியர்களும், மதவெறியர்களும் எந்த உறுத்தலுமின்றி பலநேரங்களில் ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண எதிர்ப்பு போராளிகளாகக் கூட மரியாதையுடன் உலவுகிறார்கள். இதுதான் அடிப்படை பிரச்சினை.

சாதியம், இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் உங்கள் கருத்துக்களை அம்பேத்கர், பெரியாரைப் பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டாம். ரோஹித் வெமுலாக்களையும், சரவணன்களையும், முத்துக்கிருஷ்ணன்களையும் பார்த்து அமைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தமுறை உங்கள் மீதி திணிக்கப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்று ஒத்து ஊதுவற்குமுன் ஒரு நிமிடம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் திணிக்கப்பட்டிருக்கும் மரணம் உங்கள் வீட்டில் விழுந்ததாக கற்பனை செய்துபாருங்கள். எப்படி கோபம் கொள்வீர்கள்? சாதி எதிர்ப்புப் போராளிகளாக மாறுவீர்களா இல்லையா? திடீரென எல்லா சாதிய அநியாயங்களும் உங்கள் கண்ணில் படுமா இல்லையா? அதுதான் தேவை. முதலில் அநியாயங்களை அநியாயங்களாகப் பார்க்கும் கண்களைப் பெறுங்கள். பின்னர் ஏன் பெரியாரையும், அம்பேத்கரையும், இட ஒதுக்கீட்டையும் தூக்கிப் பிடிக்கவேண்டும் என்பதற்கான காரணம் விளங்கும். அதன்பின் என்ன செய்யவேண்டும் என்பதற்கு பெரியாரும், அம்பேத்கரும் வழிகாட்டுவார்கள்.

அந்த வழிகாட்டுதலில் நாம் அனைவரும் ஒன்றிணையும் போதுதான் ஒரு மதத்தின் மைனாரிட்டிகள் அம்மதத்தின் மெஜாரிட்டிகளுக்குள் அவர்கள் திணித்த வேற்றுமையை பயன்படுத்தி ஒட்டுமொத்த மெஜாரிட்டியின் மீதும் வல்லாதிக்கம் செலுத்தும் நிலை மாறும். மர்ம மரணங்களுக்கான நிரந்தர தீர்வு என்பது அது ஒன்றுதான்.

-டான் அசோக

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Why Dalit students like Rohit Vemula, Muthukrishnan were targeted in central govt educational institutions? Here is an analysis.
Please Wait while comments are loading...