
அந்த இளைஞர் போலீசைத் தாக்கியது ஏன் தெரியுமா?
Recommended Video

சென்னை: நேற்றைய ஐபிஎல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு இளைஞர் போலீசைத் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், போலீசார் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மக்களோடு நிற்க வேண்டிய ஒரு தலைவர், சீருடை அணிந்த காவலர்களுக்கு சாதகமாக கருத்துத் தெரிவித்திருப்பதை பலரும் ஏற்கவில்லை.
இந்த நிலையில், அந்த இளைஞர் ஏன் போலீசாரைத் தாக்கினார் என்ற விவரம் கிடைத்துள்ளது. நேற்றைய போராட்டத்தின்போது நாம் தமிழர் தலைவர் சீமானும் களத்தில் இருந்தார். அண்ணா சாலையில் அவர் பெரும் இளைஞர் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோதுதான், போலீசார் தடியடியில் இறங்கினர்.
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS
— Rajinikanth (@rajinikanth) April 11, 2018
ஒரு கட்டத்தில் சீமானை அடிக்க முயன்றனர் இரண்டு போலீசார். ரஜினி வெளியிட்ட வீடியோவில் சில நிமிடம் முன் சென்று பார்த்தால் அது தெரியும். சீமானை அடிக்க வந்தவர்களில் ஒரு போலீசைத்தான் அந்த இளைஞர் தள்ளிவிட்டார். "எங்க அண்ணன் மேலயே கை வைப்பியா நீ..?" என்று கேட்டபடி அந்த போலீஸ் முகத்தில் குத்த முயன்றார் இளைஞர்.
அதன் பிறகு சீமான் ஓடி வந்து, கைகலப்பை விலக்க, அந்த இளைஞர் போராடும் கூட்டத்தில் கலந்துவிட்டார்.
நடந்த சம்பவம் இதுதான்.
"ரஜினி களத்தில் இறங்கி போராடும் போது, போலீசார் சீருடையில் தடியோடு அடிக்க வந்தால், அவர் ரசிகரின் மனநிலை எப்படி இருக்குமோ, அதுதான் நேற்று அந்த இளைஞனின் மனநிலை," என்கிறார்கள் நாம் தமிழர்கள்!