For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த 130+ எம்.எல்.ஏ.க்களில் ஒருவரைக்கூட ஜெயிக்க விடாமல் மக்கள் பழி தீர்ப்பார்களா?

By Shankar
Google Oneindia Tamil News

-மகிழ் மதி

தமிழக அரசியல் மற்றும் அந்த அரசியலால் தீர்மானிக்கப்படும், தமிழக முதல்வர் பதவி யாருக்கு என்பதற்கான போட்டியில் தமிழ்நாடு பல கேலிக் கூத்துகளை சந்திக்கிறது. அதிலும் சசிகலா ஆதரவு என்பது தீமை என்றும், ஓபிஎஸ் ஆதரவு என்பது நீதி, நியாயம், நேர்மை, தர்மம் என்ற கூச்சல்களையும் கேட்க முடிகிறது.

அந்த கேலிக்கூத்துகளின் பின் உள்ள உண்மைகளை உங்கள் முன் கேள்விகளாக வைக்கிறேன்... பதில்கள் எனக்கு தேவை இல்லை.

Will people vote against these 130+ MLAs?

1. அ.தி.மு.க. என்கிற கட்சியின் தலைவராக யார் வரவேண்டும் என்பதை அந்தக் கட்சி, அதன் நிர்வாகிகள், தொண்டர்கள்தான் தீர்மானிக்கிறார்கள், இந்தியா முழுக்க அப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் வேறு யாரும் தலையிட முடியாது. அப்டியே மிரட்டி பதவியை எடுத்துக்கொண்டார்கள் என்றால்... அதை அந்த கட்சிக்காரர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.க.. எனும் கட்சி இரண்டாக மூன்றாக உடைந்து, எம்.ஜி.ஆ.ர், வை.கோ.வை வெளித்தள்ளிய கதைகள் இருக்கின்றன. அதோடு இரு பிரிவாக பிரிந்து சண்டை போட்டு மண்டை உடைத்துக்கொண்ட அ.தி.மு.க.வினர் ஒட்டுமொத்தமாக இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த முடியாமல் போன வரலாறுகளும் இருக்கின்றன. ஆக, தலைவர் பதவியை செல்வாக்கு மிக்கவர்கள் பறித்துக்கொள்வது என்பது முதல்முறையாக சசிகலா விசயத்தில் நடக்கவில்லை.

2. ஜெ. மரணத்திற்கு பின் பலர் வீரர்கள் ஆகி இருக்கிறார்கள். யார் யார் என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஒரு மாநில முதல்வரை மருத்துவமனையில் யாருமே பார்க்க முடியாமல், ஒருவர் தடுக்கிறார் என்றால் அவர் செல்வாக்கு ஒரு நாளில் வந்ததா என்ன? இன்னொன்று ஜெ, தான் யாருடைய கட்டுப்பாட்டிலோ இருப்பதை அறியாதவர் அல்ல... அதை அறிவிக்க முடியாதவரும் அல்ல... அரசியலுக்கு அறிவு பலம் தேவை... ஆள் பலமும் தேவை... ஜெயலலிதாவிற்கு இந்த இரண்டும் யார் யாரால் கிடைத்தது என்பதை உலகமறியும். பல வருடங்களாக நிகழ்கிறது இது. அ.தி.மு.க.வின் அத்தனை நிர்வாகிகளும், தொண்டர்களும் இதை அறிந்தே இருக்கிறார்கள் என்பதை விட... இத்தனை வருடங்களாக, அதை எதிர்த்து கேட்காமல்... கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பதை... எந்த வீரத்தில் சேர்த்துக் கொள்வீர்கள்?

3. உங்களுக்குத் தெரிந்து எத்தனை எம்.எல்.ஏக்கள். எம்.பி.க்கள் மகா உத்தமர்கள் என்று உங்களால் சொல்ல முடியும்? அனைவரும் கூட்டாகவே எதையும் செய்கிறார்கள். கூட்டு இலாபம்.

4. இன்னொரு கட்சி வந்தால் தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்காது, நில மோசடி தாறுமாறாக இருக்கும். உங்கள் வீடுகளையே பிடுங்கிக்கொள்வார்கள் என்று சொல்கிறார்கள்.

5. தர்மம் வெல்லும், என்பவர்களின் குடும்பங்களை பற்றியும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அவரோடு சேர்ந்த ஒரு குழுவை, அவர்களின் கட்சித் தலைவர், சில காலம் தள்ளி வைத்ததற்கான பின்னணிக் காரணம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்.

6. தவிரவும் ஓ.பி.எஸ். போயஸ் கார்டனில் சசிகலா உறவினர்களால் தாக்கப்பட்டார் என்பதுதான்... ஓ.பி.எஸ்.ஸின் இந்த திடீர் வேகத்திற்கும் காரணம் என்றும் செய்திகள் கசிகிறது.

7. எம்.எல்.ஏ.க்கள் கடத்தல் என்பது கபட நாடகத்தின் உச்சம். கட்டுப்பாட்டில் உள்ளனர் என்று குற்றம் சாட்டுவது ராஜதந்திரமாம். இப்போதாவது பஸ்தான். இதோ இருக்கும் ஈ.சி.ஆர். ரோடுதான். ஆனால், ஜெயலலிதா - ஜானகி பங்காளிச் சண்டையில் பிளைட் என்றால் நம்புவீர்களா? அதுவும் பூனாவுக்கோ, பெங்களுருக்கோ அழைத்துக்கொண்டு போய்... அங்கிருந்து மதுரை... மதுரையில் இருந்து சென்னை... அப்போது திருநாவுக்கரசர்- கேகேஎஸ்எஸ்ஆர்... இப்போது கருணாஸ்... அவ்வளவே.

8. கடத்தப்பட்டவர்களுக்கு பொண்டாட்டி, பிள்ளைகள் உறவினர்கள் இல்லையா, அவர்களில் எத்தனை பேர், காவல் நிலையங்களுக்கு சென்று கம்ப்ளெயிண்ட் கொடுத்துள்ளார்கள். கடத்தப்பட்டால் கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

9. மக்கள், பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தேடுக்கிறார்கள். அந்த பிரதிநிதிகள்தான், பஞ்சாயத்து தலைவர் தொடங்கி, முதல்வர், பிரதமர் வரை தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள், தங்கள் பிரதிநிதிகளை நல்லவர்களாகத் தேர்ந்தேடுக்க வேண்டும். அப்படி தேர்ந்தேடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மையோர், சசிகலாவை முதல்வர் பதவிக்கு தேர்ந்தேடுக்கிறார்கள். அவர்களால் தேர்ந்தெக்கப்பட்ட ஒருவருக்கு ஆளுநர் பதவி ப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அப்படித்தான் இந்திய அரசியல்அமைப்பு சட்டம் சொல்கிறது. பல குற்றங்கள், வழக்குகள் அவர் மீது இருந்தாலும்... அதை சட்டம், கோர்ட் வழியாக சந்திக்க வேண்டும். அப்படித்தான் இதுவரை நடந்தது என்பதும் நீங்கள் அறியாதது அல்ல.

சசிகலாவை முதல்வராக பதவி அமர்த்துவதை ஆளுநர் தள்ளிப்போடுவது, நிறைய பேருக்கு, சாதகமாகவும், தேவையாகவும் இருக்கலாம். ஆனால், அது சட்டப்படி மீறல் என்பதும் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்பதும் உண்மையா என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை... நீங்கள் விரும்பும் சகாயம் ஐ.ஏ.எஸ். போன்ற ஒருவரை, முதல்வர் பதவிக்கு இதே எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தாலும், ஆளுநர் இதே மாதிரி இழுத்தடித்தால்... அப்போது எந்த சட்டத்தை துணைக்கு அழைப்பீர்கள்? ஆக, சசிகலா சரியானவரா என்ற கேள்வியைத்தாண்டி, ஆளுநர் எதன் அடிப்படையில் தள்ளிவைத்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு பதில் என்ன?

10. தமிழ்நாடு நெருக்கடியில் இருக்கிறது என்று தயவுசெய்து சொல்லி விடாதீர்கள். சாவகாசமாக சல்லிக்கட்டு நடத்தி, ரெண்டு பேர் உயிரை விடும் நிலையில் மிக இயல்பாகவே தமிழகம் இருக்கிறது. இப்போது வரை.

11. சரி, காலம் தாழ்த்தி, சில பல கசாப்புகளை, காய் நகர்த்துதல்களை செய்த பின்... எம்.எல்.ஏ.க்கள் இந்த பக்கம் வந்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்கள் நியாயவாதிகள் என்றோ, தர்மவான்கள் என்றோ ஏற்றுக்கொள்வீர்களா? அந்த நேர்மையாளர்கள் ஆதரவோடு முதல்வராகும் ஒருவர் நேர்மையானவர் என்று சான்றிதழ் தருவீர்களா?

12. இருவரில் அவர் பெட்டர், என்ற மிகப்பெரிய கருத்தை நீங்கள் வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். இது மிகக் கேவலமான மனநிலை. நம்பிக்கையற்ற மனநிலை. சட்டத்தை, நீதியை, அரசியல் அமைப்பை, தேர்தலை, மக்களை... ஏன்... உங்களை நீங்களே நம்பாத ஒரு மனநிலை. அதோடு இவர்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்துதான் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் எப்படியாவது தண்டனை இல்லாமல் தப்பித்து விட வேண்டும் என்று தாடி வளர்த்து.. தீச்சட்டி எடுத்து... யாகங்கள்... ஹோமங்கள் வளர்த்து... மண்சோறு உண்டு... அலகு குத்தி... இன்னும் பல வேடிக்கை விநோதங்களை நிகழ்த்தினார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

13. சசிகலா... தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட்டால் என்ன நடந்து விடப்போகிறது?. ஆறு மாதத்தில் அவர் எம்.எல்.ஏ. ஆகவேண்டும் என்ற கெடு இருக்கிறது. ஆனால், எப்படியும் ஜெயித்துவிடுவார் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அல்லது ஜெயித்து விடுவாரோ என்று அஞ்சுகிறீர்கள். சர்வாதிகார ஆட்சி, மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது... குடும்பமே ருத்ரதாண்டவம் ஆடும்... இன்னும் உங்கள் கையில் இருக்கிற குற்றப்பட்டியல் கூவத்தூர் வரை நீளலாம். ஆனால்...

14. மக்கள் கையில்தான், ஓட்டு என்கிற சக்தி இருக்கிறது என்றால் ஏன் பயப்படவேண்டும். ஒரு தொகுதி மக்கள் அத்தனை பேரையும் மிரட்டி ஒருவர் ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது என்று நம்புகிறேன். பின் எப்படி சசிகலா முதல்வர் ஆவார்? மக்களால். நம்மால். ஆக, நீங்கள் பயப்படவேண்டியது மக்களைப்பார்த்து... அதாவது உங்களைப் பார்த்து.

15. அதைவிட முக்கியமானது, ஒரு தனிநபர், தன்னுடைய செல்வாக்கால் இந்த ஊரில் எவ்வளவு அநீதிகளை செய்தாலும்... அவரை அத்தனை எளிதில் தண்டிக்க முடியாது... என்று நினைக்கிற, நம்புகிற உங்கள் மனநிலையை எப்படி எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்?

16. அரசு இருக்கிறது, தெளிவான சட்டம் இருக்கிறது, கடுமையான, கம்பீரமான காவல்துறை இருக்கிறது, நீதிமன்றங்கள் இருக்கின்றன, திறமையான வக்கீல்கள் இருக்கிறார்கள்.... இது எல்லாம் இருந்தாலும் ஒருவர் மிகச் சாதாணமாக தப்பிப்பார்.... வருடக்கணக்கில் ஜாலியாக சுற்றுவார் என்றால்... செல்வாக்கு மிக்க தனிநபர்களுக்கு முன்னால்... இவை எதுவும் எடுபடாது என்று அர்த்தமா? "மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு" என்பது ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வெத்து பன்ஞ் டயலாக்கா? ஆக, சிலநூறு தனிநபர்களுக்கு முன்னால் கோடிக்கணக்கான மக்கள்... வெறும் பொம்மைகள் என்று அர்த்தமா?. ஆம்... அப்படித்தான் என்றால்... அவ்வளவு எளிதில் இங்கு நீங்கள் எதையும் திருத்தவும் முடியாது. மாற்றவும் முடியாது. அனுபவித்துதான் ஆகவேண்டும். ஏன் எனில் செல்வாக்கு பெற்ற தனிநபர்களுக்காக உங்கள் சட்டமும், உங்கள் நீதியும், உங்கள் காவல்துறையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்க வளைத்துக் கொள்ளப்படும். சாமானியர்களிடம் மட்டுமே அது நிமிர்ந்து நிற்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?

17. ஒரே ஒரு சசிகலா மட்டும் தான்... உங்கள் பார்வையில் நேர்மையற்றவரா... சுற்றிலும் பல நேர்மையாளர்கள்(??) இருந்தும் ஒரே ஒரு நேர்மையற்ற சசிகலாவிற்கு இவ்வளவு செல்வாக்கு வந்தது எப்படி?

18. அவ்வளவு ஏன்? தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புபவர்கள், பாடம் புகட்டுபவர்கள், ஓட்டு எனும் சக்தி இருக்கிறது என்றால்... நேர்மையானவர்கள்... கடைசியாக ஒன்றை மட்டுமாவது செய்வார்களா? இப்போது நீங்கள் துரோகிகள், அடிமைகள் என்று சொல்கிற அந்த 130+ எம்.எல்.ஏ.க்களில் ஒருவரைக்கூட ஜெயிக்க விடாமல் மக்கள் பழி தீர்ப்பார்களா? மக்கள் தீர்ப்பளிப்பார்கள், என்று நீங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே அது என்ன? இத்தனை எம்.எல்.ஏ.க்களும், அல்லது இதில் முக்கால் வாசிப்பேர் வரப்போகும் தேர்தலிலும் நிற்பார்கள். ஜெயிப்பார்கள். எப்படி? பணம் அல்லது சாதி.... அல்லது மதம்.. அல்லது கட்சிப்பாசம்.. எதுவோ ஒன்று இவர்களை ஜெயிக்க வைக்கும் என்றால்... பின் ஏன்... இப்போது கூப்பாடு போடவேண்டும்.

19. ஓட்டு போடும் அதிகாரமும் உரிமையும் மட்டும்தான் மக்களிடம் இருக்கிறது. மற்ற எந்த அதிகாரமும் மக்கள் கையில் இல்லை. ஆக, ஓட்டுப் போடுவதைத் தவிர பிற எல்லா அதிகாரங்களும் அவர்கள் கையில் இருக்கிறது... அவர்கள் மக்கள் பிரதிநிதிகள். சரி செய்ய வேண்டும் என்றால் ஓட்டுப்போடும்போது மட்டும்தான் சரி செய்யமுடியும்... அதை நீங்கள் அசால்ட்டாக நினைத்தார்கள் அவர்கள் உங்களை அசால்ட்டாக அல்ல அதைவிட கேவலமாகவே நினைப்பார்கள். ஏன் எனில் நாம் அப்படித்தான். ஓட்டு போடும்போது மட்டும் அனைத்தையும் மறந்துவிடுவோம். சில புழுக்களை உங்கள் முன் வீசி ஓட்டு என்கிற மீன்களை அவர்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை அள்ளிப்போகிறார்கள். போவார்கள்.

20. சரி என்னதான் செய்ய முடியும்?. இப்போது நடந்துகொண்டிருப்பது நீதிக்கான போராட்டம் அல்ல. அதிகாரத்திற்கான பங்காளிச் சண்டை. இந்த பங்காளிச் சண்டையை வேடிக்கை பார்க்கலாம்.

அல்லது நமக்குத் தெரிந்த அரசியல் அறிவை வைத்துக் கொண்டு வெட்டியாக கூச்சல் போடலாம். ஆனால்... முடிவெடுக்கும் அதிகாரம் நம் கையில் இல்லை. நாம் நினைத்தபடி எதுவும் இங்கே நடக்காது என்பதை புரிந்து கொண்டு கூச்சல் போடுங்கள்.
தட்ஸ் ஆல் நவ் மக்களே!

Will the people punish those 130+ MLAs hiding in a resort? Here is an political analysis by Magizh Mathi.

English summary
Will the people punish those 130+ MLAs hiding in a resort? Here is an political analysis by Magizh Mathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X