கூண்டோடு ‘டைவ்’ அடித்த அதிமுகவினர்.. பன்னீருக்கு பெருகும் மவுசு.. உதறலில் ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள்!
தேனி : தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத் தாவியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி உடனான மோதலால், அனைத்து மட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து, விரைவில் பொதுக்குழுவை நடத்தத் திட்டமிட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அவ்வப்போது, நிர்வாகிகளுடன் தனது பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களின் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துனர்.
அதேபோல, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஓபிஎஸ் அணியில் இணைந்துள்ளனர்.

சளைக்காத ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஒவ்வொரு நகர்வுக்கும் சளைக்காமல் பதிலடி கொடுத்து, நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மாறி மாறி நாடி, ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிகமான நிர்வாகிகள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் எடப்பாடியின் கையே ஓங்கியிருக்கிறது, ஓ.பன்னீர்செல்வம் பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே முக்கிய நிர்வாகிகள் இருப்பதால் ஓபிஎஸ் தரப்பு பின்னடைவையே சந்தித்து வருகிறது என்ற பார்வை இருக்கிறது. ஆனால், பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் தொண்டர்கள் ஓபிஎஸ் அணிக்குத் தாவி வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தூண்டில்
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தலைமையின் ஆதரவு இல்லை, ஓ.பன்னீர்செல்வத்திற்கே டெல்லி ஆதரவு இருக்கிறது என்ற நிலைமையால், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள், எடப்பாடி அணியில் இருந்து தங்கள் பக்கம் தொண்டர்களை இழுத்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான முடிவையே அறிவிக்கும், இப்போதே நம் அணியில் வந்தால் முக்கியமான பதவிகள் கிடைக்கும் எனக் கூறி ஈபிஎஸ் அணிக்குள் தூண்டில் போட்டு வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

பண்ணை வீட்டில்
அதற்கு சாதகமான பலன்களும் கிடைத்து வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருந்த 300-க்கும் மேற்பட்டோர் கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டிற்குத் திரண்டு வந்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து
ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வைகை பாலன், மேற்கு மாவட்ட செயலாளர் பசும்பொன், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.

தேவகோட்டை அதிமுகவினர்
ஓபிஎஸ் அணியில் சிவகங்கை மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் கே.ஆர்.அசோகன். இவர் முன்னிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ஊரவயல் முத்து மாணிக்கம், அரியக்குடி கிளைச் செயலாளர் ஆறுமுகம், வார்டு கவுன்சிலர் சேகர், எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்த ராகப்பன், எம்.ஜி.சின்னக்கருப்பன், முத்தரையர் சங்கத் தலைவர் கணேசன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராமராஜன், கண்மாய்க்குடியிருப்பு சுப்பிரமணியன், மா சின்னத்தம்பி, மகளிர் அணியினர் உட்பட 500 நபர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

பெருகும் ஆதரவு
சிவகங்கை மாவட்டத்தில் ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்குத் தாவிய ஆயிரக்கணக்கானோர் விரைவில் கைலாசபட்டி பண்ணை வீட்டுக்குச் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க உள்ளதாக சிவகங்கை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தென் மாவட்டங்கள் பலவற்றில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்குத் தாவி வருவதால், அங்கிருக்கும் ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications