மீன்பிடித்தடை காலம் முடிந்தது..உற்சாகமாக கடலுக்கு சென்ற மீனவர்கள்..டீசல் விலையை குறைக்க கோரிக்கை
மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 262 விசைப்படகுகள் உள்ள நிலையில் 130 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன.
தூத்துக்குடி: மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் 61 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 262 விசைப்படகுகள் உள்ள நிலையில் 130 விசைப்படகுகளில் மீனவர்கள் வான வேடிக்கையுடன் உற்சாகமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
Recommended Video
கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15ஆம்தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.

மீன்பிடி தடைகாலம்
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. தடைகாலம் அமலுக்கு வந்ததால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துகுடி, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

13 கடலோர மாவட்டங்கள்
இதனால் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்திருந்தனர். மீன்பிடித்தடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கொரோனா தொற்று, டீசல் விலை உயர்வு, மீன்வரத்து குறைவு காரணமாக மார்ச் மாதம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

61 நாட்கள் தடைக்காலம் முடிந்தது
இந்த ஆண்டில் மட்டும் 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 262 விசைப்படகுகள் இன்று அதிகாலை ஆழ்கடலுக்கு சுழற்சி முறையில் 130 இன்று மீன்பிடிக்க சென்றன. மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

அதிகாலை கடலுக்கு சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 262 பதிவு செய்யப்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடி விசைப்படகு சங்கத்தினர் 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால் மீன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சிமுறையில் 130 விசைப்படகுகள் இன்றும் 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்ல முடிவு செய்ததின் அடிப்படையில் இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

நிவாரணத்தொகை
பின்னர் இதுகுறித்து மீனவர் சுஜித் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித் தடை காலத்திற்கு முன்பாக இரண்டு மாதங்களாக மீன்பிடி துறைமுகம் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு தொழிலுக்கு செல்வதாக குறிப்பிட்டார். மீன்பிடி தடைகாலம் நிவாரணத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவர் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு சந்தோசமாக கடலுக்கு செல்வதாக குறிப்பிட்டார். டீசல் விலை அதிகரிப்பின் காரணமாக பல மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. டீசல் விலையை அரசு குறைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications