தரங்கெட்ட பேச்சு..இத்தோடு நிறுத்திக்கங்க! அப்பறம் தாங்க மாட்டீங்க.. சிவி சண்முகத்தை விளாசிய பொன்முடி
விழுப்புரம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தரங்கெட்டு பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் நீங்க தாங்க மாட்டீங்க என தமிழக அமைச்சர் பொன்முடி நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் அதிமுகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் உதயநிதியை ஒருமையில் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதனால் திமுகவினர் அவரை மிகக் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சி.வி.சண்முகம்
கடந்த சில நாட்களுக்கு தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.வி.சண்முகம், ஆளும் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.. மேலும், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இங்கு மன்னரைப் போலத் தான் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என வரிசையாக ஆட்சி நடத்துகின்றனர். இதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடலா?" என்று விமர்சித்தார். இதற்கு அப்போதே அமைச்சர் பொன்முடி கடும் பதிலடி கொடுத்தார்.

உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தரங்கெட்டு பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் நீங்க தாங்க மாட்டீங்க என தமிழக அமைச்சர் பொன்முடி நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தில் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நினைவு நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொன்முடி
பின்னர் அவர் பேசுகையில்," திமுக அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், தந்தையைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த சி.வி.சண்முகம், திமுகவைப் பற்றியோ அல்லது வாரிசு அரசியலைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என் கால் தூசுக்கு சமம் என்று அரசியல் நாகரீகம் இல்லாமல் பேசும் சி.வி.சண்முகம், விரைவில் திமுகவிற்கு தக்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.

எச்சரிக்கை
திமுகவை குறைகூறுவதை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஊரை ஏமாற்றிவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருக்கும் சி.விசண்முகம், தன்னுடன் இருந்த லட்சுமணனை கூட ஒன்றாக வைத்திருக்கத் தெரியாத நபர்தான். சி.வி.சண்முகம் தரங்கெட்டு பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் நாங்களும் தரங்கெட்டு பேசினால், நீங்க தாங்க மாட்டீங்க. நண்பராக இருந்தாலும் நாகரீகமாக பேச வேண்டும்" என மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications