ஒரு சிலரை மட்டும் கொசு அதிகம் கடிக்குதே.. ஏன் என்று யோசிச்சு இருக்கீங்களா? ஆய்வு சொல்லும் தகவல் இதோ
வாஷிங்டன்: கொசுக்கள் அனைவரையும் கடிக்காது என்றும்.. ஒருசிலரை மட்டுமே தேடி தேடி சென்று கடிக்கும் என்றும்.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலயே... என்று காமெடி நடிகர் கவுண்டமணி சூரியன் படத்தில் உள்ள ஒரு காமெடியில் ஒமக்குச்சி நரசிம்மனை பார்த்து சொல்வார்.
காமெடி காட்சிக்காக கவுண்டமனி அப்படி சொன்னாலும் உண்மையில் கொசுத்தொல்லை தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என்பதில் சந்தேகமும் இல்லை.

கொசுக்கடி
அதுவும் மழைக்காலங்கள் வந்துவிட்டதென்றால் சொல்லவே வேண்டாம். கொசுக்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும். இந்த கொசுக்களை சமாளிக்க கொசு பேட், கொசுவர்த்தி சுருள் என எத்தனையோ யுக்திகளை நாம் கையாண்டாலும் அதையும் மீறி சில கொசுக்கள் வந்து கடிப்பதை பார்த்து இருக்கிறோம். அதேபோல், பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை பிரித்து மேயும் அளவுக்கு கொசுக்கள் பதம் பார்த்து விடும்.

ஒருசிலரை மட்டும் குறிவைத்து
இப்படி கொசுக்களின் அட்டகாசத்தை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கொசுக்கள் எல்லோரையும் ஒரே போல கடிப்பது இல்லை. ஒரு சிலரை மட்டும் குறிவைத்து மிக அதிகமாக கடிப்பதை நீங்கள் கவனித்து இருக்கக்கூடும். இல்லை நமக்கே கூட இந்த அனுபவம் இருந்து இருக்கலாம். ஏன் இப்படி ஒருசிலரை மட்டும் குறிவைத்து கொசுக்கள் கடிக்கின்றன என்று என்றாவது யோசித்து பார்க்கிறோமா...

பல ஆண்டுகளாக ஆய்வு
ஆனால் இதை வைத்து ஒரு ஆய்வை நடத்தி கொசுக்கள் ஒரு சிலரை குறிவைத்து அதிகமாக கடிப்பது ஏன் என்பதற்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தி ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் வோஷால், மரியா எலினா ஆகியோர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிட்ட சிலரை வைத்து பல ஆண்டுகளாகை இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

கார்பாக்சிலிக் அமிலம்
இதில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த மனிதர்களில் ஒரு பிரிவினரை மட்டுமே கொசு அதிகம் கடித்துள்ளது. இதை வைத்து நடத்திய ஆய்வில், நமது உடலில் அதிகம் கார்பாக்சிலிக் அமிலம் உற்பத்தியானால் அதனால் கவரப்பட்டு கொசுக்கள் வருகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நமது தோலில் இருக்கும் சீபம் என்பதில் கார்பாக்சிலிக் அமிலம் உள்ளது. நமது தோல்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலமாக இதில் இருக்கும் அமிலத்தின் மணம் வெளியில் வீசும்.

மாற்று வழிகள் குறித்து ஆராய்ச்சி
இதன் வாசத்தை வைத்து தான் கொசுக்கள் இவர்களை மட்டும் அதிகம் தேடி தேடி வந்து கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. பெண் கொசுக்கள் உயிர்வாழ ரத்தம் இன்றியமையாதது. அதன் உணவுப்பொருளில் முதன்மையானதாக ரத்தம் மட்டுமே இருக்கிறது. ரத்தம் குடிக்கவில்லை என்றால் இத்தகைய கொசுக்கள் உயிரிழந்துவிடும். கொசுக்கள் மனிதர்களை கடிக்க விடாமல் செய்வதற்கு மாற்று வழிகள் குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications