புளூ டிக் கட்டணம்.. புற்றீசல் போல உருவெடுத்த போலி கணக்குகள்.. திடீர் பல்டி அடித்த எலான் மஸ்க்!
வாஷிங்டன்: ட்விட்டரில் புளூ டிக் பெற எலான் மஸ்க் 8 டாலர் கட்டணம் விதித்த நிலையில், ஏகப்பட்ட போலி கணக்குகள் உருவெடுத்துள்ளது. இதனால், திடீரென எலான் மஸ்க் தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை முறைப்படி தன்வசப்படுத்தினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தனது முழுக் கவனத்தையும் ட்விட்டர் மீதே எலான் மஸ்க் செலுத்தி வருகிறார்.

திவால் அடையும் நிலைக்கு செல்வதாக..
இதை அவரே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ஒப்புக்கொள்ளவும் செய்தார். ட்விட்டர் சரியான பாதையில் பயணிக்க தொடங்கிய பிறகுதான் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட தன்னுடைய பிற நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருந்தார். இப்படி வாரத்திற்கு 120 மணி நேரம் உழைக்கும் எலான் மஸ்க், ட்விட்டர் திவால் அடையும் நிலைக்கு செல்வதாக கூறி அந்த நிறுவனத்தின் ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

8 டாலர் வசூலிக்கப்படும்
ட்விட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் 50 சதவிகிதம் பேரை வீட்டுக்கு அனுப்பிய எலான் மஸ்க், புளு டிக் வசதியை அனைவரும் பெறலாம் என்றும் இதற்காக கட்டணமாக மாதம் தோறும் 8 டாலர் வசூலிக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். எலான் மஸ்க் அறிவித்தபடி கடந்த சில தினங்களுக்கு முன்பாக புளு டிக் வசதிக்கு கட்டணம் பெறும் நடைமுறையும் தொடங்கியது.

போலி கணக்குகள்
ஆனால், இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பது போல போலி கணக்குகள் பலவும் பிரபலமான நிறுவனங்கள் பெயரில் ட்விட்டர் கணக்கை ஆரம்பித்து புளு டிக் வசதியும் கட்டணத்தை செலுத்தி பெற்றுவிட்டன. அதோடு நிறுவனங்களின் பெயரில் மோசடி அறிவிப்புகளையும் வெளியிட்டது. இத்தனைக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பெயரிலேயே போலியாக அக்கவுண்ட் உருவாக்கி புளு டிக் வசதி பெறப்பட்டதுதான் உச்ச கட்ட காமெடி.

பெரிய தலைவலி
இப்படி பிரபலங்கள், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகள் ஓபன்செய்து புளு டிக் வசதியை பெற்று ஆள்மாறாட்டம் செய்தது எலான் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. இதனால், ஆரம்பித்த கையோடு புளுடிக் வசதியை நிறுத்தி வைத்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.

அதிகாரப்பூர்வ பேட்ஜ்
அதேபோல், முக்கிய அக்கவுண்ட்களுக்கு அதிகாரப்பூர்வ பேட்ஜை மீண்டும் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அரசு அலுவலகங்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் அக்கவுண்டிற்கு கீழே சாம்பல் நிறத்தில் அளிக்கப்படும் அஃபிசியல் பேட்ஜ் மீண்டும் அளிக்கப்பட தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

பெரும் நெருக்கடி
ட்விட்டர் நிறுவனம் அதிக வருவாய் ஈட்ட வில்லையென்றால் திவால் நிலைக்கு செல்லும் என்று எலான் மஸ்க், ட்விட்டர் ஊழியர்கள் உடனான சந்திப்பின் போது கூறியிருந்த நிலையில் தற்போது வருவாய் ஈட்டும் திட்டமாக அறிவிக்கப்பட்ட 8 டாலர் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டு இருப்பது ட்விட்டருக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications