Bigg Boss 8: விஜய் சேதுபதி கிட்ட வாய் கொடுத்தால் சிக்கல்தான்.. ஒன்லி தக் லைஃப்! பிக் பாஸ்-ல் கெத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு விஜய் சேதுபதியின் மீது இருந்தது. இதுவரைக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியில் செட்டாக போகிறார் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு நேற்று நல்ல தீனி போட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் என்றாலே பிரச்சனைகளும் பஞ்சாயத்து நிறைந்தது தான். இதனாலையே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பலர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்புவரைக்கும் இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? இந்த நிகழ்ச்சியை முதலில் தடை பண்ணணும். இந்த நிகழ்ச்சியால் தான் எல்லா பிரச்சனையும் வருகிறது... என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் கூட நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அந்த நிகழ்ச்சியில் இதை அப்படி செய்திருக்கலாம் இதை இப்படி செய்திருக்கலாம் என்று விவாதம் செய்கிறார்கள்.

இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விடவும் தற்போதைய எட்டாவது நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமானது. இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பை விடவும் விஜய் சேதுபதி எப்படி இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்துவத்தை காட்டப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு முதல் நாளே விஜய் சேதுபதி தீனி போட்டு இருக்கிறார்.
இன்னொரு நபர் ஒரு பிரபலத்தின் இடத்திற்கு வரும்போது இருவர் மீதும் ஒப்பீடு வரும். அதுபோலத்தான் கமல்ஹாசன் இடத்தில் விஜய் சேதுபதி வரும்போது கமல் போல இவர் இருப்பாரா என்று எல்லோரும் ஒப்பிட்டு வருகிறார்கள். ஆனால் அவரவர் அவருடைய தனி திறமையில் இருந்தால்தான் சிறப்பு என்பது நேற்று விஜய் சேதுபதி நிரூபித்திருக்கிறார்.

நிகழ்ச்சி தொடங்கும் போது போட்டியாளர்கள் அறிமுகம் செய்யும் போது கமல்ஹாசன் தன்னை பற்றி போட்டியாளர்கள் பேசுவதை ஆற அமர கேட்டு அதற்குப் பிறகு தன்னுடைய நக்கல் கலந்த உள்குத்து கொடுப்பார். ஆனால் விஜய் சேதுபதி வழக்கம்போல தன்னிடம் பேசுபவர்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து, அவர்களிடம் இணக்கமாக பேசி அவரை காயப்படுத்தாமல் உரையாடி சில இடங்களில் அவர்களுடைய குறைகளை முகத்துக்கு நேராகவும் உடனுக்குடன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
போட்டியாளர்கள் மேடைக்கு வந்ததுமே அவர்களிடம் ஹாய் மட்டும் சொல்ல விட்டு அவர்களுடைய introduction வீடியோவை போட்டு விடுகிறார்கள். பிறகு உங்களை பற்றி சொல்லுங்கள் என்று விஜய் சேதுபதி கேட்டு, போட்டியாளர்களை அதிகமான நேரம் பேசவிடாமல் விஜய் சேதுபதியே பேசி இருக்கிறார்.
அவர் நான் ஒரு தொகுப்பாளர் என்பதை நிலை நிறுத்தி இருக்கிறார். நான் அன்பு காட்டும் வேளையில் அன்பு காட்டுவேன், தகுந்த சமயத்தில் நான் கண்டிப்பாக மாறி விடுவேன் ஜாக்கிரதை என்று போட்டியாளர்களுக்கு எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகப் போகிறது என்று சொன்னதுமே அதிகமாக அடிபட்ட பெயர்களில் ரஞ்சித் பெயரும் ஒன்று. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று பலர் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நேற்று அவரிடம் விஜய் சேதுபதி, நான் ஆரம்பத்தில் பார்த்த என்னுடைய நண்பர் ரஞ்சித் சமீபத்தில் சர்ச்சைகளில் அடிபடுபவர் இல்ல. இதில் உங்களுடைய நிஜ முகம் என்ன? என்று கேட்க.. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சித் நான் "விதை ஒன்று போட்டேன் அங்கு செடி வேறு வளர்ந்து விட்டது" என்று சமாளித்து இருந்தார்.
அதுபோல ரஞ்சித்தின் நண்பர்கள் விஜய் சேதுபதிக்கு வணக்கம் சொல்லிவிட்டு எங்கள் ஊரில் நாங்க சாப்பிட்டீங்களா என்று தான் முதலில் கேட்போம் என்று சம்பந்தமே இல்லாமல் கோவை ஊர் பெருமையை பேச, அதற்கு விஜய் சேதுபதி நாங்க மட்டும் வெளியே போங்கன்னா சொல்லுவோம்? எல்லா ஊர்லயும் சாப்பிட்டீங்களா என்று தான் பேசுவாங்க என்று விஜய் சேதுபதி டைமிங் சிக்ஸர் அடித்து இருக்கிறார்.
அதே இடத்தில் கமல்ஹாசன் இருந்திருந்தால் போட்டியாளர்களின் உறவினர்களின் முகம் கோணாதபடி கோயம்புத்தூர்காரர்களின் குணம் இதுதான் என்று பாராட்டி பேசி இருப்பார். ஆனால் விஜய் சேதுபதி ஊர் பெருமையாக இருந்தாலும் சரி, தன் பெருமையாக இருந்தாலும் சரி அது தேவையில்லை என்று நச்சென்று குட்டு கொடுத்திருக்கிறார்.
அதுபோல ரவீந்திரிடம் விஜய் சேதுபதி பேசிக் கொண்டிருக்கும்போது பொதுமக்கள் கைதட்டி கொண்டு இருந்தனர். இதற்கு முன்பு கமல்ஹாசன் சில வார்த்தைகளை பேசிவிட்டு பொதுமக்களை பார்க்கும்போது அவர்கள் கைதட்டுவார்கள். இது வாடிக்கையாக இருக்கும் அதுபோலவே என்று நினைத்து இந்த சீசன் பார்வையாளர்களும் வந்துவிட்டார்கள் போல. ஆனால் விஜய் சேதுபதி நீங்க இப்படி சம்பந்தமில்லாமல் கைதட்டி தான் பலரையும் கெடுத்து வச்சு இருக்கீங்க என்று, அவர்களையும் லெப்ட் ரைட் வாங்கியிருந்தார்.
அர்னாவ் தன்னுடைய சுய வீடியோவில் கூட நன்றாக பேசி இருந்தார். ஆனால் மேடையில் பேசும் போது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் என்னைப் போல திமிராக இருந்தால் நான் அவர்களிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் ஆம்பளையா இருந்துட்டு தோத்து போனா சரியா? என்று கேட்க அதற்கு விஜய் சேதுபதி வீரத்தில ஆம்பள பொம்பளன்னு என்ன பாகுபாடு என்று என்று நறுக்கென கேள்வி கேட்டதும், அதை சுதாகரித்துக் கொண்ட அர்னாவ் கதையை அப்படியே மாற்றி இருந்தார்.
கடைசியில் அர்னாவிடம் உங்களுக்கு ஏதாவது நல்லது நடக்க இருக்கிறது என்றாலும், உங்க வாயால் அதை கெடுத்து விடாதே என்று அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருந்தார். அதுபோல முத்துக்குமாரின் தமிழை ரசித்து கேட்டது அவருடைய அம்மாவை பாராட்டியதும் பலருடைய மனதை தொடும் வகையில் இருந்தது.
அதுபோல பாடகர் ஜெஃப்ரி தன்னுடைய சோகமான கதையை சொன்னதும் அவருக்கு வெற்றி பெற வாழ்த்து சொல்லி அனுப்பிய விஜய் சேதுபதி திரும்புகிற வழியில் ஜெப்ரி உன்னை நினைச்சு நானே கொஞ்சம் பீல் ஆகி விட்டேன் என்று நெகிழ்ச்சியோடு சொன்னதும் இதுவரை எந்த சீசனிலும் பார்க்காதது தான்.
இத்தனை தக்லைப் கொடுத்த விஜய் சேதுபதி ஆர்ஜே ஆர்த்தியின் கையில் போலியான பிக் பாஸ் கோப்பையை கொடுத்ததும் அவர் இது டம்மியா என்று கேட்டதும், டக்குனு முகம் சுருக்கிய விஜய் சேதுபதி நீங்க ரொம்ப படிச்சு இருக்கீங்க. ஆனா இப்படி பேசிட்டிங்க. இவங்க படிச்ச புத்தகத்தை யாரும் நீங்க படிக்காதீங்க என்று பார்வையாளர்களை பார்த்து சொன்னது நெருட வைக்கிறது.
நிகழ்ச்சியின் இறுதியில் கொடுக்கும் கோப்பை தான் நிஜமானது என்றால் நிகழ்ச்சி தொடங்கும் போது கையில் கொடுக்கும் கோப்பை போலியானது தானே? அதைப் பற்றி கேள்வி கேட்டதும் படித்த படிப்பை விஜய் சேதுபதி கிண்டல் செய்யாமல் இருந்திருக்கலாம்.
விஜய் சேதுபதியுடைய பேச்சு பலருக்கும் ஃபேவரைட் ஆக இருந்தாலும் ஆர்த்தியிடம் பேசியது போல இனிவரும் எபிசோடில் எந்த இடத்திலும் விஜய் சேதுபதி பேசிவிடாமல் கவனமாக கையாள வேண்டும்.












Click it and Unblock the Notifications