குலுங்கி குலுங்கி அழுத ஷாலினி டீச்சர்.. மாணவர்கள் சொன்னதுமே மலைத்த அமைச்சர்! முத்த மழையில் முண்டக்கை
திருவனந்தபுரம்: கேரள பள்ளி ஒன்றில், நடந்துள்ள சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி உள்ளது.. இது காண்போரையும் சேர்த்து நெகிழ செய்து வருகிறது.. என்ன நடந்தது பள்ளி மாணவர்களிடம்? யாரிந்த ஷாலினி டீச்சர்?
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, மொத்த மாநிலத்தையும் நிலைகுலைய வைத்துவிட்டது. கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன.

இந்த பேரிடரில் நூற்றுக்கணக்கான மக்களும் மண்ணோடு மண்ணாக உயிரிழந்தனர்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருக்கின்றனர்.
வாழ்வாதாரம்: இன்று இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. மிகப்பெரிய ஆபத்திலிருந்து இவர்கள் உயிர்பிழைத்துள்ளனர். எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க பல்வேறு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.. இளகிய மனம் படைத்தவர்கள், நாட்டின் நாலாபுறமிருந்தும் உதவிகளை வயநாட்டில் செய்து வருகிறார்கள்.
பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு தமிழகமும் விடாமல் உதவிக்கொண்டு வருகிறது.. அரசியல் பிரமுகர்கள் முதல் தனிநபர்கள் வரை வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பள்ளியில் ஒரு சம்பவம் நடந்து, பலரையும் கலங்கடித்து வருகிறது.
டிரான்ஸ்பர்: இந்த பகுதியில் டீச்சராக வேலை பார்த்து வந்தவர் ஷாலினி.. நிலச்சரிவு ஏற்படுவதற்கு 46 நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூன் 14ம் தேதி மீனங்காடி ஜிஎல்பி பள்ளிக்கு இவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
அவர் மாறுதலில் சென்றபோது, பள்ளிக்குழந்தைகளால் டீச்சரை பிரியவே முடியவில்லை.. இதனால், அன்றைய தினம், அனைத்து பள்ளிக்குழந்தைகளும், சக ஆசிரியர்களும் ஷாலினி டீச்சருக்கு கண் கலங்கி கண்ணீர் விட்டு பிரியா விடை தந்து அனுப்பி வைத்தார்கள்.. மழலைகளின் கண்ணீரில் நனைந்தபடியே அந்த பள்ளியை விட்டு மாறுதலாகி சென்றார் ஷாலினி டீச்சர்.
குழந்தைகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் நிலச்சரிவு ஏற்பட்டது.. இதில், குறிப்பிட்ட அந்த பள்ளியில் படித்த 11 குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்த குழந்தைகளை அடையாளம் காண்பதற்காக அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷாலினி டீச்சர்.
உடல்கள் சிதைந்து, உறுப்புகள் தொலைந்து சிதறிக்கிடந்த மாணவ குழந்தைகளின் சடலத்தை கண்டு, ஷாலினி டீச்சர் கதறி கதறி அழுதது இதயத்தையே உலுக்கிவிட்டது.
பள்ளி திறப்பு: நிலச்சரிவுக்கு பிறகு ஓரளவு, கடந்த 2ம் தேதி மேப்பாடியில் மறுபடியும் பள்ளி திறக்கப்பட்டது.. இந்த திறப்பு நிகழ்ச்சியில் கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி கலந்து கொண்டார்.. அங்கிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது சில குழந்தைகள் அமைச்சரிடம், நாங்கள் உங்களிடம் ஒன்று கேட்போம், அதை எங்களுக்காக நீங்கள் கண்டிப்பாக செய்து தர வேண்டும் என்றார்கள்.. அவர்கள் என்ன கேட்கப் போகிறார்கள் என்றுகூட தெரியாமல் அமைச்சர் சிவன் குட்டியும், சரி, என்ன கேட்டாலும் கட்டாயம் செய்கிறேன்.. என்ன வேண்டும், கேளுங்கள் என்றார்.
கோரிக்கை: அப்போது மாணவர்கள், "எங்கள் மீது அன்பையும், பாசத்தையும் பொழியும் ஷாலினி டீச்சரை மறுபடியும் இந்த பள்ளிக்கு டிரான்ஸ்பர் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்...
இப்படி ஒரு கோரிக்கையை குழந்தைகளிடமிருந்து எதிர்பார்க்காத அமைச்சர் திகைத்துப்போய்விட்டார்.. குழந்தைகளின் மனதில் டீச்சர் இந்த அளவுக்கு பதிந்து போயிருப்பதால், அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட அமைச்சரும், கட்டாயம் செய்வதாக உறுதி அளித்தார்... அதுமட்டுமல்லாமல், சிறப்பு உத்தரவு மூலம் ஷாலினியை மீண்டும் பழைய முண்டக்கை பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
உருக்கம்: மாறுதல் உத்தரவுடன் நேற்று முன்தினம் ஷாலினி டீச்சர், மறுபடியும் முண்டக்கை ஸ்கூலுக்கு பணியில் சேர்ந்தார்.. பள்ளிக்கு திரும்பி வந்தபோது, குழந்தைகள் வாசலிலேயே நின்று அவரை வரவேற்றன.. டீச்சரை பார்த்ததுமே, துள்ளி குதித்து, அவரை கட்டிப்பிடித்தும், கன்னத்தில் முத்தமிட்டும், கண்ணீர் விட்டும் ஷாலினியை வரவேற்றனர். ஏற்கனவே நிலச்சரிவில் குழந்தைகள் உயிரிழந்ததால் நிலைகுலைந்து போயிருந்த ஷாலினி டீச்சரும், இந்த பள்ளிக்குழந்தைகளின் அன்பை கண்டு, உணர்ச்சிவசப்பட்டு கதறி நின்றார்..!
இதுகுறித்து டீச்சர் ஷாலினி சொல்லும்போது, "முண்டக்கையில் இந்த குழந்தைகளுடன்தான் எப்போதுமே இருப்பேன்.. நாங்கள் ஒன்றாக பாடுவோம், டான்ஸ் ஆடுவோம், விளையாடுவோம்... நான் சில குழந்தைகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்று தந்துள்ளேன்.. இன்னும் 2 மாணவிகள் என்கிட்ட சைக்கிள் கற்று கொள்ள ஆசைப்பட்டார்கள்.. அந்த 2 மாணவிகளுமே நிலச்சரிவில் இறந்துவிட்டார்கள்..
கண்ணீர் நன்றி: மீண்டும் குழந்தைகளின் மன கஷ்டத்தை போக்குவதில் கவனம் செலுத்துவேன்... மாணவர்கள் மற்றும் பெற்றோர் என்னை மீண்டும் முண்டக்கை பள்ளிக்கு இடமாற்றம் செய்ய எடுத்த முயற்சிகளுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றி" என்று நெகிழ்ந்து கூறுகிறார் ஷாலினி டீச்சர்.
மாணவி: நிலச்சரிவில் பள்ளி குழந்தைகள் இறந்தபோது, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு ஷாலினி டீச்சர் பேட்டி தந்திருந்தார்.. அப்போது, நான் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன்.. ஒருநாள், உடற்கல்வி படிக்கும்போது, விளையாட்டு மைதானத்தின் அருகே ஒரு சைக்கிள் இருந்ததை மாணவர்கள் பார்த்தார்கள். அதில் ஒரு பெண் குழந்தை, சைக்கிளை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.. அவள் ஒரு மாற்றுத்திறனாளி.
நான் அந்த மாணவியிடம் சென்று, சைக்கிள் ஓட்ட ஆசையா இருக்கா? என்று கேட்டேன். அவளும் மெல்ல தலையாட்டினாள்.. மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்ததால், நான் அவளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்றேன்.. என் செல்லங்கள் மண்ணோடு போய்விட்டன.. ஆற்றோடு போய்விட்டன" அதற்கு மேல் பேச முடியாமல் திணறினார் ஷாலினி டீச்சர்.












Click it and Unblock the Notifications