கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு நிலையா.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் கேரள மக்கள்.. காலியாகும் பங்களாக்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மக்கள் பலர் படித்து முன்னேறி வெளிநாடுகளில் பெரிய வேலைகளில் சேர்ந்துவிடுகிறார்கள். அப்படி வெளிநாடுகளில் பலர் குடியேறிவிட்டதால், அவர்கள் இங்கு கட்டிவைத்துள்ள 100க்கணக்கான பங்களாக்கள் காலியாக இருக்கிறது. பல லட்சம் வீடுகள் கேரளாவில் காலியாக உள்ளதாக கேரள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலமான கேரளாவில் நன்கு படித்தவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறார்கள்.உலகம் முழுவதுமே டாக்டர்கள், என்ஜினியர்கள், நிர்வாகவியலாளர்கள், கணக்காளர்கள், கம்ப்யூட்டர் என்ஜினியர்கள், சமையலர்கள், செவிலியர்கள் என பல வேலைகளில் கேரளாவைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

கடந்த 50 வருடங்களாக கல்விக்காவும், வேலைக்காகவும் வெளிநாடு சென்றவர்கள் கேரளாவில் மிக அதிகம் ஆகும். துபாய், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஓமன், கத்தார் என உலகின் பல்வேறு நாடுகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மிக அதிகமாக செட்டில் ஆகிவிட்டார்கள்.
அப்படி வெளிநாடுகளில் செட்டில் ஆன பலர், நன்கு சம்பாதித்து தங்கள் சொந்த ஊரில் ஆடம்பரமாக பங்களாக்கள் கட்டிவைத்துள்ளார்கள் வயதான காலத்தில் சொந்த ஊரில் சொந்த வீட்டில் வாழ்க்கையை கழிக்க ஆசைப்படும் அவர்கள் அதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு பங்களாக்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அப்படி கட்டிவைத்த பல லட்சம் பங்களாக்கள் இப்போது குடியிருக்க ஆள் இல்லாமல் சும்மாகவே இருக்கிறது. குறிப்பாக கேரளாவின் கோட்டயம் மாவட்டம் கைப்புழா கிராமத்தில் கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பங்களாக்கள் தற்போது காலியாகவே இருப்பதாக தகல்கள் வெளியாகி உள்ளன.
கோட்டயம் கைப்புழா கிராமத்தில் பெரும்பாலானோர் கனயா அல்லது ஞான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளில் செட்டில் ஆவதையே விரும்புகிறார்கள். வயதான பெற்றோரையும் தங்களுடனேயே அழைத்து சென்றுவிடுகிறார்கள். அப்படி வர விரும்பாத பெற்றோரே கைப்புழா, கதுதுருத்தி, உழவூர், கரின்குண்ணம் உட்படபல பகுதிகளில் வசிக்கிறார்கள். இந்த பகுதிகளில் ஏராளமான வீடுகள் காலியாகவே உள்ளன. கேரளாவின் கைப்புழா கிராமத்தில் மட்டுமல்ல, இடுக்கி, பத்தினம் திட்டா, கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம் என கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளனவாம். ஒருகட்டத்தில் வயதான பெற்றோரும் இறந்துவிடுவதால், வீடுகளை பராமரிக்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் கேரளாவில் 11 லட்சத்து 89,144 வீடுகள் காலியாக இருப்பதாக கூறபப்டடது. நகர்ப்புறங்களில் 5 லட்சத்து 85,998 வீடுகளும் கிராமப்புறங்களில் 6 லட்சத்து 3,146 வீடுகளும் காலியாக இருந்ததாக கூறப்படுகிறது தற்போது கணக்கெடுப்பு நடத்தினால் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும் என்கிறார்கள்.
இதனிடையே கேரள அரசு காலியாக உள்ள பங்களாக்களுக்கு வரி விதிக்க திட்டமிட்டது. இதற்கு என்ஆர்ஐ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கேரள அரசு அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டது. கேரளாவில் பல கிராமங்களில் உள்ள வீடுகள் சொகுசு பங்களாக்களாக உள்ளன. வெளிநாடுகளில் குடியேறிய என்ஆர்ஐ.க்கள் பலர் இந்த பங்களாக்களை விற்க தயாராக இருக்கின்றனர். ஆனால், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்குதான் ஆட்கள் இல்லையாம்.

கடவுளின் தேசமான கேரளாவை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் போல், கேரளாவின் மண்ணின் மைந்தர்களும் வந்து செல்வதால், கேரளாவில் என்ஆர்ஐக்கள் அனுப்பும் பணம் மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ளது. என்ஆர்ஐக்களாக மட்டுமல்ல, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் கேரளாவைச் சேர்ந்த பலர் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்களுமே சுற்றுலா போல சொந்த ஊருக்கு வருடத்திற்கு சில முறையே வந்து செல்கிறார்கள். கடவுளின் தேசத்தில் பல பங்களாக்கள் காலியாகவே உள்ளன.












Click it and Unblock the Notifications