For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீட்டில் இருந்தபடி அலுவலக வேலை – அதற்காக எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? அ. குமரேசன்

Google Oneindia Tamil News

கொரோனா முதல் அலையின் சோகங்களில் ஒன்றாகப் பலர் வேலைகளை இழந்தார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு மறுபடியும் வேலை கிடைத்தது என்ற விவரங்கள் முழுமையாகக் கிடைப்பதற்குள் இரண்டாவது அலையின் சோகங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பொருளாதார நிலைமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றாலும், பொதுமுடக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது மேலும் வேலையிழப்புகளுக்கோ, மறுபடியும் புலம்பெயரும் நிலைமைகளுக்கோ இட்டுச்செல்லுமா என்ற கவலை கவ்வுகிறது.

இதனிடையே, முதல் அலையின்போது, பலருக்கு வேறொரு வாய்ப்பு அமைந்தது. அதுதான் வீட்டிலிருந்தே வேலை (வீ.வே. என்று சுருக்கமாகக் குறிப்பிடுவோம்) செய்வது. எதிர்காலத்தில் இது இயல்பான வேலைமுறையாகவே மாறக்கூடும், அதற்கு மக்கள் தயாராகிக்கொள்ள வேண்டியிருக்கும் என்ற ஊகங்களை தொழில்துறை சார்ந்தவர்களும் பொருளாதார வல்லுநர்களும் முன்வைத்திருக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கே கூட இப்போது இணையவழி வகுப்புகள்தான் மாற்று என்று வந்துள்ள நிலையில், பணிபுரிவோருக்கும் இதுவே தற்போதைய ஏற்பாடாக இருக்கிறது. பள்ளி வகுப்புகளில் ஆசிரியர் முகம் பார்த்து, சேக்காளிகளுடன் கைகோர்த்துக் கிடைக்கிற கல்வி அனுபவம் இணையத்தள வகுப்புகளில் கிடைக்குமா? அதே போல், நிர்வாகத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, சக ஊழியர்களோடு கலந்து பேசிப் பிரச்சினைகளைப் பகிர்வதன் மூலம் கிடைக்கிற வேலை அனுபவம் வீட்டிலிருந்து மடிக்கணினிகளைத் தட்டுவதால் கிடைக்குமா?

இரண்டு கேள்விகளுக்குமே, கிடைக்காது என்பதே பதில். ஆனாலும், வேலையே இல்லாமல் போவதை விட இது கேடில்லை என்று பல ஊழியர்கள் ஏற்றிருக்கிறார்கள். குடும்பத்தினரோடு அதிக நேரம் இருக்க முடிகிறது, அன்பு வளர்கிறது, பணி நேர நெருக்கடியின்றி வேலை செய்ய முடிகிறது, வேலையின் தன்மையை வீட்டில் உள்ளவர்களும் புரிந்துகொள்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனாலும் அது, வேறு வழியின்றி வீட்டிலேயே வேலைகளைச் செய்வதற்கான சமாதானமாகத்தான் இருக்கிறதேயல்லாமல், உண்மையிலேயே அந்த ஊழியர்கள் அப்படித்தான் கருதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை - எந்த நாடாக இருந்தாலும்.

Writer Kumaresan Article on Work From Home Culture

வேலையை வீட்டிலிருந்தே செய்ய வேண்டியுள்ளவர்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு - வீட்டு வேலைகளும் சேர்ந்துகொள்கின்றன. வேலைக்குச் செல்வது பொருளாதாரத்திற்காக மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தொடர்பு. அந்தத் தொடர்பும் கூட இப்போது தொலைபேசி அல்லது இணையத்தள சந்திப்புக்கென்றே உள்ள நிறுவனங்களின் செயலி வழியாக மட்டுமே என்று சுருங்கிவிட்டது. ஜூம், டீம் லிங்க், கூகுள் மீட், ஸ்ட்ரீம் யார்ட், ஸ்கைப் இதுவெல்லாம் இன்று ஆகப்பெரும்பாலோருக்குத் தெரிந்த சங்கதிகளாகிவிட்டன. மியூட், அன்மியூட், வீடியோ ஆன், வீடியோ ஆஃப், நெட்வொர்க் பிராப்ளம், வெளியே போய்விட்டு மறுபடி உள்ளே வருவது... இவை அன்றாடச் சொல்லாடல்களாகிவிட்டன.

இத்தகைய பின்னணியில், "வீட்டிலிருந்தே வேலை செய்வதென்றால் அதிக நேரம் வேலை செய்வதென்றே பொருளாகும்," என்கிறது ஒரு ஆய்வறிக்கை. பிரிட்டனைச் சேர்ந்த 'தேசிய புள்ளிவிவர அலுவலகம்' (ஓஎன்எஸ்) என்ற ஆய்வு நிறுவனம் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த பத்தாண்டு காலத் தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பணி நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்து அந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. 'பிசினெஸ் இன்சைடர்' (இந்தியா) இணையத்தளத்தில் செய்தியாக வந்துள்ள அந்த அறிக்கை காட்டுகிற சில காட்சிகள் வீ.வே. பற்றிய மாற்றுச் சிந்தனைகளை ஏற்படுத்துகின்றன.

போனஸ் வெட்டு!

இதே கால கட்டத்தில் ஒருபோதும் வீட்டில் வேலை செய்யாதவர்களை விட, வீட்டில் இருந்தபடி வேலை செய்கிறவர்களுக்கு ஊதியத்துடன் போனஸ் கிடைப்பது 38 சதவீதம் குறைந்துபோகக்கூடிய வாய்ப்பிருக்கிறது. பணித்தலத்தில் கண்ணில் படுகிறவர்களாக இல்லை என்பதால், பதவி உயர்வு, போனஸ் போன்றவற்றில் இவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படக்கூடும். ஆனால், அதற்கு ஈடாக, போக்குவரத்து அலைச்சல், செலவு ஆகியவை குறைகின்றன, வீட்டில் தங்கள் விருப்பப்படி வேலையைச் செய்ய முடியும் என்ற ஆதாயங்களுக்காக இவர்கள் போனஸ் உள்ளிட்ட வாய்ப்புகளை விட்டுக்கொடுத்திருக்கக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது.

இந்தப் போக்கு பெண்களைத்தான் மிகுதியும் பாதிக்கும். குழந்தைகளைக் கவனிக்கிற வாய்ப்பு அமைகிறது என்று அவர்கள் வீட்டில் வேலை செய்வதைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்று சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். "இறுதியாகப் பார்த்தால், பெண்கள் அலுவலகங்களில் மிகக்குறைவான நேரமே இருப்பார்கள். அலுவலகத்தில் வேலை செய்கிறவர்களோடு ஒப்பிடுகையில் (நிர்வாகத்தின்) கண்களில் மிகக்குறைவாகவே தென்படுவார்கள். இதனால் பதவி உயர்வு போன்ற நடைமுறைகளில் பெரிதும் ஒதுக்கப்படுவார்கள்," என்கிறார் பெண் தொழிலாளர்களுக்கான உளவியல் ஆலோசகர் டாக்டர் லூசி டேவீ.

ஆய்வறிக்கை இன்னொரு காட்சியைக் காட்டாமலே புரியவைக்கிறது பாருங்கள் - அதாவது, பிரிட்டனேயானாலும் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளை கணவன்மார்கள் பெரிய அளவுக்குப் பகிர்ந்துகொள்ளவில்லை!

உடல் நலக்குறைவு ஏற்பட்டால்

உடல் நலக்குறைவு ஏற்பட்டால் விடுப்பு எடுத்துக்கொள்வது ஒரு உரிமை. ஆனால், அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள் இவ்வாறு விடுப்பு எடுப்பது சென்ற ஆண்டு சராசரியாக 2.2 சதவீதமாக இருந்தது. வீட்டிலிருந்தே வேலை செய்கிறவர்களிடையே இது 0.9 சதவீதம்தான் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்குக் காரணம், வீட்டிலேயே இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படுகிற வாய்ப்பு குறைவாக இருக்கலாம், அல்லது உடல்நலக்குறைவுடனேயே, அதைப் பொறுத்துக்கொண்டு வேலை செய்ய அவர்கள் விரும்புவதாக இருக்கலாம் என்கிறது ஓன்எஸ்.

ஆயினும், பலர் தங்கள் வீட்டிலேயே அலுவலக அறை போல அமைத்துக்கொண்டு பணிபுரிவதால், எதிர்காலத்தில் தசை, தசைநார், எலும்பு, நரம்பு வலிகள் காரணமாக விடுப்புக் கோருகிற நிலை ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். "பரவாயில்லை, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு வேலையை முடி" என்றும் சில நிர்வாகங்கள் சொல்லக்கூடும்தானே?

ஊதியமில்லா 'ஓவர்டைம்'

கடந்த ஆண்டில் முழுமையாகவோ, அவ்வப்போதோ வீட்டிலிருந்தே வேலை செய்தவர்கள் சராசரியாக ஒரு வாரத்தில் 6 மணி நேரம் கூடுதல் நேரம் உழைத்திருக்கிறார்கள் - அதற்கான ஊதியம் இல்லாமலே. ஒருபோதும் வீட்டிலிருந்து வேலை செய்யாதவர்களும் இவ்வாறு ஊதியமின்றி கூடுதல் நேரம் உழைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு உழைத்தது வாரத்தில் சராசரியாக 3.6 மணி நேரம்தான்.

சும்மாவே பல நிறுவனங்களுக்கு ஓவர்டைம் ஊதியம் என்றாலே கசப்புதான். இதற்காகவே குறைந்தபட்ச வேலை நேரத்தை அதிகபட்சமாக உயர்த்திவைத்து வேலை வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் மகிழ தொழிலாளர் சட்டங்களை வளைக்கிற அதிகார பீடத்தினரும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வீ.வே. ஒரு வேட்டைதான் போல.

மாலைப் பொழுது மயக்காது

வீ.வே. நடைமுறை கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே இருந்து வருகிறது. சென்ற ஆண்டு ஏப்ரலில் பெருந்தொற்றின் பேயாட்டம் தொடங்கியபோது, வீ.வே. ஊழியர்கள், கிட்டத்தட்ட அலுவலக ஊழியர்களைப் போலவே மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடித்துக்கொள்கிற நிலை இருந்தது. பலருக்கு இது புதிய ஏற்பாடாக வந்ததும் இதற்கொரு காரணமாக இருந்திருக்கக்கூடும். ஆனால், செப்டம்பர் மாதத்தில் அவர்களில் பெரும்பாலோர் மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணி வரையில் கூட வேலை செய்வது வழக்கமாகிவிட்டிருந்தது என்று ஓஎன்எஸ் அறிக்கை கூறுகிறது.

"முன்பு இந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சென்று திரும்புவதில் செலவான பயண நேரத்தை இப்போது வீட்டிலேயே வேலை செய்வதில் செலவிடுகிறார்கள்," என்கிறது அறிக்கை. பயண நேரம் என்பது சுற்றிலும் பார்த்து ரசிக்கிற, ரயிலிலோ பஸ்சிலோ பலரைச் சந்தித்து உரையாடுகிற, ஏதாவது படிக்கிற நேரமாயிற்றே! அது தனி மனித உளவியலாகவும், சமூக உறவாகவும் எவ்வளவு முக்கியமான பங்களிப்பு! அதையெல்லாம் துறந்துவிட்டல்லவா வீட்டுக்குள் கணினித் திரையை மட்டும் அந்த நேரத்தில் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதாகிறது!

மற்ற நாடுகளிலும் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கிறதா என்ற தகவல் உடனடியாகக் கிடைக்கவில்லை. இந்தியாவில் இதே போன்ற ஆய்வு நடத்தப்பட்டால் மேலும் பல வீ.வே. அவலங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம்.

கொரோனாவுக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கிற உலகப் போரில் மனித குலம் வென்று காட்டும் - பெருந்தொற்றால் ஏற்படும் துயரங்களுக்கு மட்டுமல்லாமல், அதன் பக்கவிளைவாகிய இப்படிப்பட்ட பரிதாபங்களுக்கும் முடிவு கட்டும்.

English summary
Here is an Article writen by Writer Kumaresan Article on Work From Home Culture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X