For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனநோய் இருட்டில் தள்ளிவிடும் ‘வாயுவிளக்கு’ (Gaslighting) - அ. குமரேசன்

Google Oneindia Tamil News

இப்படியான நிலைமை உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். ஏன், நீங்களே கூட இப்படியான நிலைமையை மற்றவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கக்கூடும். உங்களுடைய பிரச்சினை பற்றிப் பேசுகிற ஒருவர், உண்மை நிலவரங்களைச் சொல்லிக்கொண்டே வருவார். ஒரு கட்டத்தில், மிகைப்படுத்திச் சொல்லத் தொடங்குவார். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வார். நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வார். படிப்படியாக உங்களுக்கே, நீங்கள் அதுவரையில் அறிந்துவைத்திருந்த தகவல்களின் உண்மைத்தன்மை மீது சந்தேகம் ஏற்படும். எது உண்மை, எது மிகை என்ற குழப்பம் ஏற்படும். இந்தச் சந்தேகமும் குழப்பமும் உளவியல் சிக்கல்களைக் கூட ஏற்படுத்திவிடும்.

உளவியலாளர்கள் இதை "கேஸ்லைட்டிங்' என்று குறிப்பிடுகிறார்கள். "கேஸ்லைட்" என்ற பெயர்ச்சொல்லுக்கு "எரிவாயு விளக்கு" என்றுதான் பொருள். அதை "கேஸ்லைட்டிங்" என்று உரிச்சொல்லாகக் குறிப்பிடுகிறபோது மிகைப்படுத்துதல் அல்லது உண்மை நிலைமைகளோடு கற்பனைக் கதைகளைக் கலந்துகொடுத்தல் என்று பொருள்படுகிறது. சிலர் அளவில்லாமல் கதைவிடுவதைப் பார்த்து, "எல்லாம் வெறும் கேஸ்" என்று விமர்சிப்போம் அல்லவா?

Writer Kumaresans Article on Gaslighting and Society

1938ல் 'கேஸ்லைட்' என்றொரு நாடகத்தை எழுதினார் நாடகவியலாளர் பேட்ரிக் ஹாமில்டன். லண்டன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட, பின்னாளில் இரண்டு திரைப்படங்களாகவும் வந்த அந்தக் குற்றவியல் கதை சார்ந்த நாடகத்தில், ஒரு கணவன் தனது குற்றங்களை மறைப்பதற்காகவும் மனைவியின் சொத்துகளைத் திருடுவதற்காகவும் அவளிடம் உண்மைகளையும் பொய்களையும் கலந்து பேசுவான். அவளுடைய மனநிலை சரியில்லை என்று அவளையே நம்ப வைப்பான். அந்த நாடகத்திலிருந்தே "கேஸ்லைட்டிங்" என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது என்று கூறப்படுகிறது.

யாரைக் குறிவைத்து இவ்வாறு வாயு விளக்கு எரியவிடப்படுகிறதோ அவருடைய மனநலம் உடனடியாகப் பாதிக்கப்பட்டுவிடாது. படிப்படியாக இது நிகழும். தன்னுள் புனைவுகள் புகுத்தப்பட்டுள்ளன என்று அவர் உணர்கிறபோது, அவற்றிலிருந்து மீள முடியாத அளவுக்கு அவர் நிலை குலைந்திருப்பார், இவ்வாறு தன்னைப் புளுகுகளுக்குள் மூழ்கடித்தவரையே முற்றிலுமாக நம்பிச் சார்ந்திருக்க வேண்டியவராகிவிடுவார்.

"உனக்கு என்ன பிரச்சினை என்றால்..."

"உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. மனக்குழப்பத்தில் இருக்கிறாய் அவ்வளவுதான். நடக்காததையெல்லாம் நடந்ததாக நினைத்துக் குழம்பிப்போயிருக்கிறாய். உன்னோடு நான் இருக்கிறேன். விரைவில் நீ நலமடைந்துவிடுவாய்," என்பதாக இந்த கேஸ்லைட்டர்களின் பேச்சுகள் இருக்கும். இப்படிச் சொல்லிச் சொல்லி, அவர்களால் குறிவைக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சிகளை நடக்காதவையாகவும், நடக்காதவற்றை நடந்த நிகழ்ச்சிகளாகவும் நம்பத் தொடங்கிவிடுவார்கள். உண்மைகள் தெரியவருகிறபோது அல்லது உடனிருக்கிற மற்றவர்கள் உண்மைகளைச் சுட்டிக்காட்டுகிறபோது சிலர் தெளிவடைவார்கள், சிலர் மேலும் குழப்பத்தில் மூழ்கி மனநோயாளியாகவே கூட மாறிவிடுவார்கள்.

நடக்காததை நடந்ததாக இட்டுக்கட்டுகிறவர்களில் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நிலைமை மோசமாக இருக்கிறது என்றோ, பெரும் நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவோ நம்ப வைக்க முயல்வார்கள். நாம் நம்பும்படியான நிகழ்வுகளை ஒன்றோடொன்று முடிச்சுப்போட்டு, நம் பரிவையும் பணத்தையும் பெற்றுக்கொள்வார்கள். சிறிய தொகைகள் வெறும் உதவியாகப் போய்விடும். அதுவே பெருந்தொகையாக இருக்கிறபோது, மீட்க முடியாத இழப்பாகி ஏமாந்து நிற்போம். ஏமாந்ததை நாம் புரிந்துகொண்டுவிட்டோம் என்பதைக் கண்டுபிடிக்கிற அந்த மிகையர்கள் வேறு ஏமாளிகளைக் குறிவைத்துப் போய்விடுவார்கள்.

குட்மென் பிராஜெக்ட்

2009ம் ஆண்டில், 'குட்மென் பிராஜெக்ட்' என்றொரு பன்னாட்டுச் செயல்பாட்டுக் களம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் சந்திப்புக் கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு தங்களுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். மின்னஞ்சல் மூலமாகவும் பதிவு செய்யலாம். மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் இது உதவுகிறது. களத்தில் எழுதிவந்திருப்பவரான பேஜட் நோர்ட்டன் என்பவர், நான்கு மட்டங்களில் கேஸ்லைட்டிங் நடைபெறுகிறது என்று சொல்கிறார். "மிகைப்படுத்திப் புனைகிறவரின் தன்மை, அவரால் குறிவைக்கப்பட்டவருக்கு ஏற்படும் பாதிப்பின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இந்த நான்கு மட்டங்களும் அமையும்," என்கிறார்.

முதல் வகையைச் சேர்ந்தவர், தனது கேஸ்லைட்டிங் பழக்கத்தைத் தானே உணராதவராக இருப்பார். கச்சிதமாகச் சொல்வதென்றால், தனது புனைவுகளைத் தானே நம்புகிறவராகக்கூட இருப்பார். யாராவது சுட்டிக்காட்டுகிறபோது அல்லது தானே உணர்கிறபோது, தனது மிகைப்பேச்சுக்கு மற்றவர்கள் மீது, குறிப்பாக யாரிடம் கதையளந்தாரோ அவர்கள் மீது பழிபோடுவார். "ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தா நான் இப்படி மாறியிருக்க மாட்டேனே," என்று சொல்லிவிட்டுத் தனது புனைவுலகத்திற்குள் புகுந்துகொள்வார்.

இரண்டாவது வகையினர், தங்களது பேச்சில் மிகையான புனைவுகள் ஊடுருவுவதை உணர்வார்கள். ஆனால், திருத்திக்கொண்டு உண்மையை ஒப்புக்கொள்வதற்கு மாறாக, கேட்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கவலைப்படாமல், மேலும் மேலும் கதைகளைக் கட்டுவார்கள், வார்த்தைகளைக் கொட்டுவார்கள்.

மூன்றாவது வகையினருக்கு மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்காது. ஆனால், உரையாடலில் அல்லது வாக்குவாதத்தில் தானே வெற்றிபெற வேண்டும் என்ற தற்கௌரவம் (ஈகோ) இருக்கும். "நான் உன்னை நம்ப வைக்கிறதுக்காக இதையெல்லாம் சொல்லலை. உனக்குப் புரிய வைக்கணும்கிறதுக்காகத்தான் சொல்றேன்," என்ற விளக்கங்களைத் துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.

நான்காவது வகையினர்தான் மிக ஆபத்தானவர்கள். அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே, ஏமாற்றுகிறோம் என்று புரிந்தே, எதிராளிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்ந்தே புனைவு வேலைகளில் இறங்குகிறவர்கள் அவர்கள். அப்பட்டமாகப் பொய் பேசுவார்கள், கேட்பவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்துவார்கள், கூச்சமே இல்லாமல் அவர்களைக் குழப்புவார்கள், அவர்களுக்கு எதிரானவர்களாக மற்றவர்களையும் திரட்டுவார்கள்.

சிதறடிக்கப்படும் தன்னம்பிக்கை

தன்னை நம்புகிறவர்களிடம் பாலியல் வன்மம் உள்ளிட்ட அத்துமீறல்களைச் செய்கிறவர்கள், பின்னர் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று சாதிக்கிறவர்கள், இரையாகச் சிக்குகிறவர்களுக்குத் தங்களது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர்களையே நினைக்க வைக்கிற வல்லுநர்கள், தங்களுடைய நினைவுகள், முடிவுகள், உண்மை அனுபவங்கள் பற்றிய சந்தேகங்களுக்குள் தள்ளிவிடுகிற கில்லாடிகள், உங்களுடைய புரிதல்கள் தவறானவை என்று கருதவைத்துத் தன்னம்பிக்கையைச் சிதறடிப்பவர்கள், உங்களையே குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறவர்கள் என்று வேறு பல வாயுவிளக்குப் பேர்வழிகளும் இருக்கிறார்கள். "தங்களுடைய கருத்தைத் திட்டவட்டமாக முன்வைக்க முடியாதவர்களும், தங்களுடைய சொற்களில் தாங்களே உறுதியாக நிற்க முடியாதவர்களும் இதை ஒரு கருவியாகக் கையாளுகிறார்கள்," என்கிறார் உளவியல் மருத்துவர் ஷானோன் தாமஸ். 'ஹீலிங் ஃபிரம் ஹிடன் அப்யூஸ்' (மறைவான அத்துமீறலிலிருந்து நலம் பெறுதல்) என்ற புத்தகத்தை எழுதியிருப்பவரான அவர், "குழப்பங்களை ஏற்படுத்தும் உத்திகளை அவர்கள் கையாளுகிறார்கள். அதுவே அவர்களது குணநலன் உறுதியற்றது என்பதற்குச் சான்றுதான்," எனக் கூறுகிறார்.

"உளவியல் அத்துமீறலைச் செய்கிறவர், தன்னால் குறிவைக்கப்பட்டவர்களுக்கு அவர்களது மதிப்பிடும் திறன் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறார். இதனால் அவர்கள் அந்த அத்துமீறல்களை ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள், தொடர்புகளைத் துண்டிக்காமல் தொடர்கிறார்கள்," என்று கூறுகிறார் உளவியல் சிகிச்சையாளரும் எழுத்தாளருமான பெவர்லி எங்கெல். 'தி எமோஷனல்லி அப்யூசிவ் ரிலேஷன்ஷிப்' (உணர்ச்சிப்பூர்வ அத்துமீறல் உறவு) என்ற புத்தகத்தை எழுதியவரான அவர், "தங்களுடைய மோசமான நடத்தைகளுக்குப் பொறுப்பேற்பதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக கேஸ்லைட்டிங் கையாளப்படுகிறது. விருந்து நிகழ்ச்சிக்குப் போனால் நீ மற்றவர்களுக்குக் கவர்ச்சி வலை வீசுவதையும், எனக்கு விசுவாசமின்றி நடந்துகொள்வதையுன் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றெல்லாம் முந்திக்கொண்டு சொல்வார்கள் - அது உண்மையில் அவர்கள் கவர்ச்சி வலை வீசுவதையும் விசுவாசமின்றி இருப்பதையும் மூடிமறைக்கிற தந்திரமே," என்கிறார்.

"நீ சொல்வது போல எதுவுமே நடக்கவில்லை," "உன்னை அவமானப்படுத்துறதுக்காக அப்படி நான் பேசலை, சும்மா ஜோக்காகத்தான் சொன்னேன், அங்கே இருந்த எல்லாருக்குமே இது தெரியும்," "தேவையில்லாததையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாய்," "நீ இப்படிப் பேசுறது என்னை எப்படிக் காயப்படுத்துது தெரியுமா," "உன்னை நான் அவமானப்படுத்திட்டதா நினைக்கிற, அப்படி நீ நினைக்கிறதை நினைச்சு நான் வருத்தப்படுறேன்," ....இவை மிகையர்கள் அடிக்கடிப் பயன்படுத்துகிற பதங்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சமூகத்திலும்...

கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்கிறபோது, இந்த கேஸ்லைட்டிங் தனி மனிதர்கள் தொடர்பானது மட்டுமல்ல, சமூக அளவிலேயேயும் தாக்கம் செலுத்துவது புரிய வருகிறது. ஆன்மீகப் பீடங்களில் வீற்றிருக்கிற, பல மதங்களையும் சார்ந்த குருமார்களில் பலர், தங்களின் விசுவாசிகளுடைய தன்னம்பிக்கையைத் தகர்த்துதான் தங்களுடைய படல்களுக்கு உள்ளேயே தக்கவைத்துக்கொள்கிறார்கள். "உன்னையே நீ அறிவாய்" என்பதாக நிகழ்த்தப்படும் பல உரைகள் உண்மையில் யாரும் தன்னைத்தானே அறிவதற்கு இட்டுச்செல்வதில்லை, அவ்வாறு அறிவதற்குத் தடையாக விசுவாச வேலிக்குள் அடைத்துவைக்கிற திருவினையைத்தான் செய்கின்றன. அரசியல் களத்திலும் கூட இது நடக்கிறது.

மேலும் மேலும் சிந்தித்தால் - அறிவியல்பூர்வமாக அரசியல் வரலாறுகளையும், சமூக நிலவரங்களையும், வாழ்க்கை உண்மைகளையும் தேடித் தெரிந்துகொள்வதற்குத் தூண்டாமல், தலைவர்களின் பின்னால் அடியொற்றிச் சென்றால் போதும் என்ற மனநிலையை வளர்ப்பது, சாதிப்பெருமையைக் கிளறிவிட்டுப் பாகுபாடுகளை விசிறிவிட்டுக்கொண்டே இருப்பது, இயற்கையின் அடிப்படையிலும் கலாச்சார மரபாகவும் ஆணுக்குப் பெண் அடங்கியிருக்க வேண்டியவள்தான் என்று போதித்துக்கொண்டே இருப்பது... இவையெல்லாமும் கூட வாயு எரிப்பு வேலைகள்தானோ என்று உங்களுக்கும் தோன்றக்கூடும்.

கேஸ்லைட்டிங் பள்ளத்தில் விழுந்துவிட்டவர்கள் மேலே ஏறி வருவது எப்படி? முதலில், நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்ற மிதப்பிலிருந்து விடுபட்டு, நம்மை கேஸ்லைட்டிங் செய்ய அனுமதித்து வந்திருக்கிறோம் என்ற விழிப்புணர்வுக்கு வரவேண்டும். அது நம்மை அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தூண்டும். தொடர்ந்து கேஸ்லைட்டுகளோடு வருகிறவரிடம், "உன் வாயு வேலையைக் கண்டுபிடித்துவிட்டேன், இனிமேல் அதற்கு இரையாக மாட்டேன்," என்று முகத்துக்கு நேராகச் சொல்ல வேண்டும். அது அவரை மாற்றுகிறதோ இல்லையோ, வேறு இடத்திற்கு மாற வைக்கும். குறுகிய வட்டத்தில் சுருங்கிக்கொள்ளாமல் நட்பு வட்டாரத்தை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும், அது உடுக்கை இழந்தவர் கையாகச் சரியான வழிகாட்டல்களும் அன்பான உதவிகளும் கிடைக்கச் செய்யும். வாயுவிளக்கு வெளிச்சம் அடங்கி, சூரியச் சுடர் ஒளி ஓங்கும்.

English summary
Here is an article on Gaslighting and Society has written by Writer A.Kumaresan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X