For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெல்லப்போவது சாதிப் பொறியியலா, சமூகநீதி அறிவியலா? அ. குமரேசன்

Google Oneindia Tamil News

அரசியல் / சமூக அக்கறையாளர்களிடையே தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு சிந்தனையை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கேயும் ஜனநாயகத்தை சாதிநாயகம் ஆதிக்கம் செலுத்துகிற நிலைமை ஏற்படுமோ என்ற கவலைதான் அது. அந்தந்தப் பிரிவுகளின் முன்னேற்றத்திற்கு உதவும் என்ற எண்ணத்தோடு, அல்லது அவரவர் சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் பேரம் நடத்த முடியும் என்ற கணக்கோடு சாதிய அரசியல் கால் பரப்புவதை வரவேற்கிற சிந்தனையும் இருக்கிறது.

தேர்தலில் சாதியின் தாக்கம் பற்றிய ஒரு விவாதம் அண்மையில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் "18+" நிகழ்ச்சியில் நடைபெற்றது. பங்கேற்ற இளையதலைமுறையினர் தங்களின் வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அரசியலைக் கவனிப்பதிலும் மதிப்பிடுவதிலும் குறைந்தவர்கள் அல்ல என்று காட்டினார்கள். வருங்கால அரசியலை வகுக்கவிருக்கிறவர்களின் பிரதிநிதிகளாக நம்பிக்கையும் அளித்தார்கள். ஏனெனில், சாதி தீர்மானிக்கிறது, தீர்மானிக்கவில்லை என்று வாதிட்ட இரு தரப்பினருமே, அரசியலில் சாதியின் கை ஓங்கிவிடக்கூடாது என்ற அக்கறையை வெளிப்படுத்தினார்கள்.

விவாதத்தின் இறுதியில் கருத்துக் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், "இந்தியாவின் எந்தத் துறையையும் விட்டுவைக்காத சாதி தமிழகத்தின் தேர்தல் அரசியலிலும் ஊடுருவியிருப்பதை மறுக்கவியலாது. ஆயினும் இங்கே தாக்கம் செலுத்துவது சாதி அரசியல் அல்ல, சமூகநீதி அரசியல்தான்," என்றார். தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன், சாதிகளுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்றாலும் அதுதான் தீர்மானிக்கிறது என்று சொல்லிவிட முடியாது என்றே குறிப்பிட்டார்.

சாதியை அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கிறவர்கள், சாதிக்காக அரசியலைப் பயன்படுத்த முயல்கிறவர்கள் ஆகிய இரு தரப்பாரும் அந்த முயற்சியைக் கைவிடப்போவதில்லை. ஆகவே, இன்று ஊடுருவியிருக்கிற சாதியின் வயிற்றுக்குள் தமிழக அரசியல் புதைந்துவிடக்கூடாது என்ற பதைப்புள்ள எல்லோருமே விவாதித்தாக வேண்டிய பொருள் இது.

Writer Kumaresans Article on TN Assembly Election

"சாதியாவதேதடா" என்று கேட்ட, அழுத்தும் சாதிக் கோபுர மேலடுக்குகளை உடைக்கப் புறப்பட்ட, ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான இடத்தை நிறுவக் கரமுயர்த்திய மகத்தான மண் தமிழகம். ஆயினும் வரலாற்றின் முந்தைய பக்கங்களில் புளகாங்கிதம் அடைந்து, தற்போதைய பக்கங்களைக் காணாமல் விட்டுவிடக்கூடாது. சாதியாகத் திரட்டி ஆதரவுத் தளமாக மாற்றுகிற உத்திகள் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, காந்திய இயக்கங்களின் வழி வந்த மண்ணில் எடுபடப்போவதில்லை என்று கருதிக்கொண்டு வேறு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. உலகில் தோல்விகளின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால், மெய்யான கள நிலைகளைக் கணிக்கத் தவறியது நிச்சயமாக ஒரு காரணமாக இருக்கும்.

குடவோலைக் காலத்திலேயே

தமிழ் மண்ணின் வரலாற்றில் தேர்தல் அரசியலில் சாதி புகுத்தப்பட்டது ஒன்றும் புதிதல்ல. ஜனநாயகத் தேர்தலின் முன்னோடி என்று கூறிக்கொள்கிறோமே, அந்தக் குடவோலை முறை ஒப்பீட்டளவில் பெருமைக்குரியதான் என்றாலும், ஊரின் குடிமக்கள் அனைவரும் வந்து குடத்தில் ஓலைகளைப் போட்டுவிட முடியாது. நிலக்கிழார்கள் உள்ளிட்ட உயரடுக்கினர் மட்டுமே அதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியின் பிற்காலத்தில் கொண்டுவரப்பட்ட மாகாண அரசாங்கங்களுக்கான தேர்தலில் வேட்பாளர்கள் பலரும், முக்கியமாக அன்றைய தேசிய இயக்கமான காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்டவர்கள், அவர்களுடைய வட்டாரங்களில் அவர்களுடைய சாதிகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவைத் திரட்டுகிற வேலைகளைச் செய்தார்கள். விடுதலைப் போராட்டத்தில் அனைத்துப் பிரிவு மக்களையும் களவீரர்களாகத் திரட்டுவதில் வெற்றி பெற்ற இயக்கம், தேர்தல் போராட்டதில் இந்த உத்தியைக் கடைப்பிடித்தது ஒரு கொள்கைத் தோல்விதான். நில உடைமையாளர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் சாதிய உயரடுக்குப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில், அவர்களுடைய நிலங்களில் வேலை செய்து பிழைக்க வேண்டியிருந்த அடித்தட்டு மக்கள், அந்தப் பெரிய மனிதர்கள் கைகாட்டுகிற வேட்பாளர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். சுதந்திர இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களிலும் இது தொடர்ந்தது. நிலவுடைமையாளர்களின் விருப்பத்தை மீறி எதிர் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்கள் தாக்கப்பட்ட காட்சிகளும் உண்டு.

சித்தாந்த எதிர்ப்பு மனநிலை

தேர்தலில் சாதி நுழைவு பற்றிக் கருத்துக்கூறுகிற பலர், திராவிடக் கட்சிகள்தான் அதற்குக் காரணம் என்று சித்தரிக்கிறார்கள். அதற்கு முன் உயர்சாதி எனப்பட்ட பிரிவினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதைக் கருத்தில் கொள்ளாமல், அதற்கு எதிராகப் புறப்பட்ட இயக்கம் இயல்பாக வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களைக் களமிறக்கியதை மட்டும் சாதி அரசியல் என்ற தலைப்புக்குள் கொண்டுவருவதை என்னவென்பது? இப்படிச் சித்தரிக்கிறவர்களில் ஒரு பகுதியினர் சரியான புரிதலின்றிச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அவ்வாறு சித்தரிப்பதில் இருப்பது சாதியத்திற்கு எதிரான திராவிட சித்தாந்த எதிர்ப்பு மனநிலையில் இருந்துதான். தமிழகத்தில் சமூகநீதி அரசியல் வலுவாக வேரூன்றியதில், அதற்கான ஒரு வாசலாக இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதில், திராவிட இயக்க ஆட்சியதிகார வாய்ப்புக்குப் பெரும் பங்கு இருக்கிறது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வழி செய்த சட்டம், அதிமுக ஆட்சியின் 69சதவீத இட ஒதுக்கீடு முதலிய நேரடி நடவடிக்கைகள் மட்டுமல்லாது, பேருந்துப் போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்டது போன்ற பின்புலச் செயல்பாடுகளால் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக அசைவுகள் முக்கியமானவை. அவை சாதி வேலிகளைத் தாண்டுவதற்கும் இட்டுவந்திருக்கின்றன. பின்னர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகிற வலிமை உருவான பிறகு, ஒட்டுமொத்த சாதியக் கட்டமைப்பிற்கு எதிரான சமுதாய இயக்கத்திற்கு வலிமை சேர்க்கிற நிகழ்ச்சிநிரல் பின்னுக்குப் போனது விமர்சனத்திற்கு உரியது மட்டுமல்ல, விசனத்திற்கும் உரியது.

அன்று வலுவாகத் திகழ்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரையில், சாதி வரப்புகளைத் தாண்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றார்கள். அவர்களுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுகிறவரின் பண பலம் ஒரு தகுதியே அல்ல, சாதிப் பின்னணியும் பரிசீலனைக்குரியதல்ல. இயக்கத்தில் எந்த அளவுக்கு ஈடுபட்டு, மக்களுக்காகப் பாடுபடுகிறார்கள் என்பதே தகுதி. தேர்தல் வெற்றிக்காக சாதியைப் பயன்படுத்திக்கொண்டதில்லை. அதே வேளையில், சாதிய மெய் நிலவரங்களைப் புரிந்துகொண்டதில்லை. ஒடுக்கப்படுகிற மக்களுக்கு ஆதரவாக நின்றார்கள் என்ற போதிலும், பொதுப்படையான பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு அப்பால், சமூகங்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆராய்ந்து பொதுக் கோரிக்கையாக்குகிற வழிமுறைக்குள் வரவில்லை. வர்க்கப் புரட்சி பொங்குகிறபோது வருணப் பாகுபாடுகள் தாமாக உலர்ந்துவிடும் என்ற புரிதலும் இதற்கொரு காரணம். உழைப்பாளி மக்கள் வர்க்கமாக அணி திரள்வதற்குப் பெருந்தடையாக இருப்பதே வருண அடுக்குகளுக்குள் கட்டப்பட்டிருக்கிற சாதிப் பாகுபாடுகள்தான். அது, தேர்தல்களில் பாட்டாளி வர்க்க வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பையும் தடுத்து வந்திருக்கிறது. இது பற்றியெல்லாம் இடதுசாரிக் கட்சிகளுக்குள் அண்மைக்காலமாக ஆழ்ந்த அக்கறையோடு விவாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விவாதங்களின் ஒளி இயக்கச் செயல்பாடுகள் மீது எந்தஅளவுக்கு வெளிச்சம் பாய்ச்சப் போகிறது என்பதை இனி வரும் வரலாறுதான் காட்ட வேண்டும். "வர்க்கப் போராட்டம் குறித்த மார்க்சிய ஆய்வுமுறையும் இந்தியாவுக்கே உரித்தான சாதி எதிர்ப்புப் போராட்டமும் ஒருங்கிணைவதில்தான் வெற்றி இருக்கிறது," என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ('ஹிந்துஸ்தான் டைம்ஸ்', 2016 பிப்ரவரி 28).

சாதியா அரசியலா?

இவை ஒருபுறமிருக்க, தமிழக மக்களில் பெரும்பாலோர் சாதிப்பற்றையும் சாதிப்பெருமையையும் துறந்தவர்கள் அல்ல. திருமண அழைப்பிதழ்களிலாவது அச்சிடப்படுகிற சாதிப்பெயர் இதற்குச் சான்று. ஆனால், தேர்தல் என்று வருகிறபோது, அரசியலாகத்தான் முடிவெடுக்கிறார்கள். அதிலே சாதியை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறவர்களாகத் தமிழக மக்கள் இருந்திருப்பார்களேயானால், மக்கள் தொகையில் கணிசமானவர்களைக் கொண்டுள்ள சாதியையே அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்ட கட்சிகள் நேரடியாக ஆட்சியதிகாரத்திற்கு வந்திருக்க வேண்டும் அல்லது சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கட்சிகளும் மற்ற கட்சிகளோடு - அதாவது பிற சமூகங்களின் ஆதரவு பெற்ற கட்சிகளோடு - கூட்டு வைத்துதான் இடங்களைப் பிடிக்க முடிந்திருக்கிறது.

விடுதலைக்கு முன் பிராமணிய சித்தாந்தத்திற்கு எதிராக பிராமணர் அல்லாதார் அரசியல் அணித்திரட்சி நடைபெற்றது. அது திராவிட இயக்கம் உருவெடுக்க வழிசெய்தது. ஆனால், அண்மை ஆண்டுகளில், தலித் விடுதலைச் சித்தாந்தத்திற்கு எதிராக. தலித் அல்லாதார் அரசியல் அணித்திரட்சிக்கான முயற்சிகளும் நடந்திருக்கின்றன. பாமக தலைமையால் தொடங்கப்பட்ட அத்தகையதொரு முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், சமுதாய-அரசியல் பின்னலமைப்பில் சிறிது அரிமானத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது, தமிழகத்தில் சிறிய கட்சிதான் என்ற போதிலும், அகில இந்திய அளவில் பெரிய கட்சியும், மத்திய ஆளுங்கட்சியுமான பாஜக இங்கே கையாளத் தொடங்கியுள்ள வழிமுறைகள் பற்றி சமூகவியலாளர்களும் ஆய்வாளர்களும் தெரிவிக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக, ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கட்சிப் பதவிகள் தரப்பட்டிருப்பது, அந்தக் கட்சிக்கு இருந்து வரும் உயர்சாதித் தோற்றத்தை மாற்றுவதற்கான முயற்சி மட்டுமல்ல. அதிகாரத் தொடர்புடன் இணைகிற இந்தப் பதவிகளால், அந்தச் சமூகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவது, அவர்களிள் மூலமாக அந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே செல்வாக்குப் பெறுவது என்ற திட்டமும் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சமூகப் பொறியியல் என்று தமிழாக்கம் செய்யப்படுகிற சோசியல் இன்ஜினீயரிங் எனப்படுகிற இந்த சமூகத் திட்டமிடல் உத்திகள் வட மாநிலங்களில் வெற்றியளித்த அனுபவம் தமிழகத்திலும் கையாளப்படுகிறது என்று வாதிடுகிறார்கள்.

இது தொடர்பான விவாதங்களில், தமிழகத்தின் பெரிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை, தொகுதியின் பெரும்பான்மை சமூகத்திலிருந்துதானே முடிவு செய்கின்றன என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இதை இல்லை என்று மறுத்துவிட முடியாதுதான். ஆனால், மக்கள் தங்களுடைய சாதிக்காரர்கள் என்ற பார்வையோடு, குறிப்பிட்ட அரசியல் சூழலில் அந்த வேட்பாளர்கள் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி என்று பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். ஒரே சாதியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் இரண்டு கட்சிகளின் சார்பில் சம பலத்தோடு நிற்கிறபோது, மாநிலம் முழுவதும் எழுந்துள்ள அலைதான் ஒவ்வொரு தொகுதியின் வாக்குப்பதிவுகளிலும் தாக்கம் செலுத்துகிறது. அந்தக் கட்சி அல்லது கூட்டணி சரியானதுதானா என்பதில் ஒருவர் மாறுபடலாம், ஆனால் மக்களின் அந்தத் தேர்வில் சாதிப்பற்றைக் கடந்த அரசியல் முதிர்ச்சி இருப்பதை மறுக்கவியலாது.

முதிர்ச்சிக்கு முட்டுக்கட்டை

இந்த முதிர்ச்சி மேலும் மேலும் பக்குவமடைவதை நோக்கிச் சென்றாக வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக சமூகப் பொறியியல் வந்துவிடுமோ என்ற அச்சமும் கவலையும் நியாமானது. அதே வேளையில், இட ஒதுக்கீடு, பொதுத்துறை, பொதுக்கல்வி, பொது விநியோகம், அரசு மானியம் போன்ற சமூகநீதி அறிவியலோடு தொடர்புள்ள ஏற்பாடுகளில் இன்று துணிந்து கை வைக்கப்படுகிறது. அந்தத் துணிவுக்குக் காரணம், கணிசமான எண்ணிக்கையில் நடுத்தர வர்க்கத்தினர் உருவாகியிருப்பதுதான் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 2019ல் லோக்நிதி அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் 5 சதவீதத்தினர் தங்களை உயர்வர்க்கத்தினர் என்றும், 25 சதவீதத்தினர் தாழ்நிலை வர்க்கம் என்றும், 7 சதவீதத்தினர் ஏழைகள் என்றும் தெரிவித்துள்ளனர். தங்களை நடுத்தரவர்க்கக் குடும்பம் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் 55 சதவீதம். மொத்தமுள்ள நடுத்தர வர்க்கத்தினரில் 60 சதவீதத்தினர், அரசின் இப்படிப்பட்ட "பொருளாதார சீர்திருத்த" நடவடிக்கைகள் நல்லதுக்குத்தான் என்று கருதுகின்றனர், இவையெல்லாம் நெடுங்காலமாகக் காத்திருக்கிற செயல்கள் என்று கூறுகின்றனர் (அரசியல் ஆய்வாளர் தேவேஷ் கபூர் - 2017).

இது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரில் எத்தனை சதவீதம் உயரடுக்குச் சாதிகளைச் சேர்ந்தவர்கள்? எத்தனை பேர் இப்படிப்பட்ட சமூகநீதி ஏற்பாடுகளால் பயன்பெற்று முன்னேறியவர்கள்? இது பற்றிய ஆய்வும் இத்தோடு இணைய வேண்டும். மேலும், 5 சதவீதத்தினர்தான் உயர் வகுப்பினர், 55 சதவீதத்தினர் நடுத்தரப் பிரிவினர், 32 சதவீதத்தினர் தாழ்நிலை வகுப்பையும் ஏழைக் குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் என்றால், இந்த நிலைமை இயல்பாகவே வர்க்க உணர்வு மேலோங்குவதற்குத்தான் இட்டுச் செல்ல வேண்டும். ஆனால், அந்த உணர்வு வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது சாதி உணர்வு. பெருமளவுக்குத் தொழில்மயமாகாத சூழலில், அணிதிரட்டப்பட்ட தொழிலாளர் படை முழுமையானதொரு தீர்மானகரமான சக்தி என்ற பரிமானத்தை அடையாத நிலையில், வர்க்க அரசியலுக்கான புறச்சூழல் கனிந்துவிடவில்லை என்றார் அம்பேத்கர். அதற்கான ஒரு முக்கிய அகக்காரணமாகவும் சாதி இருக்கிறது.

English summary
Here is an article on Tamilnadu Assembly Election and Caste Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X