For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து கூண்டோடு விலகல்... மாயமாகிறதா மக்கள் நீதி மய்யம்? பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

"வலதும் இல்லை, இடதும் இல்லை. மய்யம்" என்று பிரகடனம் செய்து கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். அண்மையில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், அது மய்யமாக இருக்குமா அல்லது மாயமாகிப் போகுமா என்று நினைக்கத் தோன்றுகிறது.

எம்ஜிஆரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் களத்தில் குதித்த சிலர் காணாமல் போய்விட்டனர். சிலர் மங்கிவிட்டனர்.

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாகப் புறப்பட்ட விஜயகாந்த் திரையில் தோன்றிய காலத்தில் புரட்சி நடிகர் என்றே அழைக்கப்பட்டார். அது எம்ஜிஆர் திரைப்படக் காலத்தில் புரட்சி நடிகர் என்று அழைக்கப்பட்டதைப் போல இருந்தது. விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பின் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கப்பட்டார்.

Writer Paa Krishnans Article on Makkal Needhi Maiam Party

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் உருவாக்கிய அவர் மெல்ல மெல்ல பெரிய சக்தியாக உருவாகத் தொடங்கினார். ஆனால், தனது குடும்பத்தினர் ஆட்சியிலும் கட்சியிலும் ஈடுபடுவதற்கு எம்ஜிஆர் விதித்த தடையை அவர் மறந்துவிட்டார். விளைவு, கட்சி தேயத் தொடங்கியது.

எம்ஜிஆர் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறிய ரஜினிகாந்த் பேட்டிங் செய்யாமலேயே ரிடையர் ஆன பேட்ஸ்மேன் ஆகிவிட்டார்.

"எம்ஜிஆரின் நீட்சி" என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கமல்ஹாசனின் இயக்கத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதைப் பார்த்தால் கட்சி மக்கள் நீதி மய்யமா? அல்லது மக்கள் நீதி மாயமா? என்று கேள்வி கேட்கத் தூண்டுகிறது.

ஆரம்பத்தில் கமல்ஹாசன் மிகுந்த நம்பிக்கையை அளித்துவந்தார். கழகங்களுக்கு மாற்றாக இவர் எதிர்காலத்தில் உருவாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பல அரசியல் பார்வையாளர்களிடம் இருந்தது.

கமலைப் பற்றிக் குறிப்பிடும் பாரதிராஜா போன்ற மூத்த திரையுலக வல்லுநர்கள், "அவர் எந்தத் துறையில் இறங்கினாலும், அதை முழுமையாகக் கற்றுக் கொண்டுவிடுவார். அதை மற்றவர்களால் தாங்க முடியாமல் போகும்" என்று கூறியிருந்தார்.

ஆனால், வெற்றி பெற்ற அரசியல் தலைவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகளைக் கமல் கடைப்பிடிக்கத் தவறிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்குக் காரணம், அவரது இயக்கத்தின் அண்மைக் கால நிகழ்வுகள்தாம்!

மக்களவைத் தேர்தலின்போது நம்பிக்கையூட்டும் வகையில் வாக்கு சதவீதம் பெற்ற இயக்கத்தினர் நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும். இரண்டும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை என்பது கவனத்தை ஈர்த்தது.

கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.71 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 2.45 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதே சமயம் மக்களவைத் தேர்தலில் 3.9 சதவீதம் பெற்ற சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் 7 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

தமிழக அரசியலில் தனிச் செல்வாக்கு பெற்றிருந்த எம்ஜிஆர். தலைமையிலான அண்ணா திமுக கூட 1979 மக்களவைத் தேர்தலில் கண்டது. எம்ஜிஆர் மனம் தளரவில்லை. அது மட்டுமல்ல, அத்தோல்வியை அடுத்து நாஞ்சில் மனோகரன் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் எல்லோருமே அவரை விட்டு விலகினர். தொடர்ந்து சோதனையாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போதும் கலங்கவில்லை. தன்னைக் கவிழ்த்ததையே அனுதாபமாக மாற்றிக் காட்டினார். மக்களவையில் கண்ட தோல்வியைச் சட்டப் பேரவைத் தேர்தலில் மாற்றிக் காட்டினார்.

ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை எம்ஜிஆரிடம் கவனிக்க வேண்டும். தனது அரசியல் வாழ்க்கையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை முழு மூச்சாக எதிர்த்து வந்த எம்ஜிஆர், தன்னை விட்டு விலகியவர்களை விமர்சித்தது மிக மிகக் குறைவு. இத்தனைக்கும் எல்லோரும் அரசியலில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள். ஆனால், கமல்ஹாசனை விட்டு இப்போது நீங்கியவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அதே எம்ஜிஆர். 1980ம் சட்டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றார்.

எம்ஜிஆருக்குப் பின் கட்சியை ஏற்று நடத்திய ஜெயலலிதாவும் இதையே பின்பற்றினார். 1996ம் ஆண்டு தோல்வியடைந்த அவரது கட்சியிலிருந்து ஏராளமான அமைச்சர்கள் கூட விலகினர். ஆனால், அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, இயக்கத்தைக் கட்டமைத்து அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றியை மீட்டெடுத்தார்.

இப்போதுதான் கமல்ஹாசன் மிகவும் விழிப்பாக இருந்து அரசியல் நடத்த வேண்டும். விலகியவர்கள் அனைவரும் கமல்ஹாசன் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார் என்று விமர்சிக்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. காரணம், கமல்ஹாசன் நன்கு பிரபலம் அடைந்தவர். மக்களின் வரவேற்பைப் பெற்ற யாராக இருந்தாலும் தனது நிலையை உறுதி செய்வதில் வியப்பு என்ன இருக்க முடியும்? தனி நபரைச் சார்ந்து நடத்தப்படும் இயக்கத்தில் அந்தத் தனி நபரின் செயலே மோலோங்கியிருக்கும். அப்படிப் பார்த்தால், எல்லாக் கட்சியிலும் யாராவது ஒரு தலைவர் சர்வாதிகாரியாகத்தான் செயல்படுகிறார். இது பிரச்சினை அல்ல. மாறாக வலுவூட்டும் விஷயமாகும்.

விலகுபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செயல்பட்டால்தான் வெற்றியை மீட்டெடுக்க இயலும். எம்ஜிஆர், ஜெயலலிதா கடைப்பிடித்த அணுகுமுறையைப் பின்பற்றுவதுதான் அவரது இயக்க வளர்ச்சிக்கு நல்லது. அத்துடன், கட்சியை மறு சீரமைக்க வேண்டிய அவசியமும் அவர் முன்னால் உள்ளது. அவர் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Writer Paa Krishnan's Article on Actor Kamal Haasan's Makkal Needhi Maiam Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X