For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

ஒரு ஊர்ல ஒரு கொசு இருந்துச்சாம். அந்தக் கொசுவுக்கு நாளெல்லாம் சேட்டம் (உடல் நலம்)இல்லாம மெலிஞ்சுக்கிட்டே வந்துச்சாம்.

என்னல்லாமோ கைப் பக்குவம் செய்து பாத்தும் சரியா வல்ல.

கடேசியில ஒரு வைத்தியர் கிட்ட வந்து கையக் காமிச்சதாம்.

வைத்தியர் கையப் பிடிச்சிப் பாத்தார். பாத்து, தரையில மூணுதரம் ஆள்காட்டு விரலால சுண்டி முடிச்சிட்டு, (அப்பிடி ஒரு பழக்கம்) ஒரு பாட்டு சொல்லி,

உடம்புல சத்து இல்லாலததனாலதாம் இந்த மெலிவு, ஆயாசம் எல்லாம். நல்ல சத்தான ரத்தம்சாப்பிட்டு வந்தா சரியாயிடும்ன்னு சொன்னார்.

நல்...ல ரத்தம்தான் குடிச்சிட்டு வர்ரேம்ன்னது கொசு.

வெறும் நல்ல ரத்தம் மட்டும் குடிச்சாக் காணாது. சரியான சத்துள்ள ரத்தம் குடிக்கணும்ன்னார்வைத்தியர்.

அய்யோ, சத்துள்ள ரத்தத்துக்கு நா எங்க போவேம்ன்னது கொசு.

நல்... ல சத்துள்ள ஆகாரமாச் சாப்பிடுற பணக்காரராப்பாத்து அவங்களோட ரத்தத்தக் குடிக்கணும்.அதுதாம் சத்தானதா இருக்கும்ன்னார் வைத்தியர்.

அதுக்கு ஒரு அடையாளம் சொல்லுங்கன்னு கேட்டது கொசு.

பணக்காரங்கன்னா, மெத்துல (மாடியில) வசிப்பாங்கன்னு ஒரு அடையாளம் சொன்னார் வைத்தியர்.

சரின்னு போனது கொசு.

ஒரு மெத்துக்குள் போனா ... அங்க எல்லாரும் வலைக்குள்ள( கொசுவலை) படுத்து சொகமாத் தூங்கிக்கிட்டிருந்தாங்க கொறட்டை விட்டுக்கிட்டு.

சுத்திச்சுத்தி வந்தும் உள்ளெ நுழைய முடியல.

எல்லா இடமும் சுத்திப் பாத்துது. அங்க அடுப்பங் கூடத்துக்குள்ள தரையில ஒரு பொம்பள சுருண்டு மடங்கிபடுத்துக்கிடந்தது. சரி, இதும் மெத்துலதான படுத்துக்கிடக்குன்னு சொல்லி, அது கிட்ட வயிறு முட்டரத்தம் குடிச்சிட்டு வைத்தியர்கிட்ட வந்தது.

வைத்தியர் கையப் பிடிச்சிப் பாத்துட்டு, சேச்சேச்சே நீ என்னா பொம்பள. ஒரு தபா சொன்னாத்தெரியாதா. திரும்பவும் சத்து கெட்ட ரத்தத்தயே குடிச்சிட்டு வந்திருக்கயேன்னு சத்தம் போட்டாரு.

இல்லெய்யா, அந்த ஆளு மெத்துலதாம் படுத்து தூங்கிக்கிட்டிருந்தான்னது கொசு.

வைத்தியருக்கு கோவம் வந்துட்டது.

மெத்துல படுத்துக்கிடந்தா பணக்காரங்க ஆயிருவாங்களா. அது அவங்க வீட்டு வேலைக்காரங்களாஇருக்கப்படாதா?

திகைச்சிப் போயிட்டது கொசு. அடாடா தவறு பண்ணீட்டமெ என்ன செய்யன்னு நெனைச்சி,இன்னொரு அடையாளம் சொல்லுங்கய்யான்னு கேட்டுது.

இதப்பாரு, பணக்காரங்கன்னா நிறைய நகை போட்டுக்கிட்டிருப்பாங்க. அதாம் அடையாளம்ன்னார்வைத்தியர்.

ஆமாம். நாம் பாத்திருக்கேம். இன்னைக்கு போயி குடிச்சிட்டு வந்திருதேம்ன்னு போனது.

அந்த ஊர்ல திருவிழா. மந்தை நாடகம் போட்டாங்க. பணக்காரங்க வீட்டுலயிருந்தெல்லாம் பாக்கவந்தாங்க. அப்பிடி வந்தவங்க, ராத்திரியில மந்தையில நடக்க நாடகம், விடிய விடியமுழிச்சிக்கிட்டிருக்கனும். அசந்து மறந்து தூங்கிருவோம்; ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காதுன்னுசொல்லி, நகைய பூராவும் கழத்தி இரும்புப் பெட்டி ஒழுக்கரைப் பெட்டிக்குள்ள வச்சிப் பூட்டீட்டு வெறுங்கழுத்து, வெறுங் காதோட நாடகம் பாக்க வந்தாங்க.

இந்தக் கொசு, மெத்து வீடெல்லாம் போயித் தேடீட்டு யாரையும் காணமேன்னு சொல்லிஊர்க்கூட்டமெல்லாம் மந்தையில இருக்கேன்னு அங்க வந்து பாத்தது.

அங்க ஆட்டக்காரிக மட்டும் கழுத்துல, கால்ல, கையில ஏகப்பட்ட நகை பாசியில பித்தளையில போட்டுமினுமினுன்னு இருந்தாக. கொசுவுக்கு சந்தோசம் அள்ளுது!

கிடைச்சதுரா அப்பான்னு இஷ்டத்துக்கு படக் படக்குனு கடிச்சி மடக் மடக்குனு குடிச்சிதாம் ரத்தம்!

மறா நாள். கொசு சந்தோசமாப் போயி வைத்தியர்கிட்ட கைய நீட்டுனது. பிடிச்சிப் பாருங்கன்னு.

பிடிச்சிப்பாத்த வைத்தியருக்கு கோவம் இந்தமட்டு, அந்தமட்டுயில்ல.

அட கூரு கெட்ட கொசு, திரும்பவும் போயி ஏழை எம்போகியியோட ரத்தத்தையே குடிச்சிடுத்தானெவந்திருக்கெ. நீ ஒப்பேற மாட்டெ போ"னுட்டாரு.

இல்லைய்யா. அவங்க நிறைய்ய கழுத்துமுட்ட நகை போட்டிருந்தாங்கன்னு சொல்லிப் பாத்தது.

வைத்தியர் சொல்லீட்டார் கராலா; இதெல்லாம் ஒப்பேறாதுன்னுட்டு.

கொசு வைத்தியர் கால்ல விழுந்து கெஞ்சி, இன்னொரு அடையாளம் சொல்லுங்கய்யான்னு கேட்டுது.

இதுதாம் கடைசி. நா சொல்றத நல்லாக் கேட்டுக்க. பணக்காரன்னா பஞ்சு மெத்தையிலதாம்படுத்திருப்பாம். நல்லா ஞாபகம் வெச்சிக்கொன்னு அடையாளம் சொல்லி அனுப்பிச்சார்.

கொசு அப்பிடியே பாத்துக்கிட்டே வந்தது. போகிப் பண்டிகை சமையத்துல ஒரு பணக்காரர் வீட்டுலரொம்பப் பழசாப் போன ஒரு பஞ்சு மெத்தைய தூரப் போடச் சொல்லி வேலைக்காரன் கிட்டகொடுத்தனுப்பிச்சாங்க.

அதைக் கொண்டுபோயி அவன் குப்பை மேட்டுல வீசி எறிஞ்சிட்டு வந்தாம். அதப் பாத்துக்கிட்டிருந்த ஒருபிச்சைக்காரன் அதெத் தூக்கீட்டு வந்து அத விரிச்சிப் படுத்துத் தூங்கிக்கிட்டிருந்தாம். கொசு அதப்பாத்துட்டது.!

காணாததெக் கண்டுக்கிச்சாம் கருங்குரங்கு அதக் கண்டு மகிந்துக்கிச்சாம் செங்குரங்குன்னு கடிச்சிஉறுஞ்சிச்சாம் அவனோட ரத்தத்த.

கையப்பிடிச்சுப்பாத்த வைத்தியரு சொல்லீட்டார்:

உருப்படவே போறதில்லன்னுட்டு.

கொசுவுக்கு சோர்வு வந்துட்டது. எங்க போறது என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. சாணியும்,சகதியிலயும் படுத்திருந்த எரும மாட்டு மேல போயி உக்காந்ததாம், சகதியில ஊறுன வாலால ஒருஇறுக்கு இறுக்கு வச்சதாம் வசமா. அம்புட்டுத்தாம்; பரலோகம் போயிச் சேந்ததாம் கொசு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X