• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்னம்பிக்கை இல்லாத தமிழர்கள்

By Staff
|

Nedumaran""அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது என்பது ஓளவையாரின் வாக்கு. மனிதராகப் பிறப்பதிலும் தமிழராகப் பிறப்பதுபெருமைக்குரிய ஒன்றாகும்.

""முயற்சி திருவினையாக்கும் எனக் கூறிய வள்ளுவன்தனை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட நாடு நமது தமிழ்நாடு.

கங்கைவரை மட்டுமல்ல, கடல்கடந்து கடாரம் வரை சென்று அந்நாடுகளை வென்றடக்கி வீரமே ஆரமாக தியாகமே அணியாகப் பூண்டஇராசேந்திரசோழனை ஈன்ற இனம் தமிழினம்.

சோழநாடு விடுத்துப் பாண்டிய நாட்டிற்குப் பிழைக்கச்சென்ற கோவலன் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்ட போது மண்மகள் தன் சீரடிஅறியாது வளர்ந்த கண்ணகி கொதித்துக் கிளம்பி பாண்டிய மன்னன் அவைக்களத்தில் உண்மையை நிலைநாட்டப் போராடி வென்றகதையை உலகறியும்.

வள்ளுவன், இராசேந்திரன், கண்ணகி போன்ற தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்த காரணத்தினால் அரியசாதனைகளை நிகழ்த்தி தமிழினத்தின் பெருமையைப் பாரறியச் செய்தார்கள்.

ஆனால் அந்தத் தமிழினம் இன்று இருக்கும் நிலை இரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது.தன்னம்பிக்கையற்றவர்களாக, உணர்ச்சிவயப்பட்டு அற்ப காரணங்களுக்காக விலை மதிப்பற்ற உயிர்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் வடிகட்டிய கோழைகளாகத் தமிழர்கள் காட்சி தருகிறார்கள்.தமிழறிஞரான க.ப.அறவாணன் வெளியிட்டுள்ள தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. தாங்கள் போற்றி வழிபடுகிற அரசியல்தலைவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத மனவலிமை அற்றவர்களாகத் தமிழர்கள் விளங்குவதைஆதாரப்பூர்வமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட 17 பேர்களும் தமிழர்களே. வேறுஇனங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதில் 15 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரிசாவைச் சேர்ந்த ஒருவரும் மலேசியாவைச் சேர்ந்தமற்றொருவரும் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் தமிழர்களே.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தற்கொலை செய்தகொண்ட 9 பேரும் தமிழர்களே.முதல்வர் எம்.ஜி.ஆர். இறந்தபோது 26 தமிழர்கள் தங்களை மாய்த்துக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது 48பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி காஞ்சி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது 2 தமிழர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

நாட்டுக்காக, மொழிக்காக, இனமீட்சிக்காக எதிரியுடன் போராடிக் களத்தில் உயிர்த்தியாகம் செய்வது வேறு. அத்தகையோருக்கு நடுகல்நட்டுக் கொண்டாடிய தமிழர்களுக்கு இன்று என்ன நேர்ந்தது?

தலைவர்கள் சிறைப்பட்டால் கூட அதைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமையற்ற தொண்டர்களும் அந்தத் தொண்டர்களைக் காவுகொடுத்துத் தமது புகழைப் பெருக்கிக் கொள்ள முயலும் தலைவர்களும் மிகுந்துவிட்டனர்.

ஆனால் வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வேறுவிதமாக இருந்தனர்.

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து

போர்க்களத்தில் பகைவனுடன் பொருதி ""வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில் அவன் உடல் மீது அவன் தலைவன் கண்ணீர் சிந்தினால்அதைவிடப் பேறு வேறு இல்லை. அத்தகைய சாவை இரந்தாவது பெறுவது பெருமை உடையதாகும் என்றார் வள்ளுவர்.

வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த வீரர்களையொத்தவர்கள் இன்று தமிழீழ மண்ணில் கரும்புலிகளாக வாழ்கிறார்கள். நாளையும் நேரத்தையும்குறித்துக்கொண்டு சென்று சாவைத் தழுவிக் கொள்கிறார்கள். அவர்களின் தலைவரும் காற்றோடு காற்றாகக் கலந்துவிட்ட அவர்களுக்காகக்கண்ணீர் மல்குகிறார்.

ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாக, கட்சி உணர்வுக்கும், சாதிய உணர்வுக்கும் ஆட்பட்டவர்களாக மிகமிகஅற்பக் காரணங்களுக்காகத் தங்களை அழித்துக் கொள்பவர்களாக விளங்குகிறார்கள்.

தொண்டர்களின் தற்கொலையைக் கட்சிக்கும் தனக்கும் விளம்பரம் தேடிக்கொள்ளும் கருவியாக மட்டும் பயன்படுத்தும் தலைவர்களும்,தகுதியற்ற தலைவர்களுக்காக அரிய உயிரைப் போக்கிக் கொள்ளும் மடமை நிறைந்த தொண்டர்களும் தமிழ்நாட்டிற்குத் தீராதஅவமானத்தைத் தேடித்தருபவர்கள். இவர்களால் தமிழினம் ஒரு போதும் தலை நிமிர முடியாது.

பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ளவிரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.

தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916

- பழ. நெடுமாறன்(seide@md2.vsnl.net.in)

இவரது முந்தைய படைப்பு:

1. சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்

2. சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்

3. மக்களிடம் மன்னிப்புக் கேட்கட்டும்

4. பாதுகாப்பு உடன்பாடு - இந்தியா மறுப்பு

5. இந்தி எதிர்ப்பு - எத்தகைய வீழ்ச்சி! சரிவு!

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more