For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தக கண்காட்சியில் மயில்சாமி அண்ணாதுரை

By Sridhar L
Google Oneindia Tamil News

Annadurai
இளைஞர்களின் நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். வீண் சண்டைகளில் தங்களது சக்தியை விரயமாக்க கூடாது என இஸ்ரோ விஞ்ஞானியும் சந்த்ராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 32வது புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்காட்சியை பார்த்துள்ளனர். ரூ.2.5 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

இந்தக் கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

இந் நிலையில் கண்காட்சியின் முக்கிய அம்சமாக, தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையுடன் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மயில்சாமி அண்ணாதுரை சுவாரஸ்யமான பதில்களைத் தந்து உற்சாகமூட்டினார். அதன் விவரம்:

கேள்வி: சந்த்ரயான் திட்டம் மற்ற நிலவுத் திட்டங்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

மயில்சாமி: நிலவுக்கு செயற்கைகோள் அனுப்புவதை 2 வகையாக பிரிக்கலாம். 1960-1970ம் ஆண்டுகளில் நிலவுக்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அறிவியல் போட்டியால் செயற்கைகோள்களை அனுப்பினார்கள். அங்குள்ள கல், மணலை கொண்டு வந்து ஆராய்ந்தார்கள். ஆனால் நாம் இப்போது, நிலவில் நீர், ஹீலியம் போன்ற தாது பொருட்கள் இருக்கிறதா என்பதை ஆராய்கிறோம். 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தே நிலத்தில் என்ன வளம் இருக்கிறது என்பதை அறியலாம். அடுத்த 4 மாதத்தில் அமெரிக்கா நிலவுக்கு செயற்கைகோள் ஒன்றை அனுப்புகிறது. அங்குள்ள விஞ்ஞானிகளும் நாங்கள் சந்த்ரயானில் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைதான் பின்பற்றப் போகிறார்கள்.

கேள்வி: நிலவுக்கு மனிதனை அனுப்ப முடியாதா?

மயில்சாமி: நிலவில் பகல் நேரத்தில் 150 டிகிரியும், இரவில் மைனஸ் 200 டிகிரியும் வெப்பநிலை இருக்கும். மேலும், அங்கு கதிர்வீச்சுக்களும் மிக அதிகம். நிலவை முழுமையாக ஆராய்ந்த பின், உரிய முறையில் தயாராகிவிட்டு, 2018ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்புவோம்.

கேள்வி: வேறு கிரகத்திற்கும் செயற்கைகோள்கள் அனுப்பப்படுமா?.

மயில்சாமி: அடுத்து செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்பவுள்ளோம்.

கேள்வி: நிலவிற்கு செயற்கைகோள் அனுப்பியதால் வேறு ஏதாவது பயனுண்டா?.

மயில்சாமி: சந்திரயான் முழு நிலவையும் ஆராய்ந்து, என்னென்ன கனிம வளம் உள்ளது என்பதை ஆராய்கிறது. இது தொடர்பாக வரும் 23ம் தேதி முதல் தகவலை அனுப்பும்.

கேள்வி: தற்போது இளைஞர்கள் வன்முறை பாதையில் இறங்கி விட்டார்களே? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து என்ன?

மயில்சாமி: அமெரிக்காவில் இறந்த உடல்களை கூட டிவியில் காட்ட மாட்டார்கள். சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை டிவியில் காட்டியிருக்க கூடாது. அந்த மோதலை சமுதாயம் தடுத்திருக்கலாம். இளைஞர்களின் நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். சண்டைக்காக தனது சக்தியை விரயமாக்க கூடாது. மாதா, பிதா, குரு என்ற மந்திரத்தை மனதில் வைத்து நடந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது.

கேள்வி: நிலவுக்கு சந்திரயான் அனுப்பியதால் இந்தியாவுக்கு பொருளாதாரரீதியில் என்ன லாபம்?

மயில்சாமி: ஒரு காலத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம், அங்கிருந்தே ஏவப்பட்டது. ஆனால், சந்த்ரயான் வெற்றியால், வெளிநாட்டினரும் செயற்கைகோள் தயாரித்து தரக் கோரி நம்மை அணுகுகிறார்க். ஒரு செயற்கைகோள் செய்து கொடுத்துள்ளோம். மேலும், பலர் கேட்கிறார்கள். இது போன்ற விஷயங்களால் நாட்டுக்கு வருவாய் கிடைப்பதோடு வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X