For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்எஸ் கிருஷ்ணனுக்கு நினைவு தூண்-ஆர்.எம்.வீரப்பன் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Kalaivanar
சென்னை: என்எஸ் கிருஷ்ணன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் இருக்கும் அவரது சிலை அருகே 100 அடியில் நினைவு தூண் ஒன்றை எழுப்ப வேண்டும் என மாநில அரசுக்கு ஆர்எம் வீரப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம் சார்பில் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சாஸ்தாங்குட்டி பிள்ளை தலைமை தாங்கினார்.

எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்எம் வீரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். என்எஸ் கிருஷ்ணனின் மகன் நல்லதம்பி, மகள் சுலக்சனா, மருமகன் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விழாவில் ஆர்எம் வீரப்பன் பேசுகையில்,

இங்கு பேசியவர்கள் எல்லோரும் கலைவாணர் மனிதநேயம் மிக்கவர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த சிந்தனையாளர் என கூறினார்கள். கலைவாணரை இந்த உலகம் தெரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், தெரிந்தவர்களை நினைவில் வைத்துக்கொள்ளத்தான் இந்த சமுதாயம் மறந்துவிட்டது.

காந்தியை கூட மறந்துவிடும் நிலையில்தான் இந்த சமூகத்தில் இருக்கிறது.

கலைவாணருக்கு எத்தனையோ பட்டங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சம்பந்தம் முதலியார் வழங்கிய கலைவாணர் என்ற பட்டம்தான் நிலைத்து நிற்கிறது. மற்றவர்கள் எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார்.

எம்ஜிஆர் மனதை மாற்றியவர்...

எம்ஜிஆர், திமுகவில் இருந்த நேரம் மதுரை வீரன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால், அந்த படம் மூடநம்பிக்கையை மையப்படுத்தி எடுப்பதாக கூறி எம்ஜிஆர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

உடனே, அந்த படத்தின் தயாரிப்பாளர் என்எஸ் கிருஷ்ணனிடம் சென்று எம்ஜிஆரை எப்படியாவது நடிக்க வைக்கும்படி கேட்டுக்கொண்டார். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்த என்எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆரிடம் சென்று படத்தில் நீங்கள் விரும்பாத காட்சிகளை மாற்றிவிட்டு இந்த படத்தில் நடிக்கலாமே என்ற கூறினார்.

இதை எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்டு படத்தில் நடித்தார். படமும் மகத்தான வெற்றி பெற்றது. ஒரு தயாரிப்பாளர் நஷ்டப்படாமல் இருப்பதற்காகவும், எம்ஜிஆருக்கு அந்த படம் விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகவும் அவர் அவ்வாறு நடந்துகொண்டார்.

மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்...

மனிதர்களுக்காக வாழ்ந்தவர் என்எஸ் கிருஷ்ணன். தான் சம்பாதித்த செல்வத்தை மற்றவர்களுக்கு வாரி வழங்கியவரா. மனிதாபிமான மிக்கவர். அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, அவருக்கா இந்த கதி என்று பெரியார் வருத்தப்பட்டார். வழக்கு செலவுக்காக அவரது மனைவி மதுரம் அம்மையாரிடம் அப்போதே ரூ.10 ஆயிரத்தை பெரியார் வழங்கினார்.

என்எஸ் கிருஷ்ணனை பொறுத்தவரை பணத்தை சேர்த்து வைக்கும் எண்ணம் இல்லாமலே, வாழ்ந்தார். பணத்தை பற்றி அவர் கவலைப்படவில்லை. மனிதர்களை பற்றித்தான் அவர் கவலைப்பட்டார். அவரால், வாழ்ந்தவர்கள் தான் இங்கே அதிகம்.

இத்தகைய தலை சிறந்த பண்புகளால் தமிழர்களின் தலைமகனாக உயர்ந்தார். அறிஞர் அண்ணா தனது வாழ்நாளின் கடைசி நிகழ்ச்சியாக என்.எஸ்.கிருஷ்ணன் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டார். தற்போது, இருவரும் நூற்றாண்டு விழா காண்கிறார்கள்.

அண்ணாவின் நூற்றாண்டு விழா செப்டம்பரில் முடிவடைகிறது. இதற்குள்ளாக சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள என்எஸ் கிருஷ்ணன் சிலை அருகே 100 அடியில் அவருக்கு நினைவு தூணை தமிழக அரசு எழுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

எனக்கு முன்னதாக பேசியவர்கள் இங்கே கலைவாணர் பெயரில் பல்கலைக்கழக துவக்க வேண்டும் என கூறினர். அரசு தான் பல்கலைக்கழகத்தையோ, கல்லூரிகளையோ அமைக்க வேண்டும் என்பதில்லை. கலைவாணர் மீது பற்றுகொண்டவர்கள் எல்லோரும் சேர்ந்தே அமைக்கலாம் என்றார் ஆர்எம் வீரப்பன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X