For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் – ஆலோசகராக கனிமொழி நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திற்கு ஆலோசகராக கவிஞர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுடைய முன்னேற்றத்தில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்காக தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையிலிருந்து பிரித்து, தமது நேரடி கண்காணிப்பில் "மாற்றுத் திறனாளிகள் நலத் துறை'' எனும் ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ள முதல்வர் கருணாநிதி அத்துறைக்கு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலாளராகவும் நியமனம் செய்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி மாற்றுத் திறனாளிகளிடம் கொண்டுள்ள அளவற்ற அன்பும் கருணையும் காரணமாக, அவர்களுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனி நல வாரியம் ஒன்றினை 24.4.2007 அன்று ஏற்படுத்தி, அதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக உதவித் தொகைகள் வழங்கி வருகிறார்.

இந்த மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மற்றும் அதன் அலுவல்சாரா உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிக் காலம் 23.4.2010 அன்று முடிவடைவதால், முதல்-அமைச்சர் தலைமையில் இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் குழுவைத் திருத்தியமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் சமூக நலத்துறை அமைச்சர், அதன் துணைத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆலோசகராகவும், அரசு நிதித் துறை முதன்மைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாக கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் எம்.பி. நிர்மல், எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ரேவதி என்ற ஆஷாமேனன், லாரன்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த லாரன்ஸ் ராகவேந்திரா, ஆகியோருடன் திருமதி கமீலா நாசர், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதிகளாக பார்வையற்றோருக்கான இந்திய சங்கத்தின் நிறுவனர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, தி.மு.க. பார்வையற்றோர் நற்பணி மன்றச் செயலாளர் நா.கருணாநிதி, ஆகியோருடன் எம்.சி. கோமகன்; செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதிகளாக சிறுமலர் காதுகேளாதோருக்கான பள்ளியைச் சேர்ந்த டாக்டர் சகோதரி ரீட்டாமேரி, பாலவித்யாலயா செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கான மையத்தின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் சிம்மசந்திரன், துணைத் தலைவர் தீபக் ஆகியோருடன் சென்னை ரெ.தங்கம், கி.கோபிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதியாக ஆயக்குடி அமர்சேவா சங்கத்தைச் சேர்ந்த எஸ். ராமகிருஷ்ணன்; மனநோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரதிநிதியாக மதுரை டாக்டர் சி. ராமசுப்பிரமணியம் ஆகியோர் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினர்களாகவும் அவர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் மூன்று ஆண்டு காலத்திற்குச் செயல்படுவார்கள் என இந்த ஆணையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X