ஸ்ரீரங்கம் கோவிலின் ரூ. 50 கோடி நிலம் மீட்பு - ஆணையர் ஜெயராமன் தகவல்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பலநூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. மேலும், இந்த கோவிலுக்குச் சொந்தமான நூறுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளது.
இந்த நிலங்கள் பக்தர்களால் முன்பு கோவிலுக்கு தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கப்பட்டவை ஆகும்.
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தீராம்பாளையத்தில் ஒரு பகுதியில் உள்ள கோவில் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக கோவில் நிர்வாகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடு்த்து, கோவில் நிர்வாக உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளிடம் பேசி கோவில் நிலத்தை மீட்டனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி என்று கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கே ஏலம் மூலம் குத்தகைக்கு விட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 12 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது.