Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலிங்கம் காண்போம் - பகுதி 70 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

கட்டாக் பேருந்து நிலையத்தை விட்டுக் கிளம்பிய பேருந்து மெல்ல ஊர்ந்து நெரிசல் சாலைக்கு வந்தது. கூட்டம் திரண்டு வழியும் சந்தைக்குள் இந்தப் பேருந்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்களோ என்றுதான் நினைக்க வேண்டும். அவ்வளவு நெரிசலான சாலை. இடையிடையே உயிரைப் பிணை வைத்து குறுக்கும் நெடுக்குமாகப் பாயும் ஈருருளியர்கள். நிலையத்தைவிட்டு வெளியேறியதும் பேருந்துக்குள் நிற்பதற்கே இடமில்லாதவாறு மக்கள் ஏறிவிட்டார்கள். ஆடி அசைந்து நகர்ந்து நகர்ந்து நகரைக் கடக்க வேண்டும்.

காலதர் வழியே வெளியே பார்வையிட்டதில் ஒடியத் திரைப்படம் ஓடுகின்ற திரையரங்கம் ஒன்று தெரிந்தது. தமிழகத்தின் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் அரங்கைப் போன்று இருந்தது அது. மஞ்சள் நிறத்தில் கல்நார்க்கூரை வேய்ந்த கட்டடம். அரங்கின் முன்னே கட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகையில் பாக்கு விளம்பரத்தில் தோன்றும் தரத்திலான ஆண் பெண் உருவங்கள் மெய்ப்பாடுகளைக் காட்டிக்கொண்டிருந்தன.

exploring kalingam odissa part 70

ஒடியத் திரைச்சந்தையின் மதிப்பு மிகவும் சிறிதாக இருக்க வேண்டும். ஒடியத் திரையுலகை ஓலிவுட் என்று செல்லமாக அழைக்கின்றார்கள். ஒடியத் திரைத்துறையின் தலைமையகமும் கட்டாக் நகரம்தான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தாறாம் ஆண்டு முதற்று ஒடிய மொழியில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றனவாம். இராம காதையை அடிப்படையாகக் கொண்டு உரூபாய் முப்பதாயிரம் பொருட்செலவில் மோகனசுந்தர தேவ் கோசுவாமியால் எடுக்கப்பட்ட அப்படம் சீதா விவாகம் என்ற பெயரில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

exploring kalingam odissa part 70

ஒடிய மாநிலத்தின் புவியியல் அமைப்பை முன்வைத்துக் காண்கையில் பெருநகரங்கள் குறைவாக இருக்கும் மாநிலம் என்றே கொள்ள வேண்டும். நாட்டுப்புறக் கலைகள் தழைத்த அளவுக்கு அங்கே திரைப்படத்துறை வளர்ந்து செழிக்கவில்லை. அது மட்டுமன்றி வங்காளத் திரைப்படங்களின் செல்வாக்கும் ஒடியத்தில் உண்டு. சிறிய சந்தை என்றாலே அச்சந்தைக்கென்று எடுக்கப்படும் திரைப்படங்களில் சிருங்காரக் கூறுகளை உட்செறிவாக்கி எடுப்பர். அஃதொன்றே பிறமொழித் திரைப்படங்களுக்கு நடுவே மாநில மொழித் திரைப்படங்களைக் காக்கும் வழி என்பர். அதனால்தான் தமிழ், தெலுங்குப் படங்களின் படையெடுப்புகளைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு கன்னடத்தில் ஆண் பெண் இணைவுக் காட்சிகளைப் பெரும்போக்கில் எடுப்பது இயல்கிறது என்கிறார்கள். ஒடிய வாணிகப் படங்களும் அவ்வாறுதான் இருக்கக்கூடும் என்று கணிக்கிறேன். சுவரொட்டிகளும் பதாகைகளும் அத்தரத்தில்தான் இருக்கின்றன.

exploring kalingam odissa part 70

எம்மாநிலத்திற்குச் சென்றாலும் அம்மாநில மொழித் திரைப்படம் ஒன்றையேனும் திரையரங்கில் சென்று காண்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஏன் என்றே தெரியவில்லை, ஒடியத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ஆர்வமே தோன்றவில்லை. ஆந்திரத்தின் இராஜமுந்திரிக்குச் சென்றிருந்தபோது பெருந்திரளான கூட்டத்தினரிடையே “அத்தகாரிண்டிகி தாரேதி” என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். குடும்பத்தினரோடு ஹம்பி, மகாநந்தி போன்ற இடங்களுக்குச் சென்ற போதும் நந்தியால் நகரில் “சன் ஆப் சத்தியமூர்த்தி” என்ற படத்தைப் பார்த்தேன். இம்முறைதான் ஒடிய நகரங்கள் சிலவற்றில் நாட்கணக்கில் தங்கியிருந்தபோதும் ஒடியப் படங்களைப் பார்க்க முடியவில்லை. புவனேசுவரத்தில் என் கண்களுக்குத் திரையரங்குகளே தட்டுப்படவில்லை. கட்டாக் நிலவரமோ திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையே இல்லாமல் செய்துவிட்டது.

exploring kalingam odissa part 70

பேருந்து இப்பொழுது நகரத்தை விட்டு நீங்கி நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. வழியில் மகாநதிக் கிளையாற்றினைப் பாலத்தில் கடக்கையில் நாம் கட்டாக்கை விட்டு நீங்குகிறோம். அடடா… என்னவொரு பன்முகப் பாங்கெழில் நகரம் ! கட்டாக்கில் வாழ்வோர்க்கு நாட்டின் வேறெந்த நகரத்திலும் வாழ்வதற்குப் பிடிக்காது என்றே தோன்றுகிறது. கல்விக்கும் விளையாட்டுக்கும் அமைதியான வளவாழ்வுக்கும் அந்நகரம் பழைமை மாறாத முகத்தோடு கட்டியம் கூறுகிறது. இன்னொரு முறை இந்நகரத்திற்கு வரும்போது மகாநதியைப் பற்றிக்கொண்டே மேலேறிச் சென்று வழியோரப் படித்துறைகளில் படுத்துத் தூங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

exploring kalingam odissa part 70

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68, 69]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+