"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் (10)

Posted By:
Subscribe to Oneindia Tamil

- லதா சரவணன்

கதை மகாபாரதக் காலக்கட்டத்தில் ஆரம்பித்தது. பாரதப் போருக்கான ஆயத்தம் செய்வதில் பாண்டவர்களும், கெளரவர்களும் மும்முரமாய் ஈடுபட்டு இருந்தனர். காளி தேவிக்கு நரபலி கொடுத்தால் போரில் வெற்றி பெறுவார் என அந்தக்கால மக்களிடையே நிலவி வந்த நம்பிக்கை! அதை பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள் என இருதரப்பினருமே நம்பினார்கள்.

உயிருள்ள மனிதனைப் பலி கொடுப்பது. அதுவும் 32 அங்க லட்சணங்களும் பொருந்திய மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்! நீண்ட நேரம் யோசித்த துரியோதனின் நினைவிற்கு வந்தவர்கள் மூவர். கிருஷ்ணபகவான், அர்ஜீனன். மற்றொருவன் அர்ஜீனனின் மகனான அரவான். இவர்களுள், அர்ஜீனன் எதிரி, கிருஷ்ணனோ எதிரிக்கு நண்பன். எதிரியை விடவும் ஆபத்தானவன். மூன்றாவது அர்ஜீனனின் மகன் அரவான் எதிரியின் மகன்தான்! என்றாலும், உதவியென்று யார் வந்தாலும் தவறாமல் கொடுத்த வாக்கு மீறாமல் செய்பவன் எனவே அவனே நரபலிக்குச் சிறந்தவன் என்ற முடிவிற்கு வந்தான் துரியோதனன். உடனே அவனைச் சென்று சந்திக்கவும் செய்தான்.

Latha Saravanan's Kakithapookkal

"அரவான் நலமா ?"

"நலம்"! என்றான் அரவான் தந்தையின் எதிரி தன்னை கண்டு நலம் விசாரிப்பதை கண்டு நெகிழ்ந்தான் அரவான்.

"நாம் எல்லாரும் காலத்தின் கைப்பொம்மைகள்தானே மைந்தா! உன் தந்தை சூழ்ச்சிக்காரனான கிருஷ்ணன் வலையில் வீழ்ந்து விட்டான்." என்று பொய் சொன்னான் துரியோதனன்.

"அய்யா... நான் அரசியலில் தற்போது தலையிடுவதில்லை. தாங்கள் என்னை காண வந்த காரணம் என்ன என்று நான் அறியலாமா ?" என்றான் அரவான் துரியோதனனை நோக்கி...!

"இல்லையென கூறாத வள்ளல் நீ உன்னிடம் ஒரு உதவி கேட்டு வந்து உள்ளேன் ."! என்று துரியோதணன் கேட்டதும், வியப்பு தொற்றிக்கொண்டது அரவானுக்கு.

"என்ன? வணங்காமுடி என்று பெயர் பெற்ற தாங்கள் இந்தச் சிறுவனை நாடி உதவி கேட்க வந்துள்ளதே என் பாக்கியம் ... அய்யா,...! தாங்கள் என் உயிரைக்
கேட்பதாக இருந்தாலும் அதனை மிக மகிழ்வோடு நான் தருகிறேன். என்ன வேண்டும் ?" என்றான் அரவான்.

"உன் உயிர்தான் மைந்தனே.! வேண்டும்....! ஆனால் எனக்கு அல்ல, காளி தேவிக்கு!" அரவானிடமிருந்து என்ன பதில் வருமோயென்று பதற்றமாய் நின்ற துரியோதனைக் கண்டு,

"உயிர்தானே ! எடுத்துக்கொள்ளுங்கள்?!"என்றான் அரவான். அரவாணின் முகத்தில் கடுகளவு மாற்றமோ வேதனைக்கான அறிகுறியோ இல்லை?! எனவே அமாவாசை அன்று அரவானை களப்பலி தர தீர்மானித்து, அவனுக்கு நன்றியையும் தெரிவித்து பாரதப் போரின் வெற்றிக் கனவோடு அரண்மனைக்குச் சென்றான் துரியோதணன்.

சில ஒற்றர்கள் மூலம் அரவாணின் களப்பலி பற்றி அறிந்த கிருஷ்ணர், இந்தப் பிரச்சனையில் மனதளவில் சோர்ந்த பாண்டவர்களை எப்படி சரிக்கட்டுவது என்ற கவலையில் ஒரு ஏற்பாட்டைத் துவங்கினார்.

அமாவாசையன்று நரபலி கொடுத்தால் மட்டுமே வெற்றியெனும் நிலையில், ஒருநாள் முன்னதாகவே அமாவாசையை வரச்செய்து விட முடிவு எடுத்த கிருஷ்ணர் அரவானைச் சந்திக்கப் புறப்பட்டார். கிருஷ்ணரைப் பணிந்து வணங்கிணான் அரவான்.

"தர்மத்துக்கம் அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் ஒரு யுத்தம் இதுவென்று அழகாக எடுத்துரைத்தார்." கிருஷ்ணர்.

"எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவும் அந்த உயர்ந்த குணம் பாராட்டுக்குரியது. ஆனால், விஷச்செடிக்கு உரமிடுவதால் தீமை வளருமே தவிர நன்மை வராது!". கிருஷ்ணர் பேசவரும் விஷயத்தை உணர்ந்த அரவான், "பகவானே என்னை நம்பி வந்தவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்வது
என் குணம்". என்றான்.

"நல்லவர்களுக்கு செய்யும் உபகாரம் கல்லின் மேல் எழுதிய எழுத்து போல நிலைத்து நிற்கும். தீயவருக்கு செய்யும் உபகாரம் தண்ணீர் மேல் எழுதப்படும் எழுத்துக்குச் சமமாகும். என்பதை நீ அறிந்ததில்லையோ? என்றார் கிருஷ்ணர் பொருள்பட....!"

"உண்மைதான் பகவானே.... ஆனால், நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் சொல்லுங்கள் எனக்கு குழப்பமாய் உள்ளது" என்றான்.

"உன் தியாகம் பாண்டவர்களுக்குப் பயன்படவேண்டும் குழந்தாய் !"

(தொடரும்)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Writer Latha Saravanan's new series Kakithappokkal. The story talks about the life a boy. Here is the 5th episode.
Please Wait while comments are loading...