• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்வெனும் பெரும் பாதி- ரிஷி சேது

By Staff
|

கண் திறக்க கூசி

திறந்த பக்கமெல்லாம்

பட்டாம் பூச்சிகள்

நட்சத்திரங்களையெல்லாம்

எண்ணிவிட்டு

பிறக்கும் சந்தேகம்-

நிலவுக்குள் பாட்டி புகுந்தவிதம்...

இடியும் மின்னலும்

எட்டாச் சூரியனும்

பாட்டி கதையில் வருவதேயில்லை

அம்மாவின் முந்தானைக்குள்

முகம் பதுக்கி

தொய்ந்தன கேள்விகள்

கேள்விகள் இல்லா அப்பா.

அழுமுன்னே கொடுத்திடும் அம்மா.

பயமில்லா பாட்டி கதைகள்.

தாத்தாவின் முதுகுச்சவாரி

முடிந்தது முதல் பாதி...

கூச்சம் தவிர்த்திருப்பேன்

மதங்கள் பாவமென்பேன்

(தீரா நோய்க்கும் மருந்தென்றால்

கடவுள் எங்கே?)

ஆயிரமாவது முறையாக

தோன்றிய பருவை கிள்ளிப் பார்ப்பேன்

திசைகளுக்கு விடுதலை

வானம் தொடும்தூரம்

எல்லைகளில்லா பயணம்....

எப்போது ஒழுங்காயிற்று என் மீசை?

முடியாத இரவு.

எழுப்பாமல் விடியும் காலை.

மாலை நேரத்து சிறு நடை.

நனைக்காத மழை.-

கவிதை

மற்றும் அவளாய் கழிந்ததென் இரண்டாம் பாதி-

கூச்சப்படும் மனைவி

தரை பரப்பிவிழும் சூரியன்

நாளை குழந்தைக்கு வாங்க வேண்டிய

நோட்டுப் புத்தகங்கள்- நீளும் பட்டியலில்

பண்டிகைகளும் புது நகைகளும்-பாதி

மீந்துபோனால்

அவளின் விருப்பப்படியே

அமையுமென் விருப்பங்கள்-

எங்கிருந்து வந்தது

அம்மாவின் நோய்

அப்பாவின் கண்ணாடி

அடிக்கடி உடைவது ஏன்?

அவசரக் காலையில்

தடுக்கிவிழும் குழந்தை

அக்கறையில்லாமல்

அடுக்களை புகும் மனைவி

இவைகளுக்கு நடுவே

அக்னி பிரவேசமாய்

அக்காளின் வருகை....

அலுவலகத்தில்.

பேருந்தில்.

ஆசை வீட்டில்

அல்லல் படுத்தும்

மூன்றாம் பாதி-

மூன்றாம் பிறை நெற்றி

கண்ணைத் தவிர்த்து எல்லாமே

என் ஜாடை

பேரனின் மூத்திர கரிப்பில்

என்ன சுவை?

பிஞ்சு கரம் பிடித்து கன்னகுழியில்

முத்தமிட சிரிக்கும் சிரிப்பு-

கோரிக்கையில்லா

பொழுதுகள்

பெரும்பாலும்

மெளன மொழி-

இடைவேளை விட்டு உணவு

திடீரென வளைந்த முதுகு

அடிக்கடி ஆடும் கழுத்து

இவை தவிர

நீளும் முட்டி வலியென

பிரச்சனைகள்-

மருந்துகளுக்கு சவாலாய்

தீர்ந்தும் தீரா நோய்கள்

ஏற்றுக் கொள்வதேயில்லை

என் கதைகளை

என் பேரன்-

ஏதேதோ பேசுகிறான்

நழுவி விழுகிறது

பல் போன காலம்-

இரவுகள் கொடுமை

பகலும் அதைவிட

கேட்காமல் வந்த முதுமை

எப்போது முடியும்

இப்பாதி?-

(இந்தக் கவிஞர் தென் ஆப்பிரிக்காவின் பெத்லஹேம் நகரில் வாழும் தமிழர்)

- ரிஷி சேது(rishi_sethu@yahoo.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X