• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணவாழ்வு

By Staff
|

சிங்கப்பூர் கிம் செங் சாலையின் வாரத்தின் கடைசி நாள் ரொம்ப சுறுசுறுப்பாக இருந்தது. கிரேட்வர்ல்ட் சிடி(Great World City) என்ற பிரமாண்ட கடை தொகுதி(shopping complex)க்குஎதிரே கிம் செங் பிளாசாவை ஒட்டி சாலையின் ஓரத்திலேயே மஞ்சள் கோடு போடப்பட்டிருந்ததைமறைத்துக் கொண்டு ஒரு சீருந்து வந்து நின்றது.

சீருந்தின் இயக்கத்தை நிறுத்தாமல் சுட்டிக் காட்டும் விளக்கை போட்டு விட்டு சீருந்தில் இருந்துஇறங்கி அந்த சிறிய உணவகத்தில் நுழைந்தான் அவன்.

அந்த சாலையோர கடையில் தேத்தணி குடித்ததற்கு வெள்ளி(காசு) கொடுத்து விட்டு திரும்பியராஜேஷ் அதிர்ந்தான். போக்குவரத்து துறை அதிகாரியான அந்த பெண்மணி ராஜேஷின் சீருந்தின்மீது ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

ராஜேஷ் பதட்டத்துடன் ஓடி வந்து, சாரிலா.. இப்ப தான் வந்தேன்.. உடனே எடுத்துடறேன்.. என்றான்.

மேக்கப் போடாமலே அழகாக இருந்தாலும் மேக்கப் போட்டு அழகை கூட்டாமல் அழகைகெடுத்திருந்த உமா சொன்னாள், இந்த மாதிரி மஞ்சள் கோடு போட்டிருந்தா மொதோ காடியநிறுத்தவே கூடாதுன்னு தெரியாதா? என்று.

ராஜேஷ், தெரியும் மேடம் அதான் இப்ப எடுத்துடறேன்னு சொல்றேன்ல.. என்றான்.

சொல்லி முடிக்கு முன், சத்தம் போடாதீங்க.. டோண்ட் ஷவுட்.. ஓகே.. எதாயிருந்தாலும் ஆபீஸ்லபோய் பேசிக்குங்க..’ என்று அதிரடியாக கூறிவிட்டு தன் வாகனத்தில் ஏறி பறந்தாள்..

ராஜேஷ் அஞ்சலகம் சென்று சிங்கப்பூர் சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக வரிசையில் நின்றுஅபராதத்தை கட்டினான்.

Coupleராஜேஷ் மீண்டும் அவன் வேலை பார்க்கும் அலுவலகம் சென்று சில வேலைகளை முடித்து விட்டுவீடு திரும்பினான்.

குளியலறை சென்று களைப்பு நீங்கி ஹார்லிக்ஸ் போட்டு குடித்துக் கொண்டே தொலைகாட்சியைஇயக்கி விட்டு அப்பாடா.. என்று சோபாவில் சாய்ந்தான்.

சிறிது நேரம் கழித்து கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ராஜேஷ் அசைய கூட இல்லை. கதவைதிறந்து கொண்டு உமா உள்ளே வந்தாள்.

நேராக படுக்கையறை சென்றாள். தோல்பையை எடுத்து வீசினாள். அந்த பை ராஜேஷும் உமாவும்மணக்கோலத்தில் எடுத்த புகைப்படத்தின் மீது போய் விழுந்தது.

உமா அந்த புகைப்படத்தை எடுத்தாள். இமை கொட்டாமல் சிறிது நேரம் அந்த புகைப்படத்தையேபார்த்துக் கொண்டு இருந்தாள்.

இதய ஒளியை சோக மேகம் மூடியது..

கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது..

அந்த புகைப்படம் அவர்களது பழைய காதல் கதையை சுருக்கமாக நமக்கு எழுதி காட்டுகிறது..படித்து பார்ப்போம்..

ராஜேஷ் தான் எப்போதும் செல்லும் ப(ஆ)ஃபலோ சாலையில்(buffalo road) உள்ள புளுடயமண்ட் கடையில் புகுந்தான். எப்போதும் அமரும் அதே இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.

பிடித்த உணவு பதார்த்தங்களை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது தொலைபேசி மணி அழைத்தது..

தனது கை தொலைபேசியை எடுத்து பார்த்தான். அவனுக்கு அழைப்பு வரவில்லை. சத்தம் எங்கிருந்துவருகிறது என்று யோசித்த விநாடி பக்கத்து நாற்காலியில் ஒரு தொலைபேசி இருப்பதை கண்டான்.

பிரைவேட் நம்பர் என்று காட்டிய அந்த அழைப்பிற்கு ஹலோ என்று பதில் கொடுத்தான்.

மறுமுனையில் தேனினும் இனிய குரல், ஹலோ.. என் பேர் உமா சார்.. நீங்க இப்ப பேசறதுஎன்னோட ஹேண்ட் போன் தான் நான் தான் மறந்து வச்சுட்டேன்.. என்று அழகாக இனித்தது.

ராஜேஷ் குரலை கேட்ட மாத்திரத்திலேயே குரலுக்குறிய முகத்தை பார்க்க வேண்டும் என்றுஆசைப்பட்டான்.

ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், என் கிட்டே தான் பத்திரமா இருக்கு.. என்றான்.

உமா, சார் நான் இப்ப பாஸிர் ரிஸ் ல இருக்கேன்.. நீங்க எப்போ எங்கே வர சொல்றீங்களோ அங்கவந்து வாங்கிக்கறேன்.. என்றாள்.

ராஜேஷ் இடத்தை சொன்னான்..

நேரத்தை சொன்னான்..

அடையாளத்தை சொன்னான்..

ராஜேஷ் குறிப்பிட்ட நேரத்திற்காக காத்திருந்தான் என்பதை விட தவமிருந்தான் என்பதே சரி..

உமா எனும் பூலோக தேவதை அடையாளம் கண்டு வந்தது..

ராஜேஷ் மட்டும் கவிஞர் வாலியாக இருந்திருந்தால் என்ன விலை அழகே? என்றும் கவியரசுவைரமுத்துவாக இருந்திருந்தால் அன்பே.. அன்பே.. கொல்லாதே.. என்றும் பாடியிருந்திருப்பான்.

அவன் ராஜேஷாக இருந்ததால்..

உனது பேச்சு என்னவோ

தென்றல் தான்

ஆனால்

என் மனதில்

புயலின் பாதிப்பை

அல்லவா ஏற்படுத்திவிட்டது

என்றுயோசிக்க மட்டும் முடிந்ததே பெரிய விஷயம் தான்.

எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் ஒரு தடவைக்கு மேல் இரண்டாவது தடவைஏறெடுத்து பார்த்தது கிடையாது. ஆனால் உமாவை பார்க்கும் முன்னாடியே பார்க்க துடித்தது எப்படி?

எல்லா அழகும் காதலை சொல்லி விடுவதில்லை. காதலை சொல்லும் அழகு மனதில் மாற்றத்தைஏற்படுத்தி விடும். அந்த மாற்றம் இப்போது ராஜேஷுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆமாம், ராஜேஷ் உமா மீது காதல் வயப்பட்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழ் திரைப்படத்திலும்சொல்வார்களே, அதே love at first sight தான்..

காதல் என்ற இரத்தம் இல்லாத இரசாயன யுத்தம் தொடங்கியாகி விட்டது. இனி காதல் வெற்றியைஅறிவிக்க வேண்டும்..

காதலை சொல்வது எப்படி? புஸ்தகம் கடையில் விற்கிறதா? சிராங்கூன் சாலையிலும் குட்டி இந்தியாகடைத் தொகுதியிலும் தேடிப் பார்த்தான்.

ஒரு முறை துணிந்து விட்டான். எப்படியும் சொல்லி விடுவது என்று எண்ணி தொலைபேசியைகையிலெடுத்தான். வந்த தைரியம் ரிடர்ன் டிக்கெட் வாங்கி விட்டு வந்த வழியே சென்று விட்டது.

தொலைபேசியை கையிலேயே வைத்து பார்த்துக் கொண்டிருந்த போது மணி ஒலித்தது. அழைப்பதுஉமா என்று சொல்லியது.

எடுத்து ஒரு வித கலக்கத்துடன், ஹலோ என்றான்.

உமா, உங்களை இன்னைக்கு சந்திக்கலாமா? என்று கேட்டாள்.

ராஜேஷ் அதற்காக காத்திருந்தவனாக, எப்ப? எங்கே? என்றான்.

இருவரும் சந்தித்தார்கள்.

உமா தான் முதலில் தைரியமாக ஆரம்பித்தாள், நா சொல்றேன்னு என்ன தப்பா நினைக்காதீங்க..நான் உங்கள காதலிக்கிறேன்.. என்று..

போச்சுடா.. உமாவிற்கும் அதே love at first sight தான் போலிருக்கிறது..

வானம் தூறலாவது போடாதா என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தவனுக்கு அடைமழையையே பரிசாகபெற்றது போலிருந்தது ராஜேஷூக்கு.

அவர்களது காதல் கூட அழகு தான். காமம் என்பது காதலர்களுக்கு உரியது அல்ல தம்பதிகளுக்குஉரியது என்பதை நன்றாகவே அந்த தமிழ் நெஞ்சங்கள் உணர்ந்திருந்தது.

பெரிய ஆச்சரியம் தான் இல்ல..

எதிர்ப்பே இல்லாத காதல். அதாவது இருவரது பெற்றோர்களுக்கும் இருவரது குடும்பங்களையும்பிடித்திருந்தது.

அழகிய திருமணம். மலரினும் மெல்லிது காமம் என்ற குறளுக்கு ஏற்ப சிறப்பான தாம்பத்யவாழ்க்கை..

அந்த புகைப்படம் சொன்ன கதையை நாம் படித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ராஜேஷ் வசந்தம்சென்றல் தொலைக் காட்சியில் தமிழ் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.

போக்குவரத்துறை அலுவலக பணிமனை சிற்றுண்டிச்சாலை..

இவர் இந்த அளவுக்கு ஏன் மேல வெறுப்பு காட்டுவார்ன்னு நா நினைக்கவே இல்லலா.. என்றாள்உமா

என்னாச்சு.. ஜி.எம்.(general manager) கூப்டாரே என்ன சொன்னாரு.. என்றாள் உமாவின்தோழி ரமா.

இல்ல.. நேத்து ரோட் ஓரத்துல கார நிறுத்திட்டு உள்ள போயிருந்தாரு.. நான் சூரா வச்சேன்.. அதுதப்பா.. அது பீக் அவர் தெரியுமா..? என்றாள் உமா.

சரி இப்ப என்னாச்சு அதனால.. என்றாள் ரமா.

நான் தான் சொன்னேன்.. எதா இருந்தாலும் ஆபீஸ்ல வந்து பேசிக்குங்கன்னு.. ஆனா அதுக்காகஆபிஸ்க்கு போன் பண்ணி என்ன பத்தி கம்ப்ளய்ண்ட் கொடுத்திருக்காருலா..? என்று அழுதாள்உமா.

கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம். ஆனால் வெறுப்பு வந்து விடக் கூடாது. காதலித்துசெய்த திருமணம்.. பெரியோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம்.. இன்று நீதிமன்றத்தின்வாசலில் வந்து நிற்கிறதே..புரிந்து கொண்டவர்கள் பிரிய நினைப்பது ஏன்..?

இந்த அவசர உலகத்தில் காதல் கூட அவசர அவசரமாக தான் வந்து தொலைக்கிறது. கேட்டால் loveat first sight என்கிறார்கள். கல்யாணம் முடிந்து விவாகரத்து கோருவது காதலை விட அவசரமாகவந்து விடுகிறது. இதை எப்படி சொல்ல போகிறார்கள்.. divorce at first fight என்றா..?தெரியவில்லை.

ராஜேஷ் அவனது நண்பர்களை ஒரு ஞாயிறன்று விடுமுறையில் நண்பர்களை வீட்டிற்கு வரச்சொல்லியிருந்தான்.

உமாவிடம் இது பற்றி பேசிய போது,

என்ன கேக்காம ஏன் நீங்களா கமிட் பண்றீங்க என்று முதலில் கோபப்பட்டு பிறகு ஒத்துக்கொண்டாள்.

ஞாயிறு வந்தது..

நண்பர்களும் வந்தார்கள்..

உமா மட்டும் வீட்டில் இல்லை..

உமாவின் தோழி ரமாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தெரிய வர உமா சமையல்வேலையை அப்படியே போட்டு விட்டு அவசரமாக சென்று விட தொலைபேசியில் தொடர்புகொண்ட பிறகு தான் ராஜேஷூக்கே தெரிந்தது.

நண்பர் வட்டாரம் ராஜேஷை, உன் ஒய்ஃபுக்கு சமைக்க தெரியலைன்னா ஏதாவதுரெஸ்டோரண்ட்ல லன்ச்சை வச்சிருக்கலாமே என்று விளையாட்டக சொல்ல ராஜேஷ் பெரியஅவமானமாக உணர்ந்தான் அதை.

இது சம்மந்தமாக ராஜேஷூக்கும் உமாவிற்கும் வாக்குவாதம் நடந்த போது வாய்க்கு எட்டியதுகைக்கும் எட்டி விட்டது. பேசிக் கொண்டே இருக்கும் போது கோபத்தில் உமாவை அடித்து விட்டான்ராஜேஷ்.

உமாவின் தோழி ரமா சொன்னாள், என்னால தான் இவ்வளவும் என்று.

உமா, அதெல்லாம் ஒண்ணுமில்ல அவருக்கு தான் எம்மேல பாசமே இல்ல.. அவருக்கு ஆச ஆசயாபொறந்த நாளன்னைக்கு மோதிரம் ஒண்ணு வாங்கி கொடுத்தேன்.. அப்படி பாசம் உள்ளவராஇருந்தா என்ன செஞ்சிருக்கணும்.. பத்திரமா வச்சிருக்கணும் தானே.. ஆனா அவர் என்ன செஞ்சார்தெரியுமா? என் கிட்டே கூட கேக்காம அவர் கூட வேல பார்க்குற ஒரு பொண்ணுக்கு அவகல்யாணத்தன்னைக்கி கிஃப்டா கொடுத்துட்டாரு தெரியுமா..? என்று கலங்கினாள் உமா.

ரமா அவளை தேற்ற நினைத்து, நீ ஏன்லா அப்படி நினைக்கிறே? அவர் உரிமையா எடுத்துகொடுத்திருக்கலாம் இல்லயா? என்றாள்.

உமா தன் கைப் பையிலிருந்து ஒரு எழுதுகோலை எடுத்து ரமாவின் முகத்திற்கு நேராக நீட்டி, இதுஎன்ன தெரியுமா? அவர் வாங்கி கொடுத்த பென்.. ஒகே.. என்று திரும்ப பையில் வைத்துக்கொண்டே, நான் பத்திரமா வச்சில்ல.. அத மாதிரி தானே நானும் எதிர்பார்ப்பேன்.. அவரும் நான்கொடுத்ததை பத்திரமா வச்சிருக்கணும்ணு.. என்றவள் மெல்லிழைத் தாள்(tissue paper) எடுத்துவழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, யாரையாவது நேசிச்சேன்னா அவங்க பரிசா கொடுத்தபொருளையும் நேசிப்பே.. இப்படி ஈஸியா தூக்கி கொடுத்துட மாட்டே.. என்றாள்.

ராஜேஷின் நண்பர்கள் சொன்னார்கள், நீங்க பிரியறதுக்கு நாங்க எந்த விதத்திலேயாவது காரணமாஇருந்திருந்தா எங்களை மன்னிச்சிடு என்று.

ராஜேஷ், அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அவளுக்கு எம்மேல பிரியமிருந்திருந்தா இதெல்லாம்நடந்திருக்காது என்றான்.

நண்பர்களில் ஒருவன், நீயேன் அப்படி நினைக்கிறே.. வீட்டுக்கு வர்ர விருந்தை விட ஹாஸ்பிடல்லபிரண்ட் இருக்கும் போது போய் பார்க்குறதுல என்ன தவறு? என்று கேட்டான்.

ராஜேஷ், நோ லா.. நீங்க நினைக்கிற மாதிரிலாம் ஒண்ணுமில்லைலா.. ஹாஸ்பிடல்ன்னா..ஆக்ஸிடெண்ட் கேஸா என்ன..? எப்பவும் வர்ர வயித்து வலி.. யூசுவல் பெய்ன்.. தட்ஸ் ஆல்.. சரி..எங்கிட்டே சொல்லிட்டு போலாம்ல.. குளிச்சிட்டு வர்ரதுக்குள்ள வீட்ட பூட்டிட்டு போயிட்டாஎப்படி..? என்ன செஞ்சிருக்கணும்? எங்கிட்டே சொல்லிருக்கணும்.. நானே கூட்டிட்டுபோயிருப்பேன்.. அவளுக்கு பாசமே இல்லலா.. எம்மேல மரியாதையும் இல்ல. என்று தன்பக்கமிருந்த நியாயத்தை சொன்னான்.

வக்கீல் வடிவழகன் வீடு-

வக்கீல் வடிவழகன் ராஜேஷையும் உமாவையும் பார்த்து, உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்குவிவாகரத்துன்னு தீர்ப்பு கிடைச்சிடும்.. என்றார்.

இருவரும் நன்றி சொன்னார்கள்.

வடிவழகன், நீங்க எங்கிட்டே ஃபர்ஸ்ட் டைம் வந்தப்ப நான் சொல்றத கேக்குற ஸ்டேஜ"ல நீங்கரெண்டு பேருமே இல்ல.. அதான் நாளைக்கு டிவோர்ஸ் நிச்சயங்குற பட்சத்துல ரெண்டு பேரயும்கூப்ட்டு பேசிடலாம்னு தோணுச்சி.. என்றவர் சிறிது மெளனத்திற்கு பிறகு, பேசலாமா?.. என்றுஇருவரையும் பார்த்து கேட்டார்.

இருவரும் தலையை ட்டி ப்ளீஸ் என்றார்கள்.

நீங்க ரெண்டு பேருமே ஒர்கிங் கபுள்ஸ் ஆமாவா.. இல்லயா? என்றார் வடிவழகன்.

இருவரும் ஆமா.. என்றார்கள்.

நீங்க ரெண்டு பேரும் எத்தனை வருஷமா வேலை பார்க்குறீங்க..? -வடிவழகன்.

நான் பிரைவேட் கன்சர்ன்ல செவன் இயர்ஸா மேனேஜரா ஒர்க் பண்ணிட்டிருகேன்-ராஜேஷ்

நான் போக்குவரத்து துறைல கடந்த நாலு வருஷமா வேல பார்க்குறேன் -உமா

வடிவழகன் தன் கண்ணாடியை கழட்டி தன் சட்டையில் துடைத்து திரும்ப மாட்டி விட்டு இத்தனைவருஷத்துல நீங்க எப்பவாவது உங்க வேலய ரிசைன் பண்ணணும்னு நினைச்சதுண்டா..? ஆபிஸ்லஏதாவது பிரச்சினை வந்து.. என்று முடிக்குமுன்.

யெஸ் அப்படி நினைச்சதுண்டு.. ஆனா அவ்வளவு ஈஸியா தூக்கி போட்டுட முடியாது..வேலையாச்சே.. என்றான் ராஜேஷ்.

நான் கூட நினைச்சிருக்கேன்.. பட்.. வேலைன்னா பிரச்சினை இல்லாம இருக்காது.. ஆமா தானே..ஸோ.. நான் வர்ர பிரச்சினைய சமாளிச்சிட்டு இல்லன்னா.. பொறுத்துட்டு போயிடுவேன்.. என்றாள் உமா.

வடிவழகன்- ரெண்டு பேரும் வேலய விடறதுக்கு முன்னாடி இவ்வளவு தூரம் சிந்திச்சிருக்கீங்களே..இந்த மாதிரி வாழ்க்கைய விடணும்னு வந்திருக்கிறீங்களே.. இதுக்கு முன்னாடியும் நீங்க சிந்திச்சுஇருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்..

இருவரும் மெளணம் காத்தனர்..

திருமணங்கறது ஒரு ஒப்பந்தம்.. வாழ்க்கை முழுவதற்கும் இடையில ஏற்படற கஷ்டம் நஷ்டம்எதுவும் பிரிக்க முடியாத பந்தம்..

இருவரும் கூர்ந்து கவனித்தார்கள்..

விவாகரத்துன்னா.. கொடுமை படுத்துறது.. நடத்தை சரியில்லாம போயிடறது.. குடிச்சிட்டுகலாட்டா பண்றது.. நாலு காசு சம்பாதிக்காம குடும்பத்த கவனிக்காம பட்டினி போடறது.. இந்தமாதிரியான் காரணங்களுக்காக பிரிஞ்சு போயிடறதுக்கு சட்டம் கொடுக்குற மாற்று வாழ்க்கை..ஆனா விவாகரத்த போயி தன்னம்பிக்கைன்னு சொல்லிக்கிறாங்க.. காலம் அப்படி இருக்கு.. என்னசெய்றது?.. ஆனா நீங்க..

வடிவழகன் பேச்சை நிறுத்தி விட்டு இருவரது முகம் மாறுவதையும் கவனித்தார்..

ஆனா நீங்க.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பிரியப்பட்டிருக்கீங்க.. இனிபுரிஞ்சிக்கணும்.. விட்டு கொடுக்கணும்.. வேலய அவ்வளவு சீக்கிரம் விட்டுடாத நீங்க வாழ்க்கையரொம்ப சுலபமா விட்டுட நெனைச்சது தான் வேதனை.. என்றவர்..

சரி.. நீங்க ரெண்டு பேரும் இந்த பேப்பர்ல சைன் வைங்க.. என்று எழுதுகோலை தேடினார்.. அதுஇல்லை..

உமா அதை கவனித்து விட்டு, எங்கிட்டே இருக்கு.. என்று தன் கைப் பையிலிருந்து எழுதுகோலைஎடுத்தாள்..

வடிவழகன் அழகாக இருந்த எழுதுகோலை பார்த்து விட்டு, எங்கே.. காட்டுங்க.. அழகா இருக்கே..எங்கே வாங்குனீங்க? விலை என்ன.? என்றார்.

உமா, இவங்க தான் வாங்கி கொடுத்தாங்க.. என்று அழ ஆரம்பித்து விட்டாள்..

ராஜேஷ் கண்களில் கண்ணீருடன் உமாவை திரும்பி பார்த்தான்..

வடிவழகன் சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, மண வாழ்க்கைங்கறது ஆழமான சுவையான கருத்துள்ள புஸ்தகத்தைபடிக்கிற மாதிரி.. காசு கொடுத்து வாங்கிட்டு படிக்கிறதுக்கு முன்னாடியே கிழிச்சு போடவந்துட்டீங்களே.. என்றார்.

ராஜேஷ் அழுத உமாவை, அழாதே உமா. என்று கண்களை துடைத்து விட்டான் அழுது கொண்டே..

உமா வடிவழகனிடம், என்ன மன்னிச்சிடுங்க நா இனிமே இந்த மாதிரி தப்பை நெனைச்சு கூடபார்க்க மாட்டேன்.. என்றாள்.

ராஜேஷ், நா கூட இனிமே சரியா நடந்துக்கறேன்.. என்றான்.

இருவரும் வக்கீல் வடிவழகனுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார்கள். சீருந்தில் இருவரும் அமர்ந்துகொண்டனர். உமா அழுதுக் கொண்டே இருந்தாள்.

ராஜேஷ் வானொலி ஒலி 96.8ஐ இயக்கி விட்டான்..

அதில் ஓசை படத்தில் வரும் ஒரு பாடல் நான் கேட்டேன்.. என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ராஜேஷ், தண்ணி குடிக்கலாமா? என்றான்.

உமா, ம் என்றாள்.

ராஜேஷ் அந்த குடியிருப்பு பகுதியில் நுழைந்து சீருந்து நிறுத்துமிடத்தில் கொண்டு போய்நிறுத்தினான்.

ராஜேஷ் உமாவிடம், இப்பல்லாம் அஞ்சு நிமிஷம் காடிய நிறுத்தினாலும் பார்க்கிங் கூப்பன் வச்சுட்டுதான்லா இறங்குறது.. என்றவன் கூப்பன் அந்த பாக்ஸ்ல தான் இருக்கு.. தொறந்து எடேன்.. என்றான்.

உமா திறந்தாள். அங்கே ஒரு மோதிரம் வைக்கும் நகை பெட்டியும் இருந்தது.

உமா, என்ன இது? என்று கேட்டாள்.

ராஜேஷ், இதுவா.. மோதிரம் நீ வாங்கி கொடுத்தது தான்.. அது கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சுஅதான் சரி பண்ணலாம்னு கழட்டி வச்சிருக்கேன்.. என்றான்.

உமா ஆச்சரியத்துடன் கேட்டாள், அப்ப நீங்க அந்த ஜெயாவுக்கு பிரசெண்ட் பண்ணது..? என்று..

ராஜேஷ், ஆமா.. யெஸ்.. யு ர் கரெக்ட் பார்க்க ரெண்டு மோதிரமும் ஒரே மாதிரி தான் இருக்கும்..என்றான்.

உமா, என்ன சொல்றீங்க.. அப்ப அது வேற மோதிரங்கறீங்களா? என்றாள்.

ராஜேஷ், ஆமா.. வேறென்னா.. நீ வாங்கி கொடுத்ததயா தூக்கி கொடுக்க முடியும். யாரையாவதுநேசிச்சேன்னா அவங்க பரிசா கொடுத்த பொருளையும் நேசிப்பே.. ஆமாவா இல்லையா?..உங்கிட்ட இருக்கிற பேனா.. என்கிட்டே இருக்கிற மோதிரம்.. இப்படி.. இதெல்லாம் ஈஸியா தூக்கிகொடுத்துட முடியாது இல்லையா? என்றான்.

உமாவால் அழுகையை கட்டுப்படுத்த முடிய வில்லை.

மணவாழ்வு- இனிமேல் தான் அவர்களுக்கு ஆரம்பம்.

துவா

ஸலாமுடன்

- அ. முஹம்மது இஸ்மாயில்(dul_fiqar@yahoo.com.sg)

இவரது முந்தைய படைப்புகள்:

1. தேவை இந்த மனங்கள்

2. தாயின் காலடியில்..

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more