For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈமொட்டை.காம்-- - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (இச் சிறுகதை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.(RaayarKaapiKlub-subscribe@yahoogroups.com)

By Super
Google Oneindia Tamil News

(இச் சிறுகதை ராயர் காபி கிளப் யாகூ குழுமத்தில் வெளியானது.([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இக் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்)

ஷண்முகம் பிள்ளை பல சரக்குக் கடையைப் பூட்டி விட்டு மத்தியானச் சாப்பாட்டுக்கு வீடு நோக்கி நடந்தார். வீடுஅதிக தூரமில்லை. அடுத்த தெருவில் தான். இருந்தாலும், உஸ்ஸ்....அப்பாடா, என்ன ஒரு வெயில்... குடையைஎடுத்து வரவும் மறந்து போயிற்று. இன்னமும் ஒரு கார் வாங்க வேளை வரவில்லை. கார் என்ன, ஆட்டோவோ,டெம்போவோ வாங்கக்கூட முடியவில்லை. எல்லாப் பணத்தையும் திரும்பத் திரும்ப பிசினசில் போட்டு, தான்நடந்துதான் போய் வர வேண்டியிருக்கிரது.

Computer தன் தலை விதியைநொந்தவாறே எரிச்சலுடன் நடையை எட்டிப் போட்டார். இருக்கிற சைக்கிளும் பஞ்சராகி ஒருவாரமாகிறது. அதைக் கவனிக்கக் கூட நேரமில்லை. எல்லாவற்றையும் தானே கவனிக்க வேண்டியிருக்கிறது.இந்தப் பிள்ளையாவது தலையெடுத்து சம்பாதித்து நாலு காசு பார்ப்பானா என்றால், அதுவும் நடக்கிற வழியாய்த்தெரியவில்லை. இத்தனைக்கும் ஒரே பிள்ளை. புத்திசாலி தான். நன்றாகத்தான் படித்திருக்கிறான்.

என்னவோ எம்.சி.ஏவாமே? எக்கச்சக்கமாய்க் காசு போட்டு வாங்கின கணினியும் வீட்டில் கல்லுப் பிள்ளையார்மாதிரி ஒரு மூஞ்சூறுடன் உட்கார்ந்திருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் அதில் என்ன தான் பண்ணிக்கொண்டிருக்கிறான்? இப்படி டயத்தை வேஸ்ட் பண்ணிக் கொண்டிருக்கிறானே?

"தொரைக்கு உக்காந்து சாப்பிடணும், பெரிய ஃபீசராவணும்னு மட்டும் ஆசை இருக்கு. நாட்ல வேலை எங்ககெடைக்குது? கம்ப்யூட்டர் வேலை, கை நிறையச் சம்பளம்னு ஃபாரீனுக்குப் போனவனெல்லாம் திரும்பி வந்துஇங்கே சிங்கிள் டீக்கு சிங்கியடிக்கிறானுங்க. வந்து கல்லாவுல உட்கார்ந்து கடையைக் கவனிடான்னா எங்ககேக்குறான்? கம்பூட்டர் படிப்பெல்லாம் கவைக்கு உதவாத வேலை"- ஷண்முகம் பிள்ளை தனக்குத் தானே பேசிக்கொண்டே நடந்தார்.

பல சரக்குக் கடையைப் பார்த்துக்கொள்வது கெளரவக் குறைச்சலாம். பழங்காலத்துக் கடையாம். கடையே மசாலாநாற்றம் அடிக்கிறதாம்

."நா அன்னிக்கி எங்க அப்பன் கிட்ட அப்படி சொல்லியிருந்தா இன்னிக்கு எல்லாருக்கும் வக்கணையா சோறுவருமா?"

-----------------------------------------------------------------------------------------------

வீட்டுக்குள் நுழைந்து ஷண்முகம் கை, கால் கழுவிக் கொண்டார். எரிச்சல் மட்டும் இன்னும் அடங்கவில்லை.

"எங்கடி உன் போக்கத்த பய புள்ளையக் காணும்? சோத்தைக் கொட்டிக்கிட்டு வழக்கம் போல ஊர் சுத்தக்கெளம்பிட்டானா? ஒரு வேலைக்குப் போவத் துப்பில்ல."

"அட, சித்த சும்மா இருங்க. சனிப் பெயர்ச்சில அவனுக்கு எல்லாம் சரியாய்டுமாம். சொந்த பிசினஸ்லயே பணம்கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போவுதாம்."

"இவ ஒருத்தி, பொசப்பத்த பொம்பளை, ஜோசியனை நம்பிக்கிட்டு ..."

வாயிற்பக்க அறையில் தலை சீவிக் கொண்டிருந்த கோவிந்தனுக்கு அப்பாவின் குரல் கேட்காமலில்லை. அவர்ஏசுவதும், பேசுவதும் புதிதில்லை என்றாலும், என்னத்தைப் பண்ணித் தொலைக்க? அவனுடன் எம்.சி.ஏ முடித்துஅமெரிக்காவில் வேலை பார்க்கப் போனவர்கள் கூட அங்கே செப்டம்பர் 11 கலாட்டாவுக்குப் பிறகு கூண்டோடுகைலாசமாகத் திரும்பி வந்து விட்டார்கள்.

இவனுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பையும் "ஒரே புள்ளை. அமெரிக்காவாவது, ஆப்ரிக்காவாவது, எங்கேயும்போக வேண்டாம்" என்று ஷண்முகம் பிள்ளை தடுத்து நிறுத்தி விட்டார். பையன் பலசரக்குக் கடையில் வந்துபக்கத்தில் உட்கார்ந்து, பரம்பரை பிசினசை எடுத்து நடத்த மாட்டேனென்கிறானே என்று அவருக்கு உள்ளூரஆதங்கம்.

"நான் படிச்சிருக்கிற படிப்பென்ன, எடுத்துக்கிட்ட டிரெய்னிங் என்ன? கடையில ஒரே பலசரக்கு நாத்தமாவருதுப்பா, கொமட்டுது" என்றால் அப்பா அடிக்கவே வந்து விடுவார். பிசினஸ் அவருக்குத் தெய்வம்.

கம்ப்யூட்டரை வைத்து ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டுமென்பது கோவிந்தனின் ஆசை. என்ன பண்ணலாம்?

கடையைக் கணினி மயமாக்கி டெர்மினல், ஸ்கேனர் எல்லாம் போடலாம் என்றால் அதையும் அப்பா தடுத்துவிட்டார். "தப்பித்தவறி உள்ளார வர்ரவனும், தாட் பூட்னு கம்பூட்டரைப் பார்த்தா, வெலை எல்லாம் அதிகம்னுநெனச்சி பயத்துல ஓடிப் போயிடுவாண்டா, மக்குப் பயலே. அதையெல்லாம் உன்னோட படிப்புல வெச்சுக்க. இந்தஊருக்கு அதெல்லாம் சரிப்படாது".

ஷண்முகம் பிள்ளை சாப்பிட்டு எழுந்து விட்டார். "எப்பப் பாத்தாலும் என்னடா அந்த முடியச் சீவிக்கிட்டு? காசுபண்றத்துக்கு மட்டும் ஒரு மசிரும் வழி தெரியலை. சிரைக்கப் போனா கூட நாலு காசு சம்பாரிக்கலாம்"

இன்று கொஞ்சம் கடுமையாகவே பேசி விட்டார். கடையில் ஏதோ ப்ராப்ளம் போலிருக்கிறது.

அப்பா சொல்வது கோவிந்தனுக்கு அவமானமாக இருந்தது. கண்ணாடியில் தன் தலை முடி அழகை மறுபடியும்பார்த்துக் கொண்டான். "ஆண்டவனே, ஒரு நல்ல வேலையோ, பிசினசோ கிடைத்து விட்டால் போதும், ஒருமொட்டை போட்டு இந்த அழகான முடியையே உனக்குக் காணிக்கை ஆக்குகிறேன்."

அட! அப்படிச் செய்தாலென்ன? இத்தனை நாள் ஏன் இது தோன்றவில்லை? கோவிந்தனுக்கு ஏற்பட்ட திடீர் ஐடியாஞானோதயத்தில், அவன் அப்பா தொடர்ந்து திட்டிக்கொண்டே வாசலில் இறங்கிப் போனது காதில் விழவில்லை.

நேராகத் தன் கணினி முன் சென்று அமர்ந்தான். கீபோர்டில் ஆழ்ந்தான்.

--------------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்காவின் கலிஃபோர்னிய மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஸான் ஹோசே. "இண்டியா ஜர்னல்"ஆங்கில தினசரி படித்துக்கொண்டிருந்த ரமேஷ், தன் மனைவி புவனாவைக் கூப்பிட்டான்.

"ஏய் புவனா, இந்த நியூஸ் படிச்சியா? நாட்ல கம்ப்யூட்டரை வெச்சுக்கிட்டு சாமர்த்தியமா என்னென்னபிசினசெல்லாம் பண்றாங்க, பாத்தியா? நம்ப இண்டியன்சுக்கே தனி சாமர்த்தியம். நானே மொதல்ல ஏதோஜோக்குன்னு தான் நெனச்சேன். ஆனாக்க ..."

புவனா அருகில் வந்து பேப்பரை எட்டிப் பார்த்தாள். "என்னங்க அது, ஈமொட்டை.காம்? பேரே சிரிப்பா இருக்கு.கிண்டல் பண்றாங்களா?"

"இல்லம்மா. சீரியஸ் நியூஸ் தான். எத்தனை பேரால லீவு போட்டுக்கிட்டு, பணத்தைத் தண்ணியா செலவழிச்சுக்கிட்டுபத்தாயிரம் மைல் தாண்டி இந்தியா போய் நேர்த்திக் கடனெல்லாம் கரெக்டா செய்ய முடியுது? வேண்டுதல்னுவேண்டிக்கிட்டுச் செய்யாட்டியும் தெய்வக் குத்தம்."

"அதுக்காக, இது என்னங்க இது? நாம்ப வேண்டிக்கிட்டா அவுங்க யாராவது மொட்டை போட்டுக்குவாங்களா?நல்ல கதையா இருக்கே? சாமி ஒத்துக்குமா?"

"சரியாப் படிச்சுப் பாரு. சின்சியராத்தான் பண்றாங்களாம். இந்த மாதிரி விஷயங்கள்ல பக்தியும், சின்சியரிட்டியும்தான் முக்கியம். நாம்ப சொல்ற கோவில்லயே, நாம சொல்ற தேதிக்கு, நாம செலக்ட் பண்ற ஆளுங்களுக்கு நம்பபேர்ல வேண்டிக்கிட்டு மொட்டைபோடுவாங்களாம். அந்த ஆளு, யாரு, எப்படி இருக்கணும்கறதையெல்லாம் கூடநாமே செலக்ட் பண்ணலாமாம். எல்லாத்துக்கும் தனித் தனி சார்ஜ். போட்டோ, பிரசாதம் எல்லாம்அனுப்புவாங்களாம்"

"போன வருஷம் உங்க அம்மாவுக்கு பயங்கரமா வயத்து வலி வந்து இங்க ஆப்பரேஷன் பண்ணினமே, அப்பநான் அவுங்களுக்காக வேண்டிக்கிட்டேன். உடம்பு சரியாப்போனா, அவுங்களை அழைச்சுக்கிட்டு திருப்பதிக்குப்போயி....அய்யோ, அடிக்க வராதே, புவனா. இரு, இரு. அந்தக் கம்பெனி சைட்ல போயிப் பாக்கலாம். அவுங்கடாடாபேஸ்ல உங்க அம்மா மாதிரியே அதே ஜாதி, அதே வயசுல ஈமொட்டை வாலண்டியர்இருந்தாங்கன்னாக்க..."

புவனாவுக்கு ரமேஷ் கிண்டல் பண்ணுகிறானா, இல்லை நிஜமாகவே அப்படிச் செய்யலாமா என்பது குழப்பமாகவேஇருந்தது. இப்போதெல்லாம் வெப் சைட் மூலமாகவே சினிமா டிக்கெட், இந்தியாவில் இருக்கும் அப்பாவுக்குபர்த்டே கிஃப்ட் ஆர்டர் செய்வது, ஃப்ளவர்ஸ் என்று என்னென்னவோ வாங்க ஆரம்பித்து விட்டோமே...

--------------------------------------------------------------------------------------

முதலில் அந்த ஈமொட்டை.காம் பிசினஸ் ஐடியா ஷண்முகம் பிள்ளைக்குப் புரியவில்லை. பையன் தன்னை ஏதோகேலி செய்கிறான் என்று தான் நினைத்தார். முறைத்தார்.

"என்னடா அறிவு கெட்டத்தனமா உளர்றே? சாமி விஷயம்டா இது. கிண்டலா பண்றே?"

"இதுல ஒண்ணும் தப்பு இல்லப்பா. திருப்பதிக்கு வேண்டிக்கிட்டவங்க, அங்க போக முடியலைன்னா,உப்பிலியப்பன் கோவில்ல முடி எறக்கிக்கலாம்னு சாஸ்திரம் இல்லையா? அந்த மாதிரிதான்பா இதுவும். நம்பஒண்ணும் தெய்வக் குத்தம் பண்ணலியே. ஃபாரின்ல இருக்கற இண்டியன் ஆளுங்க கேக்கறா மாதிரி சின்சியரானநல்ல மேட்சிங் ஆளுங்களைத்தான் செலக்ட் பண்ணிக் கம்பெனில வேலைக்கு வைக்கப் போறோம். அவுங்களுக்குபெர்மனெண்ட் வேலையும் கிடையாது.

எப்பப்ப எல்லாம் ஆர்டர் வருதோ, அப்ப மேட்சிங்கான ஆளுங்களாப் பாத்து மொட்டை போட்டு, அவுங்க படம்,பிரசாதம் எல்லாம் அனுப்பப் போறோம். அவுங்க கிட்ட ஆர்டர் எடுத்தவுடனேயே, டாலர்ல பணம் வாங்கிக்கிட்டு"

"அப்ப இந்த பிசினஸ்ல எவ்வளவு மொதல் போடணும்? என்ன கொள்முதல் எடுக்கணும்"

"அப்பா, இந்த பிசினசுக்கு அதெல்லாம் தேவை இல்லப்பா. நாணயம் தான் முதலீடு. அது எனக்கு நீங்கநெறையவே சொல்லிக் குடுத்திருக்கீங்க. கஸ்டமருங்க கேக்கறா மாதிரி ஆளுங்க கெடைக்கலேன்னா, ஃப்ராடுபண்ண மாட்டேன்பா. மொத கஸ்டமர் கெடைச்சதும் நானே திருப்பதிக்குப் போயி, மொட்டை போட்டுக்கிட்டுஆண்டவனை வேண்டிக்கிட்டுத்தான் ஆரம்பிக்கப் போறேன். அதுக்குள்ளாறயே ஃபாரின்ல இருந்துநூத்துக்கணக்குல புக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நானும் நம்ப டாடாபேஸ்ல ஆளுங்களைச் சேர்த்துக்கஆரம்பிச்சுட்டேன். இது ஒரு எலெக்ட்ரானிக் ஈ-பிசினஸ். www.emottai.com-னு வெப்சைட் ரிஜிஸ்டர்பண்ணிட்டேன்.

போப்பாண்டவருக்கு வேண்டிக்கிட்டுக் கூட இந்த மாதிரி நிறையப்பேரு வெப் மூலமா பிரார்த்தனைகளைநிறைவேத்திக்கிறாங்களாம். டெலிவிஷன்ல சாமி பார்த்தா நம்ப கன்னத்துல போட்டுக்கிட்டு வேண்டிக்கலை? அந்தமாதிரி .. இங்க சும்மா வேலை இல்லாம இருக்கறவங்களுக்கும் வேலை குடுத்தாப்லவும். வெளிநாட்ல இருக்குறநம்ப ஆளுங்களுக்கு இந்த மாதிரி நம்பிக்கை கலந்த தேவைகள் அதிகமா இருக்குப்பா. சாமி வேண்டுதலைஉடனேயே நிறைவேத்திட்டா எல்லாருக்குமே நல்லதுதானே?"

கோவிந்தன் பேசிக்கொண்டே போனான்.

-----------------------------------------------------------------------------------

எப்படி இருந்தாலென்ன, பிள்ளை தன் வாய் ஈரம் கொண்டு, வீட்டில் சும்மா இருக்கும் கணினியைக்கொண்டு,யாரையும் ஏமாற்றாமல்தானே பிசினஸ் ஆரம்பிக்கிறான். பலசரக்குக் கடையில் வந்து பக்கத்தில் உட்கார்ந்தால் தான்பிசினசா? இது சரிப்படவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சொந்தக் கடை. முயற்சி திருவினையாக்கட்டுமே?

"நான் அப்பவே சொன்னேன். நீங்க தான் கேக்கலை, திட்டினீங்க. பையனுக்கு சனிப்பெயர்ச்சி நல்லாவே வொர்க்அவுட் ஆயிடும் பாருங்க. மொதல்ல உங்களுக்கு ஒரு காரு வாங்கித் தரப் போறானாம்" என்றாள் திருமதிஷண்முகம்.

"சரி, சரி. அப்டியே ஃபாரின்ல யாருக்காச்சியும் பலசரக்கு சாமானுங்க, ஊறுகாயெல்லாம் ஹோல்சேலாவேணுமான்னு கேட்டு வைக்கச் சொல்லு. அப்டியே ஒரு எக்ஸ்போர்ட்டு பிசினசும் ஆரம்பிச்சுடுவோம். அதுக்கும்ஒரு சைட்டை அவனையே ரிஜிஸ்டர் பண்ணச் சொல்லு. கூடமாட நீயும் ஒத்தசை பண்ணு. அப்படியே நிக்காதமரமாட்டம்"

ஷண்முகம் பிள்ளை குடையை விரித்துக்கொண்டு வீதியில் இறங்கினார். அவர் நடையில்

இப்போது ஒரு துள்ளலும், புதுத் தெம்பும் கலந்திருந்தன.

- லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ( [email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X