For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெளரவ ஜெயில்- லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் NRI

By Staff
Google Oneindia Tamil News

NRI கோது மகா சமர்த்து.

NRI என்றால் Non Reliable Indian என்பார்கள் பலர். நாட்டுப்பற்று ரொம்ப இருக்குற என்பேன் நான். நம்ப ஆள்கோது அப்படித்தான்.

"கோது என்றெல்லாம் ஒரு பெயரா?" என்று கேட்கக்கூடாது.

சான் ஹோசே ஆபீசில் கோதண்டமங்கலம் பாலசுப்ரமணியன் ராமசுப்ரமணியன் என்கிற அவனுடையமுழுப்பெயரையும் ஒரேயடியாகச் சொல்லி ஒரு முறை அவனை முழுசாக அழைக்க முயன்ற அமெரிக்க மேனேஜர்நாக்கு சுளுக்கிக்கொண்டு நாலு நாள் பேயறைந்த மாதிரிச் சுருண்டு கிடந்ததிலிருந்து எல்லொருமாகச் சேர்ந்துஅவனை கோதுவாகச் சுருக்கி விட்டார்கள். ஏற்கனவே நத்தை மாதிரி சங்கோஜ சுபாவமுள்ள கோது, தன்ஒரிஜினல் நாமகரணத்தின் பக்தி விசேஷங்கள், பாப விமோசன மகிமைகள் பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லை.சொன்னால் மட்டும் அமெரிக்கர்களுக்குப் புரிந்து விடப் போகிறதா, என்ன?

பொன்னிறத் தலையுடனும் பாதி திறந்த பிறந்த மேனியுடனும் எந்நேரமும் அலையும் ரிசப்ஷனிஸ்ட் லண்டிவெண்டியைக் கூட நேராகப் பார்க்காமல் சில சமயம் சைடு போஸ் மட்டும் பார்ப்பான். தலை தூக்காமல், வேலைசெய்யும் நல்ல பிள்ளை என்று நான் சொன்னால் நம்புங்கள்.

கோதுவுக்கு ஒரே ஒரு பெண்டாட்டி, பாமா. புவனா என்று ஒரே ஒரு பத்து வயதுப் பெண். சின்னக் குடும்பம்.

தினமும் வேலை முடிந்து சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தால் கிச்சனில் மனைவி பாமாவிடம் ஏதேனும் தினப்படிப்பாட்டு வாங்கியபடி உதவி செய்வான். அமெரிக்க முறைப்படி சீக்கிரம் டின்னர் மம்மம், கொஞ்ச நேரம் டீவி,ரேஷனாக வாரம் ஒரு முறை கொஞ்சல் என்று அவன் வாழ்க்கை ஒரு நேர் கோட்டில் ஒழுங்காகத்தான் சென்றுகொண்டிருந்தது.

அப்படிப்பட்ட கோது அமெரிக்க ஜெயிலிலா? கேட்கவே நாராசமாக இல்லை?

கருப்பில் பெரிய கட்டம் கட்டமாகப் போட்ட கைதி கண்ணாயிரம் டிரஸ்ஸில் கோது சிறைக் கம்பிகளுக்குப்பின்னாலா? கலிபோர்னிய சிறைகளில் பளிச் ஆரஞ்சு நிறம் தான் யூனிஃபார்மாம். நினைத்தாலே கண் கூசுகிறது.கதை சொல்கிற எனக்கே கேவிக்கேவி அழுவாச்சியாக வருகிறது. படிக்கிற உங்களுக்கு எப்படி இருக்கும்?இருங்கள், கண்ணைத் துடைத்துக் கொண்டு மேலே சொல்கிறேன்.

அமெரிக்க ஜெயிலில் களியா? பீட்சாவா? கோதுவுக்குப் பிடித்த வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம் கிடைக்குமா?

தெரியவில்லை.

**********************

"ஆயிரம் பொய் சொல்லி ..." என்கிற வசனம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். "பில்லியன் கதை சொல்லி ..."தெரியுமா?

"பில்லியன் கதை சொல்லியாவது பிறந்த நாடு போய்க் கூத்தடி" என்பது கோது போன்ற பாவப்பட்டபர-தேசிகளுக்கென்றே ஏற்பட்ட அமெரிக்கப் புதுமொழி.

இந்தியாவை விட்டு வெளியே வந்த பிறகு தாய்நாடு போய்ச் சீராடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

அமெரிக்காவில் ஆனை சூப் கூட ஈசியாகக் கிடைக்கும். ஆஃபீசில் லீவு மட்டும் கிடைக்காது. கிடைத்தாலும்வருடத்திற்கு இரண்டே இரண்டு நக்கினியூண்டு வாரமென்பான் வெங்காயத் தலையன்.

"பரத கண்டத்துக்குப் ப்ளேனில் போய்ச் சேரவே மினிமம் 2 ப்ளேன் டிரான்ஸ்ஃபர், 1 லே ஓவர், மொத்தம் 3 நாள்ப்ளஸ் ஆகிறதே பாஸ். அப்புறம் எக்மோரிலிருந்து நான் எருக்கட்டாம்பட்டிக்குக் குல தெய்வத்தின் கோவிலுக்குக்காணிக்கை செலுத்த அழுக்கு ரயிலிலும், வேப்பெண்ணை பஸ்ஸிலும் செல்ல வேண்டியிருப்பதையும் கணக்கில்எடுத்துக் கொண்டால் ..." என்று நீங்கள் ஆரம்பிக்கலாம். ஆனால் அமெரிக்க பாஸ் கண்டு கொள்ளாமல் ஐஸ் டீகுடிக்கப் போயிருப்பான்.

அவன் கவலையெல்லாம் இன்றைய மக்டானல்ட்ஸ் லஞ்ச் பர்கர் 79 சென்டா, 99 சென்டா என்பதில் தான்.

பல பேச்சிலர்கள் கெஞ்சிக் கூத்தாடி 3 வாரம் லீவு கெஞ்சி வாங்கி, சென்னை வந்து, பெண் பார்த்து, அவசரமாகமயங்கி, அசடு வழிந்தபடி கல்யாணம் காட்சி, அது-இது எல்லாம் ஜெட்-லாக்குடனேயே முடித்து, மூன்றே வாரத்தில்தம்பதி சமேதராக அமெரிக்கா வந்திறங்கிப் பின் காலம் பூராவும் பேச்சு இலராய்ப் பர தேசத்தில் கஷ்டப்படுவதுஇன்றும் நடக்கிறது. நம் நாயகன் கோதுவும் அப்படிப்பட்ட ஒரு அப்பிராணியே.

அமெரிக்காவில் என்னவோ அசத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைக்காதீர்கள். அவன் படும் பாடு எனக்குத்தெரியும்.

புருஷன், பெண்டாட்டி இருவருக்கும் ஒரே நேரத்தில் தோதாக வேலையோ, வேலையிருந்தாலும் வெகேஷனோகிடைக்காததால், "என்றாவது ஓர் நாள் அந்த பாக்கியம் நிகழும், அன்று காண்பேன் என் தாய்ப் பொன்நாட்டைஅவளுடன் சென்று" என்று உறுதி பூண்டு காத்துக் காத்து வேஸ்டாய்ப் போனவர்கள் பல பேர்.

கோது மட்டும் தனியாய்ப் போய்வர பாமா விட மாட்டாள். ("வேலையே இல்லாதபோது வெகேஷன் என்னவேண்டிக் கிடக்கு, வெகேஷன்?", "இருக்கற ரெண்டு வாரத்துல மந்தவெளிக்கா போகணும்? நாம ஹவாய்போனதே இல்லையே?" "ஊருக்குப் போனாலும் எங்க மனுஷா வீட்டுக்கெல்லாம் வரவே மாட்டேம்பேளே? உங்கசொந்தக்காரா வீட்லயே சீராடணும்பேள். அதுக்குப் போகவே வேணாம், அடுத்த வருஷம் பாத்துக்கலாம்")

கோதுவின் பெண் புவனாவுக்கு மூன்றாவது வயதில் மொட்டை போடக்கூட லோக்கல் சலூனுக்குத்தான் போகமுடிந்தது. "ஒட்ட வெட்டிய முடியை ஜாக்கிரதையாக பார்சல் செய்து கொடு. என்றேனும் ஓர் நாள் நாங்கள் அதைஇந்தியாவுக்கு எடுத்துக் கொண்டு போய் ..." என்று கோது கேட்டதற்கு அந்த பார்பர் தடியன் சிரித்தான்.அவனுக்குத் தெரியுமா நம் முடி காணிக்கைக் கலாசார மகிமை? மொட்டையின் வலிமை?

"என்று காண்பேனோ என் சிங்காரச் சென்னையை? ஊர் முழுக்க ஃப்ளையோவர்ஸ் கட்டி இருக்கிறார்களாமே?புதிதாக சரவண பவன், சர்க்கரைப் பொங்கல் என்றெல்லாம் ஹோட்டல்களாமே?" என்றெல்லாம் தூக்கத்தில்பிதற்றும் அளவுக்கு கோதுவுக்குப் பிறந்த மண் பாசம் முற்றி விட்டது. "பழைய மாம்பலத்தின் புது வாசனையையும்,திருவல்லிக்கேணியின் புதிய, பெரிய சைஸ் கொசுக்களையும், மாடர்ன் ஓனிக்ஸ் குப்பை லாரிகளையும், நீரில்லாமைலாப்பூர் குளத்தையும் ஓர் முறையாவது மறுபடியும் பார்க்காமலேயே நம் வாழ்நாள் அமெரிக்காவில் முடிந்துவிடுமோ?" என்கிற பயம் அவ்னைப் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டியது.

"அப்படி ஊர்ல என்னதான் வெச்சிருக்கு மெட்ராஸ்ல? அடாவடி ஆட்டோவும், தொரத்தற சொறி நாயும்,தண்ணியே வராத கண்றாவிக் கொழாயும் எனக்கு மறக்கலை. உங்க பழைய தோஸ்துங்களோட சேர்ந்துண்டுரெண்டு வாரம் கூத்தடிக்கறதுக்கு அஞ்சாயிரம் டாலர் செலவா? சும்மா கெடங்கோ. எல்லாம் அடுத்த வருஷம்பாத்துக்கலாம்"

இதனிடையே இந்தியாவில் சில உறவினர்களின் கல்யாணப் பத்திரிக்கைகள் வந்தன. "வெறுமனே ஒரு க்ரீட்டிங்தந்தி- அதுவும் இண்டர்நெட்ல ஃப்ரீயாம்- அதுல மெசேஜ் குடுங்கோ, அது போதும்".

அவனுடைய பாட்டி செத்து விட்டதாக ஒரு தடவை செய்தி வந்தது. "பாட்டின்னு இருந்தா எல்லாரும் ஒருநாளைக்குப் போகவேண்டியது தான். அதுக்கெல்லாமா இந்தியா போக முடியும்?"

"நம்பளோட மைலாப்பூர் ஃப்ளாட்டுக்கு பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிக்கணுமே, நான் போய்ட்டு வரட்டா?"."அதுல வர வாடகை வெத்தலைக்கு சுண்ணாம்பு வாங்கவே பத்தாது. ஒண்ணும் வேண்டாம்"

இப்படியே வருஷா வருஷம் கேட்டுக்கேட்டுக் கலங்கிப்போன கோது சைலண்டாக மனத்தடியில் ஒருதிட்டமிடலானான். கார் ரேடியோவில் அவள் வருவாளா? அவள் வருவாளா? என்று உன்னி கேட்டுக்கொண்டேஇருந்தார்.

ஊஹூம், அவள் வர மாட்டாள். அவள் மாறிப் போய் விட்டாள். டாலர் பைத்தியம் அவளுக்குத் தலைக்கேறிவிட்டது. நமக்குத்தான் தாய்நாட்டுப் பாசம் பீச்சிக்கொண்டு அடிக்கிறது. எனவே நாம் தனியாகவாவது ஓர் முறைபோய் விட்டு வந்து விடுவோம் என்பதே அது.

பல மாதங்களாக ப்ளான் பண்ணி, அதற்குக் கை, கால், மூக்கு, காதுல பூ எல்லாம் நிறைய வைத்து, வருடக்கடைசியில் தான் இந்தியா போய்ச் சேர்ந்தே கவேண்டிய ஆஃபீஸ் கட்டாயத்தைத் தன் சகதர்மிணிக்கு அந்தவருஷ ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டலானான்.

அதைப்பற்றிப் பேச்செடுத்தாலே அவளுக்குக் குமட்டிக்கொண்டு வரும்.

"எதுக்கு இந்தியாவில போய் உங்க ஆஃபீஸ் ஒரு பிராஞ்ச் ஓப்பன் பண்ணணும்கறா?"

"அங்க தான் இனிமே பிசினஸாம். இங்க தான் எல்லாம் ஊத்தி மூடிண்டிருக்காளே"

வருடக் கடைசியில் என்று தானே புலம்பிக் கொண்டிருக்கிறார்? அதற்குள் ஏதாவது நல்லது நடக்காமலா போகும்?ஆபீஸ் வேலையே வருஷக் கடைசி வரையில் வேலை இருந்தால் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஆளுக்குஇருக்கும் ஞாபக மறதியில் காலப் போக்கில் அது மறந்தே கூடப் போகலாம் என்று பாமா மனப்பாலை-கிருமிகளற்ற ஆரோக்யா மாதிரி -குடித்து வந்தாள்.

அவனும் நேரம் கிடைக்குபோதெல்லாம், ஏன், கிடைக்காத போதும் கூட, வருடக் கடைசியில் சென்னை சென்றாகவேண்டிய கட்டாயத்தை, அலுவலக அவசியத்தை ஜனவரியிலிருந்தே ....உங்களுக்கு சிச்சுவேஷன் புரிந்துவிட்டதல்லவா?

அப்பாடி!

வருடக் கடைசியும் வந்தது. கோதுவும் ஒரு மாதிரியாக ஊருக்கு ஒரு டிக்கெட்டும் ரிசர்வ் பண்ணி விட்டான்.மறுநாள் இந்தியா கிளம்ப வேண்டும். சந்தோஷத்தை வெளிக்காட்டாமல் மனையாளைப் பிரிந்து ஊருக்குச்செல்லும் மணாளர் வைத்திருக்கவேண்டிய சோக முக பாவத்தை வெகு சிரமப்பட்டுக் கொணர்ந்து வந்திருந்தான்.

அப்பொழுது தான் அது நடந்தது.

****************

பாஸ்போர்ட்டை எங்கே வைத்தேன்?

ஊரில் நான் இல்லாதபோது காருக்கு யார் ஆயில் மாற்றுவார்கள்? ஒரு முறை இவள் ஆயிலை பெட்ரோல்டாங்கில் ஊற்றியவளாயிற்றே

இந்தப் பெட்டியும் சரியாகப் பூட்டாது போலிருக்கிறதே...

போன்ற கவலைகள், குழப்பங்கள் நிரம்பிய, ஊருக்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள் அவசரம்.

"இனிமேலும் பால் பாயிண்ட் பேனாவும், பழைய சாக்லேட்டும் கொடுத்து பஜனை பண்ணினால் உறவினர்கள்ஊரில் முகவாய்க் கட்டையில் மொத்துவார்கள். இந்தியாவிலோ இப்போதெல்லாம் எல்லாமே கிடைக்கிறதாம்,வேறு என்ன உருப்படியாக, அதாவது சீப்பாக, எடுத்துச் செல்லலாம்?" என்று யோசித்தபடி கோது மூட முடியாதபெட்டியின் மீது ஏறி நின்று கொண்டிருந்தான்.

போன் அடித்தது. "டாடி, உடனேயே ஸ்கூலுக்குக் கிளம்பி வா. எனக்கு இன்னிக்கு ரைட் (ride) கிடையாது"

வழக்கமாக அந்த சோனியாப் பெண் இவளைக் காரில் அழைத்து வருமே, இன்று என்ன ஆயிற்று?

"என்னம்மா ஆச்சு? ரைட் இல்லாட்டி என்ன? பஸ்ல வாயேன். நான் பிசியா இருக்கேன்"

"இல்ல டாடி. சோனியாஸ் கார் ஈஸ் மிஸ்ஸிங். யாரோ திருடிக்கிட்டு போய்ட்டாங்க. வி ர் ஸ்ட்ராண்டட். நாங்க நடுரோட்ல பேன்னு நிக்கறோம்"

சோனியா பற்றி உங்களிடம் சொல்லவே இல்லையே?

சோனியா என்பது மர்லின் மன்ரோ ஜாடையில், புஷ்டியான நல்ல எதிர்காலமுள்ள இளம் வெள்ளைக்காரப் பெண்குட்டி, கோதுவின் பெண்ணை விட ஒரு பத்து வயது மூத்தவள். அவனுடைய பெண்ணை ஸ்கூலிலிருந்து லிஃப்ட்கொடுத்து அழைத்து வரும் டிரைவிங் தெரிந்த ஒரு பெண்.

"சோனியாவின் அம்மா ஜெர்சி பசு மாட்டை விட இந்தக் குல்ஃபி கன்னுக்குட்டி படு சிலாக்கியம்" என்று ஒரு தடவைகோது பாமாவிடம் ஜோக்கடிக்கப்போய் மூன்று நாள் வெளியில் சாப்பிட நேர்ந்தது.

அய்யோ, அழகுச் சிலை சோனியாவின் கார் திருடு போய் விட்டதா?

"ஆல் ரைட். ரெண்டு பேரும் அங்கயே இருங்க. நான் வரேன் இப்பவே" கோது பதறினான்.

கார் காணாமல் போனதில் பயந்து போய், அழுது மூக்கு சிவந்திருப்பாளோ, அய்யோ பாவம் இந்த புஷ்டிசோனியாக் குழந்தை என்று கவலைப்பட்டபடி காரை வெகு வேகமாகச் செலுத்தினான்.

*******************

கோது செல்லவேண்டிய இடத்திற்கு மிக அருகில் நெருங்கியும் அங்கே போய்ச் சேர முடியாமல் கடைசியில் ஒருடிராஃபிக் லைட் அணைந்திருந்து அவனை அதிகமாக எரிய வைத்தது.

கன்ணுக்கெட்டிய ஸ்கூல் காருக்கெட்டவில்லை.

சாலையில் டிராஃபிக் லைட் எரியவில்லை என்றால் ஜாலி. அத்தனை பேரும் அத்தனை திக்குகளிலிருந்தும் படுவேகமாகப் பள்ளுப் பாடியபடி விரைவோம். மயிரிழையில் ஒருவரிடமிருந்து ஒருவர் தப்பித்து மகிழ்வோம்.ஆனந்தக் கூத்தாடி ஹாரனடித்து மகிழ்வோம்.

அதெல்லாம் நம் அருமை இந்தியாவில்.

பாழாய்ப்போன அமெரிக்காவில் அப்படி ஒரு ஆனந்த சுதந்திரம் இல்லவே இல்லை.

அத்தனை திசைக் கார்களும் டிராஃபிக் லைட் அணைந்து விட்டிருக்கும் அந்த நாற்சந்திக்கு வந்து.. நின்று....தங்கி......ஒருவரையொருவர் என்ன இப்படி ஆகி விட்டதே? ச்சொச்சொ என்ற கவலையோடு கலங்கிய கண்களால்நோக்குவார்கள். நமக்கு வலது பக்கமிருக்கும் வண்டிக்கு ரைட் ஆஃப் வே என்பது சட்டம். அக்கம் பக்கம் பார்த்துநீ முந்திண்டா நோக்கு, நான் பிந்திண்டா பேக்கு என்று எல்லோரும் மிக நியாயஸ்தர்களாக ஊர்ந்து போவார்கள்.

கோதுவும் இந்த சங்கடத்தில் அன்று மாட்டிக் கொண்டான். ஆயிரம் கார்கள் நின்றாலும் அமெரிக்காவில் மறந்தும்யாரும் ஹாரனை அமுக்கி ஆனந்தப்பட்டுவிட மாட்டார்கள். அப்படி ஒரு க. க. கட்டுப்பாடாம். கோது பல்லைக்கடித்துக் கொண்டான்.

ஒரு வழியாகத் தன் முறை வந்து, நால்வகைக் கார்கள் ஒருவரையொருவர் நிதானித்துப் பரஸ்பர குசலோபசாரம்முடிந்து கடைக் கண்ணால் கணித்துக் கடோசி கடைசியில் கோதுவின் முறை வந்தபோது சோனியாவின் செளந்தர்யபிம்பம் அவன் நெஞ்சில் முட்டி மோதிற்று.

அப்பாடி, ஸ்கூலை நெருங்கி விட்டோம், சோனியாவை ஒரு ஹீரோ மாதிரி காப்பாற்றி விடலாம் என்கிறசந்தோஷத்தில் ஆக்சிலரேட்டரை அவன் ஒரு அமுக்கு அமுக்க, கார் வேகமாகப் பறந்தது.

பறந்தது என்றா சொன்னேன். இல்லை. போலீஸ் வடிவில் விதி வந்து அவனை வெகு தூரம் பறக்க முடியாமல்அமுக்கி விட்டது.

*****************

ஆடம் ஸ்காட் புதிதாக போலீஸ் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகி இருந்தன. தன் புத்தம் புதுயூனிஃபார்ம் விறைப்பு, தோல் ஹோல்ஸ்டரில் கன் வாசனை, ஸ்குவாட் காரில் மல்டிகலர் லைட் மயக்கங்கள்அவனுக்கு இன்னமும் தெளியவில்லை. பள்ளியருகே செல்லக்கூடாத ஹை ஸ்பீடில் ஒரு கார் விரைவது கண்டஆடம் தன் போலீஸ் சைரனையும் கலர் கலரான விளக்குகளையும் ஆன் பண்ணிச் சீறியபடி கோதுவின் பின் வந்துஅவனை நிறுத்தப் பணித்தான்.

Trafficசென்னையில் போலிஸ்காரர்கள் மிக நல்லவர்கள். அதுவும் டிராஃபிக் போலீஸ்காரர்கள் தத்யோன்ன பரமார்த்தபுருஷர்கள். "அவரவர் வினையை அவரவர் அனுபவிக்கட்டும். இதிலெல்லாம் தலையிட நாம் யார்?" என்றுகீதோபதேசிகளாகத் திகழ்பவர்கள்.

அண்ணாமலைபுரம்=செயிண்ட் மேரீஸ் ரோடு சந்திப்பிலோ அல்லது ஆழ்வார்பேட்டை கார்னரிலோ இரண்டுடிராஃபிக் போலீஸ்காரர்கள் ரோட்டோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தால் என்ன பேசுவார்கள்? அவர்கள்நாட்டு நடப்பை அலசியபடி பல் குத்திக் கொண்டிருக்கலாம், அல்லது பரஸ்பரம் யாருடைய தொப்பை சைஸ்பெரியது என்று கனமாக விவாதித்துக் கொண்டிருக்கலாம்.

தப்பித்தவறி ஏதாவது ஆக்சிடெண்ட்டோ அடிதடியோ, ஓவர்ஸ்பீடோ அவர்கள் கண்ணில் பட்டு விட்டால் கூடஅவர்கள் பொறுமையுடன் கண்டுக்காமலிருந்து அந்த விவகாரம் தானாகவே ஒரு கணிசமான அளவு துட்டுபெயரும் முடிவு பெறும் வரை காத்திருந்து, பின்பே அதில் மூக்கை நுழைப்பார்கள். (சமீபத்திய ஃப்ரீலெஃப்ட்வியாபார விவகாரம் பற்றி நானும் கேள்விப்பட்டேன். அது விதி விலக்கு. அதில் பங்காளிகள் அதிகம். அதனால்ரூல்சும் வேறு.) "எந்த ஸ்டேஷன்யா நீயு? நம்பரு இன்னா? யார் காரு இது தெர்தா? கமிஷ்னர் நட்ராஜ் சார் கிட்டஒரு போன் போட்டு உன்னிய பரமக்குடி தாண்டிப் பஞ்சக்குடிக்குத் தூக்கி அடிக்கலைன்னா, மவனே, என் பேரு ..."

ம்ஹூம். அந்தப் பாச்சா இங்கே பலிக்காது.

கோது குழப்பமாக யோசிக்க ஆரம்பித்தான்.

கோதுவுடைய துரதிர்ஷ்டம் இங்கே இரண்டு வகைப்பட்டது.

முதலாவதாக, அந்தப் பிராந்தியத்தில் அப்போது டூட்டி போலீஸ் காரில் இருந்த ஆடம் ஸ்காட் காப்பொல்லாதவன். கோதுவை அவன் ஓவர்ஸ்பீடுக்காகத்தான் நிறுத்தினான். ஆனால் சற்று முன்னர், அதே ஏரியாவில்,பாங்க் ஃப் அமெரிக்கா பிராஞ்ச் ஒன்றில் ஒரு மெக்சிகன் திருட்டு கோஷ்டி ஹோல்ட் அப்- அதாவது துப்பாக்கிமுனையில் கொள்ளை- பண்ணிவிட்டதாக அவனுக்கு அவசர மெசேஜ் வந்திருந்தது.

அந்தத் திருடர்கள் தப்பித்துச் சென்றதாகச் சொல்லப்பட்ட காரும் கோதுவின் பழைய காரும் ஒரே ரகம், ஒரேமாடல், ஒரே அழுக்கு கலர்.

எல்லா மெக்சிகோ தேசத்து நபர்களையும் ஆண்டவன் இந்தியர்கள் மாதிரியே, அதே சாமுத்ரிகாலட்சணங்களோடு படைத்துத் தொலைத்திருப்பது கோதுவின் இரண்டாவது துரதிர்ஷ்டம். அதே ப்ரெளவுன் நிறம்,அதே கருப்புத் தலைமயிர். உப்பு, உறைப்பாக டாக்கோவும், பரீட்டோவும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் சாப்பாட்டுராம நல்ல குணம்.

அதே மணமா என்று நான் அவ்வளவு கிட்டப்போய் முகர்ந்து பார்த்ததில்லை. வேண்டாம், நீங்களும் ரிஸ்க்எடுக்காதீர்கள்.

இந்த சிச்சுவேஷனும் உங்களுக்குப் புரிந்து விட்டதல்லவா? புத்திசாலி வாசகர் நீங்கள்.

அவசரம், அழகு சோனியா, தகாராறு செய்து மூட மறுத்த பெட்டி, தண்ணித்துறை மார்க்கெட் சுகந்த ஞாபகம் என்றபலவித எண்ணங்களால் கலங்கியிருந்த கோதுவின் வலது மூளைக் கதம்ப நியூரான்கள் சற்றே அதிகம் அதிர்ந்துகுழம்பின.

"த பாருங்கண்ணா, லைசென்ஸ். பக்காவா இருக்கு. ரிஜிஸ்ட்ரேஷன் பேப்பர்செல்லாம் இங்க தான்ணா பத்திரமாவெச்சிருக்கேன்" என்று ஸ்நேகமாக சிநேகா மாதிரி சிரித்தபடி சொன்னால் போலீஸ்காரன் விட்டு விடுவான் என்றுநினைத்த கோது காரினுள்ளே முன் பக்க க்ளெளவ் கம்பார்ட்மெண்ட்டுக்குள் கை விட்டான்.

அங்கிருந்து ஒரு கன்னை எடுத்துத் திருடன் தன்னைச் சுடப் போவதாக நினைத்த ஆடம் "ஸ்டாப் இட்" என்றுஅலறினான்.

"இது ஏதடா வம்பில் மாட்டிக் கொள்வோம் போலிருக்கிறதே, இவனிடம் சரியாக விபரம் கூறி விடுதலை பெற்றுவிரைவோம்" என்று நினைத்த கோது தன் கதவைத் திறந்து கொண்டு கீழிறங்க முயற்சித்தான்.

நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் டர்ட்டி ஹாரியாகவே தன்னைக் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கும் ஆடம்ஸ்காட், மெகாஃபோனில் "பாங்க் ராபரி சஸ்பெக்ட்! ஹாண்ட்ஸ் அப். டோண்ட் மூவ். யு வில் பி ஷாட். ஹாண்ட்ஸ்பிஹைண்ட் யுவர் பேக்" என்று கத்தினான். துப்பாக்கியுடன் ஓடி வந்து அநாவசியமாகத் தார் ரோடில் ஒரு டைவும்அடித்துக் கோதுவைத் தரையில் தள்ளி ஏறி மிதித்துக் கோழிக் குஞ்சு மாதிரி அமுக்கிப் பின்னங்கைகளை நெருக்கிவிலங்கிட்டான்.

அடுத்த நிமிடமே அங்கே ஏழெட்டு ஸ்குவாட் போலீஸ் கார்கள் சைரனுடன் அலறிக்கொண்டே வந்து வந்து வந்துஹாலிவுட் சினிமா க்ளைமாக்ஸ் மாதிரியே கிறீச்சென்று பிரேக்கின. ஒரே வெளிச்சம், சத்தம், கூச்சல். உறையிருந்துவெளிவந்த கைத் துப்பாக்கிகள்.

வெடவெடுத்து நடுங்கிக்கிடந்த கோதுவைத் துப்பாக்கி முனையில் அத்தனை போலீசும் தூக்கி நிறுத்திமிரட்டினார்கள். வானில் ஒரு போலீஸ் ஹெலிகாப்டரும் ஸ்பாட் லைட்டுடன் சத்தமாக வட்டமடிக்க ஆரம்பித்தது.

ஸ்கூல் வாசலில் நின்றவாறு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன பள்ளிக் குழந்தைகள்.

"ஓ மை காட், தட் ஈஸ் மை டாடி! தட் ஈஸ் அவர் கார்" என்று அலறிய மிஸ். கோது தன் அப்பாவை நோக்கி ஓடிவந்தாள்.

கோது தன் முழுக் கதையையும் போலீசிடம் சொல்லி அவர்களும் பரஸ்பர மன்னிப்புக் கேட்டபிறகு அங்கிருந்துஅப்பாவும் பெண்ணும் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

வீடு திரும்புகையில் அப்பாவை முதலில் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்த பெண் திடீரென்று பலமாகச் சிரிக்கஆரம்பித்தாள்.

"என்னடி சிரிப்பு, அசந்தர்ப்பமா?"

"இந்த நியூஸ் கெடைச்சதும் அம்மா சாயங்காலம் என்ன ஆட்டம் ஆடப்போறான்னு நெனச்சேன், அதான்சிரிச்சேன். நாளைக்கு நீ ஊருக்கு வேற போயாகணும்"

ஓ மை காட்!

அநேகமாக இந்தியா டிரிப்பே அம்பேலாகி விட்டிருக்கக் கூடிய பேரபாயம் அப்போது தான் கோதுவுக்குஉறைத்தது. இதைப் பற்றி அம்மாவிடம் எதுவும் மூச்சு விடாமல் இருக்க, குட்டிச் சாத்தான் பெண் புவனாவிடம்கணிசமான தொகை ஒன்றுக்கு அவசர ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.

பெண்ணும் கை நீட்டி துட்டு வாங்கியிருக்கிறாள், காட்டிக் கொடுக்க மாட்டாள், போலீஸ்காரர்களும் மன்னிப்புகேட்டு விட்டார்கள். இந்த விவகாரம் வீட்டுக்குத் தெரிவிக்கப்படத் தேவையில்லை. இதை அப்படியே அமுக்கிவிடலாம்.

*******************

ஏர்போர்ட். செண்ட் ஆஃப்.

கோது ஊருக்குப் போகிறான் என்பதால் அவன் குடும்பமே ஏர்போர்ட்டில் ஆஜர். கோது, மிகவும் கஷ்டப்பட்டுமுகத்தைத் தொங்கப் போட்டுக்கொள்ள முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தான். "ஆஃபிஸ்ல எதுக்குத்தான்இப்ப இந்தியாவில ஒரு பிராஞ்ச் திறக்கணும்கறான்னு புரியல"

"ஆஃபீஸ் வேலை தானே? பரவாயில்லை. ஏதோ சொல்ல வர மாதிரி பேந்தப் பேந்த முழிக்கறேளே? எதானும்சொல்ல மறந்துட்டேளா?"

"இல்லியே. ஒண்ணுமே மறக்கலை. அந்த டிக்கெட்டு... ஆங்.. எடுத்துண்டுட்டேன்"

அந்த சீனுக்கு ஏற்றபடி கலங்கிய கண்களுடன் அவனைக் கட்டிக்கொண்டு புவனா அவன் காதில் சொன்னாள்"அப்பா, போனாப்போறதுன்னு உன்னை விட்டு வெச்சிருக்கேன். மேற்கொண்டு ஒரு அம்பது டாலர் வெட்றியா,இல்லை அம்மா கிட்ட இப்பவே போட்டுக் கொடுத்துடட்டுமா?"

கோது பாசத்துடன் குழந்தைக்குக் காசு கொடுத்தான்.

"என்னடி, அப்பாவ பிளாக்மெயில் பண்ற? எதுக்குப் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து அவளைக்கெடுக்கறேள்?"

"பாவம்டி, கொழந்தை. ஸ்கூல்ல ஏதானும் ஜவ்வு முட்டாய் வாங்கிச் சாப்பிடட்டும்"

*************************

கோது ஆஃபீஸ் வேலை நிமித்தமாக சென்னை போய்ச் சேர்ந்து வேலை உடனே முடியாமல் எக்ஸ்டெண்ட் ஆகி,அவன் டிசம்பரில் செல்ல நேர்ந்த கச்சேரிகள், டிராமாக்கள், கிளப்கள், நியு இயர் பார்ட்டிகள் பற்றியெல்லாம்இங்கே பட்டியலிடப் போவதில்லை. ஆனந்த பரமானந்தத்தில் திளைத்திருந்த அவனுக்கு அமெரிக்காவில் நடந்துமுடிந்திருந்ததெல்லாம் கனவு போல் மறந்தே போயிருந்தது-

ஒரு நாள் அவனுடைய கார்ட்லெஸ் திடீரென்று அலறும் வரை.

"அழுகுணித்தனம், தீசல்தனம், அப்பாவும் பொண்ணும் இதுல எல்லாம் ஒண்ணு" என்று ஆரம்பித்த புகார்ப்பத்திரிகையை புத்தாண்டு ஜனவரியில் அவன் காது நிறையவே கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டது.

"எப்படியோ ஒழிஞ்சு போங்கோ. ஒரே ஃப்ராடு நீங்க. எல்லாத்தையும் இப்பத்தான் கேள்விப்பட்டேன். கடங்காரன்உங்க கையில வெலங்கு போட்டுட்டானாமே? பாவி, ரொம்ப அடிச்சுட்டானா? அய்யோ, என் மானமே போறது.எந்தக் கழுதையோட கார் தொலைஞ்சு போனா உங்களுக்கு என்ன வந்துது? நீங்க என்ன ஜேம்ஸ் பாண்டா?ஃப்ரீவேல ஒரு தடவை என் கார் பங்க்ச்சர்னு உங்களக் கூப்டதுக்கு மூணு மணி நேரம் லேட்டா வந்தேளே? இப்பமட்டும் வழிஞ்சிண்டு எதுக்கு ஓவர்ஸ்பீடுல போய் மாட்டிக்கணும்? போலீஸ் புடிச்சதுக்கு கேஸ் போட்டிருக்கான்.முன்னூறு டாலர் ஃபைன். உங்களுக்காக கோர்ட்ல ரெண்டு எக்ஸ்டென்ஷன் வாங்கியாச்சு. இந்தியா போய்ட்டாஇங்க திரும்பி வரணும்கற நெனப்பே உங்களுக்கு சுத்தமா இல்லை. நா அவனைக் கெஞ்சிக் கூத்தாடினதுல 8 மணிநேரம் டிராஃபிக் ஸ்கூல் போனாக்க இதை விட்டுடச் சொல்றேன்னான். ஆனா அதுலயும் எதானும் பித்தலாட்டம்பண்ணினேள்னாக்க நேரா கம்பி எண்ண வேண்டியது தானாம். பிடி வாரண்டுக்கு நான் ஜாமீன் கையெழுத்துபோடமாட்டேன். வரும்போது மறக்காம அக்கா குடுத்த மொளகாய்ப் பொடி, பீப்பரி காஃபிப் பொடி, டெய்லர்கிட்டேயிருந்து என் புது ஜாக்கெட், ஓரம் அடிச்ச பொடவை ..."

கார்ட்லெஸின் பேட்டரி உருகி கோதுவின் காதைச் சுட்டதில் வியப்பில்லை.

************************

அமெரிக்காவில் டிராஃபிக் ஸ்கூல் என்பது ஒரு கெளரவ ஜெயில். அங்கே கோது ஏன் உம்மென்றுஉட்கார்ந்திருக்கிறான் என்பது உங்களுக்கு இப்போது தெரிகிறதா?

லைசென்சைப் பிடுங்கிக் கொள்வதற்கு முன் இப்படி ஒரு கெளரவ ஜெயில், போனால் போகிறதென்று வார்னிங்மாதிரி, கிளாஸ் ரூம் வசதியுடன் சாலை விதிகளெல்லாம் மறுபடி மறுபடி நினைவு படுத்துவார்கள். பலஆக்சிடெண்ட் டேப்புகளை விடியோவில் போட்டுக் காண்பித்துப் பயமுறுத்தி வாந்தி வரவழைப்பார்கள். எப்படிஇருந்தாலும் தண்டனை நேரப்படி அத்தனை நேரம் அந்தக் கிளாசில் இருந்தே ஆகவேண்டும். சிலருக்கு 12, 16மணி நேர சுகானுபவம் கூட தண்டனையாக வழங்கப்பட்டிருக்கும்.

நல்ல வேளை, கட்டம் போட்ட சட்டை, கைதி கண்ணாயிரம் குல்லாய் எல்லாம் கிடையாதாம்.

தண்டனைக் காலத்தைக் கைதிகள் முடித்து விட்டார்களென்கிற சிறப்பு சர்டிஃபிகேட்டை கோர்ட்டுக்கு அனுப்பிவைத்தால் டிரைவிங் ரெகார்டிலிருந்து இந்த விஷயத்தை எச்சல் தொட்டு அழித்து விடுவார்கள். அடிக்கடிஇதெல்லாம் செய்யவும் முடியாது. இரண்டு வருஷத்திற்கு ஒரு முறையே இந்தச் சலுகை. இல்லாவிட்டால்லைசென்ஸில் கரும் புள்ளிகள், அதனால் இன்ஷூரன்ஸ் ப்ரிமியம் எகிறல், இந்தியா போக முடியாதபடிகுடும்பத்தில் குழப்பம், கூச்சல், குமுறல்.

அடுத்த சென்னை விஜயத்துக்கு கோது என்ன பண்ணப் போகிறானோ, தெரியாது.

உதவுங்கள், ப்ளீஸ்!

********************

- லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ( [email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. ஈமொட்டை.காம்-


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X