For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாசிவராத்திரி 2020: கயிலையே மயிலை... ஏழு சிவன் கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர், மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 சிவ ஆலயங்களில் விடிய விடிய நான்கு கால அபிஷேகங்கள் நடைபெற்றன. தொண்டர்கள் கபாலீஸ்வரர் கோவில் தொடங்கி மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர் கோவில், காரணீஸ்வரர், வாலீஸ்வரர் கோவில் வெள்ளீஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் கோவில் வரை 7 சிவ ஆலயங்களுக்கும் விடிய விடிய சென்று வழிபட்டனர்.

மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

மயிலாப்பூரில் உள்ள சப்த சிவஸ்தலங்களான ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில், ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில், ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில், ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில், ஶ்ரீவாலீஸ்வரர் கோயில், ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில், ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்களுக்கும் சென்று நான்கு கால பூஜைகளுக்கும் தேவையான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்து இறைவனை தரிசித்தனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்கள் அனைத்தும் அற்புதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. கயிலாயத்திற்கு ஒப்பாக மயிலாப்பூர் சிவ ஆலயங்கள் காணப்பட்டன.

தீர்த்தபாலீஸ்வரர்

தீர்த்தபாலீஸ்வரர்

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இறைவனின் திருநாமம் தீர்த்தபாலீஸ்வரர், இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. மாசி மகம் தீர்த்தவாரியின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரர் தீர்த்தபாலீஸ்வரர் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார். அகஸ்தியர் தனக்கு ஏற்பட்ட நோய் நீங்குவதற்காக, இந்த ஆலயத்திற்கு எழுந்தருளி இறைவன், இறைவியை வணங்கினார் என்பது தல வரலாறு.

ஸ்ரீகாரணீஸ்வரர்

ஸ்ரீகாரணீஸ்வரர்

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர்

ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர்

காரணீஸ்வரர் கோவில் அருகிலேயே உள்ளது விருபாக்ஷீஸ்வரர் கோவில். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.

ஸ்ரீ மல்லீஸ்வரர்

ஸ்ரீ மல்லீஸ்வரர்

காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீ வாலீஸ்வரர்

ஸ்ரீ வாலீஸ்வரர்

மயிலாப்பூரின் காவல் தெய்வம் என்று கூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும்.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர்

ஸ்ரீ வெள்ளீஸ்வரர்

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகா விஷ்ணு வாமன அவதாரத்தின் போது கண் இழந்த சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீகபாலீஸ்வரர்

ஸ்ரீகபாலீஸ்வரர்

மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் ஏழாவதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றது. சிவராத்திரி நாளில் இந்த கோவில்களுக்கு சென்று தரிசிக்க முடியாதவர்கள் பிரதோஷம் நாளில் ஏழு சிவன் கோவிலையும் தரிசிக்கலாம்.

சென்னை சிவ ஆலயங்கள்

சென்னை சிவ ஆலயங்கள்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில், பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவில், அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் கோவில், பாடி வலிதாயநாதர் கோவில், பாடியநல்லூர் திருநிற்றீஸ்வரர் கோவில், புழல் திருமூலநாதசாமி கோவில், கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், அகத்தீஸ்வரர் கோவில்களில் நடைபெற்ற நான்கு கால பூஜைகளிலும் பக்தர்கள் பங்கேற்றனர்.

விடிய விடிய சிவ தரிசனம்

விடிய விடிய சிவ தரிசனம்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சென்னை மல்லீஸ்வரர் கோவில், எம்.கே.பி.நகர் ஈஸ்வரன் கோவில், கந்தகோட்டம் முருகன் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், திரிசூலம் திருசூலநாதர் கோவில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வர சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது விடிய விடிய பக்தர்கள் சிவ ஆலயங்களில் சிவனை வழிபட்டனர்.

English summary
Mylai is Kylai There are seven great Shiva temples in Mylapore, Chennai. Mylapore is Kailash itself! The Siddhas say that this is so only because of the seven great Shiva deities who grace this town. On Mahashivratri day people visted seven Shiva temple in Mylapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X