கொஞ்சி மகிழ பிள்ளை இல்லையா? ... புத்திர தோஷம் நீங்க காக்கைக்கு உணவிடுங்கள்!
சென்னை: பிள்ளை வரம் இல்லையே என்று பலரும் ஏங்குகின்றனர். திருமணம் முடிந்த தம்பதியர் அடுத்ததாக ஆண்டவனிடம் வேண்டுவது பிள்ளைச் செல்வத்திற்குத்தான். இன்றைக்கு பலருக்கும் குழந்தை வரம் கிடைப்பது தாமதமாகிறது.
குழந்தை பாக்கியம் எல்லோருக்கும் அத்தனை எளிதாகக் கிடைப்பதில்லை. அந்த பாக்கியம் சிலருக்குக் கிடைக்காமலே போய், அவர்களது வாழ்க்கை பெரும் போராட்டமாகவே மாறிவிடுகிறது. பிள்ளை பாக்கியம் இல்லாத காரணத்தால் சிலரது திருமணம் ரத்தாகிவிடுகிறது.
குழந்தை வரத்தை கடவுளிடம் கேட்ட காலம் போய் மருத்துவர்களிடம் லட்சக்கணக்கில் செலவு செய்து பெற வேண்டிய நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டிருக்கின்றனர். புத்திர தோஷங்களினாலும் பிள்ளைகள் கிடைப்பது தாமாகும். புத்திர தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும்.
தம்பதியரின் ஜாதக அமைப்பில் இவருடைய பூர்வ புண்ணியம் எனும் புத்திர ஸ்தானம் பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகனுக்கு இப்பிறவியில் தத்து புத்திர யோகம் மட்டுமே உண்டு அதுவும் ஜாதகர் செய்யும் குல தேவதை வழிபாட்டை பொறுத்து அமையும்
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகி இருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு.

பிள்ளை வரத்திற்கு தடை
புத்திர தோஷத்தினால் பிள்ளை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. புத்திர தோஷம் பலவகை சாபங்களினால் ஏற்படுகிறது. சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்,பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்,மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம், சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்,மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்,பிராமண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்,பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்,மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

தோஷம் நீங்க பரிகாரம்
ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், அல்லது திருப்பாம்புரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகு, கேதுவை தரிசனம் வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும். ராகு, கேதுவால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், வெள்ளியில் சிறிய நாகம் செய்து, மாரியம்மன் மற்றும் அம்மன், கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டால், தோஷம் நீங்கும்.

புத்திர பாக்கியம்
ஜாதகத்தில் செவ்வாய் பகவான் 5ஆம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒருமணி நேரம் தியானம் செய்ய வேண்டும். ஜாதகத்தில் சனி பகவான் 5ம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து ஒரு மணி நேரம் கோவிலில் தியானம் செய்ய வேண்டும். சந்திரனால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், பெண் சாபத்தாலும், தாயாரை சரியாக கவனிக்காததாலும் தோஷம் ஏற்படுகிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

புத்திர தோஷம் நீங்க பரிகாரம்
ஜாதகர் பிறந்த நட்சத்திரமும் அமா வாசையும் கூடும் ஒருநாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் 21 தடவை மூழ்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் நமச்சிவாயா என்று கூறி மூழ்க வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பின்பு புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை மனதில் நிறுத்தி ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். பின்பு அடுத்து வரும் அமாவாசை அன்று தனது சாதகம் சம்பந்தப்பட்ட கோவில் களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். எந்தக்கிரகத்தினால் புத்திர தோஷம் ஏற்பட்டதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.

குல தெய்வ வழிபாடு
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் செய்யலாம். புத்திர தோஷம் நீங்க 51 தீபங்கள் தீபங்களை நாகர் உள்ள எந்த தெய்வத்தின் முன்பும் ஏற்றி வரவேண்டும். நவதானிய சுண்டல் செய்து சிறுவர்களுக்கு அளிக்க நல்லது நடக்கும்.

யாகம் செய்தால் பலன்
புதன், சுக்கிரனால் புத்திர தோஷம் ஏற்பட்டிருந்தால் சிவனை வழிபடலாம்.திருவெண்காடு, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சென்று, உரிய வழிபாடு, பூஜைகள் செய்தால் சந்தான பாக்கியம் கிட்டும். சந்தானகோபாலரும் சந்தான பாக்கியம் தரவல்லவர். ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமிகளில் நடைபெறும் சந்தான கோபால யாகத்தில் பங்கேற்கலாம்.

முன்னோர்களுக்கு வழிபாடு
செவ்வாய், சனியால் ஏற்படும் புத்திரதோஷத்திற்கு முருகனுக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள் செய்யலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்வது சிறப்பு, வியாழக்கிழமை, திருச்செந்தூரில் அன்னதானம் செய்தால் புத்திர தோஷத்திற்கு மிகவும் நல்லது. ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். நம்முடைய முன்னோராக கருதப்படும் காக்கைக்கு தினமும் உணவு அளித்தால் தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!