
சனி பெயர்ச்சி பலன்: 2023ஆம் ஆண்டில் யாருக்கு நிம்மதி? ஏழரை சனி ஆட்டத்தால் யாருடைய வாழ்க்கை மாறும்
சென்னை: ஏழரை சனி காலத்தில் எத்தனையோ துன்பங்களை சந்தித்தவர்கள் 2023ஆம் ஆண்டு முதல் நிம்மதி பெருமூச்சு விடப்போகிறார்கள். காரணம் சனிபகவான் கும்ப ராசிக்கு அடுத்த ஆண்டு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவானால் சில ராசிக்காரர்கள் துன்பம் தொலைந்தது என்று சந்தோஷப்படப்போகிறார்கள். சிலரோ ஏழரை சனிபகவானின் பிடியில் சிக்கப்போகிறார்கள். யாருக்கு நிம்மதி? யாரெல்லாம் சனியால் சங்கடங்களை அனுபவிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
ஆணவக்காரர்களின் தலையில் தட்டி வைத்து சரியான தண்டனைகளைத் தருவார் சனிபகவான். நீதிமானாக திகழும் சனிபகவான் தனது தசாபுத்தி காலத்தில் பாடங்களைக் கற்றுத்தருவார். ஏழரை சனி காலத்தில் மட்டும் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படாது அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்டச்சனி காலத்திலும் சிலருக்கு கஷ்டங்களும் துன்பங்களும் வந்து போகும். வாழ்க்கையில் சோதனைகளைக் கொடுத்து அனுபவிக்க வைத்து படிப்பினைகளைத் தருவார் சனிபகவான்.
சனி நிகழப்போகும் சனிபெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆரம்பிக்கிறது. இதனால் சிலருடைய வாழ்க்கையில் திடீர் திருப்பங்களும், எதிர்பாராத மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்களுடைய ஜாதகத்தில் தசாபுத்தி நன்றாக இருந்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம்.
இந்தியாவில் அடுத்த 2 ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் - மதுரை கூட்டத்தில் சு.சுவாமி ஆரூடம்!

தனுசு
தனுசு ராசி குருபகவானின் வீடு. நெருப்பு ராசிக்காரர்கள். கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனியால் பட்டபாடு கொஞ்ச நல்லமல்ல. பெற்றோர்கள், உறவினர்கள், சுற்றத்தார் என பலரது எதிர்ப்புகளையும் சம்பாதித்து இருப்பீர்கள்.
சனிபகவானின் பிடியில் சிக்கிய நீங்கள் அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். குடும்ப ஒற்றுமை ஏற்படும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். கால்வலி பிரச்சினை தீரும் ஆரோக்கியம் கூடும். தேவையான தனவரவை தருவார். பணப்பற்றாக்குறை தீரும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். எடுத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். சனிபகவான் புதிய வேலையை தருவார். வெற்றியும் முன்னேற்றமும் தேடி வரும். பண ஆதாயத்தால் கௌரவம் உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே கடந்த 5 ஆண்டுகாலமாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கியிருக்கிறீர்கள். ஏழரை சனியில் உங்களை பிடித்திருந்த ஜென்ம சனி விலகப்போகிறது. சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. அடிக்கடி கால்களில் அடிபடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுகிறது. வீடு கட்டும் யோகம் தேடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் முடிவுக்கு வரப்போகிறது. கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். மன அழுத்தங்கள் நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவுக்கு வரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி முடிந்து இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் அதிகம் விரைய செலவாகவும் செய்திருப்பீர்கள். தலைமீது மிகப்பெரிய பாரம் வரப்போகிறது. காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் சனிபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் சின்னச் சின்ன தடைகளை கொடுத்து பின்னர் வெற்றிகளையும் தருவார் எனவே பயம் வேண்டாம். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொழில் தொடங்குவீர்கள். அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும். 2023ஆம் ஆண்டில் குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். அச்சமின்றி கடந்து விடுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார். மீன ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தலைமையில் எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி மறதி வரலாம் ஞாபகசக்தி குறைவினால் சிக்கல்கள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கவனம் தேவை. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பது அவசியம். வீண் வம்பு வழக்குகளுக்கு செல்லாதீர்கள்.

ஏழரை சனிக்கு பரிகாரம்
ஏழரை சனியின் பிடியில் சிக்கியிருக்கும் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு சனிக்கிழமைகளில் சனிபகவானை நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வணங்கினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பச்சரிசியை பொடியாக செய்து அதை விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை சுற்றி போடலாம். இதன் மூலம் அந்த பச்சரிசியை எறும்புகள் எடுத்துச்செல்லும் அதன் மூலம் ஏழரை சனியால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.