பங்குனி உத்திரம் நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசித்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்
சித்தர்கள் உலவும் சதுரகிரி மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
விருதுநகர்: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. எனவேதான் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு நான்கு நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர்.
இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

சதுரகிரி தரிசனம்
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.

நோய் தீர்க்கும் மூலிகை வனம் சதுரகிரி
காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.

மலை ஏறும்பக்தர்கள்
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன.

இரட்டை லிங்க தரிசனம்
இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

இரட்டை லிங்கம் தரிசனம்
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன்மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

நோய் நீக்கும் நாவல் ஊற்று
சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.
இதனையடுத்து பச்சரிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசனம் செய்யலாம்

கருப்பசாமி காவல்
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

சுந்தரமகாலிங்கம் கோவில்
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

சந்தனமகாலிங்கம் கோவில்
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார்.

லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இந்த அம்மனின் சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

கொடிய நோய்கள் நீங்கும்
இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.

நான்கு நாட்கள் தரிசிக்க அனுமதி
பங்குனி மாத பிரதோஷம், பவுர்ணமி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை தொடங்கி நான்கு நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று வணங்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம், சதுர்த்தசி, பங்குனி பவுர்ணமி நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்து அருள் பெறுவோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications