ஆடி அசைந்து வந்த அழகர் கோவில் திருத்தேர்.. கோவிந்த முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித் திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலமாக, கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக தேரில் பவனி வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். இந்த விழா மதுரையில் வெகுவிமர்சையாக நடைபெறும்.
அதேபோல் ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ் பெற்றது. அழகர் மலை கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அழகர் கோவில் ஆடித்திருவிழா
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் ஆடிபெருந்திருவிழா கடந்த 4 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் ஆலயத்தில் விழா நடைபெறும் நிலையில் ஒவ்வொரு நாளும், தங்க பல்லக்கில் எழுந்தருளி, அன்னம், கெருடவாகனம், சேஷ வாகனம், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி அளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆடித்தேரோட்டம்
இந்த ஆண்டு ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

2 டன் மலர்கள்
ஆடித்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. இரண்டு டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக பவனி வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா! கோவிந்தா என பக்கர்கள் எழுப்பிய முழக்கம் அழகர் மலை எங்கும் எதிரொலித்தது. 4 மாட தேரடி வீதிகள் வழியாக ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
சித்திரைத் திருவிழா போன்றே ஆடித் திருவிழாவும் அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ஏராளமானோர் மாட்டு வண்டி கண்டிக்கொண்டு வந்து தங்கள் குல தெய்வமான கள்ளழகரை தரிசனம் செய்தனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 13ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications