• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துணை பேராசிரியர்கள் நியமனத்தில்... இன்னும் எதற்கு பழமையான முறை...? -சிறப்புக் கட்டுரை

|

சென்னை: அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் துணைப்பேராசிரியர்கள் நியமன முறையில் மாற்றம் தேவை என கல்வியாளர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

என்ன மாதிரியான மாற்றம் தேவை என்பது குறித்து தனது கட்டுரை மூலம் இங்கு விளக்குகிறார் பேராசிரியர் ராஜபூபதி மணி.

அதன் விவரம் பின்வருமாறு;

''தமிழ்நாடு அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி அதற்காக சுமார் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளார்கள். தற்போது உள்ள யுஜிசி-2009 விதிகளின்படி பேராசிரியர் பணிக்கு PG, NET/SLET, PhD கல்வி தகுதி கட்டயத்தேவை. இதற்கு 9 மதிப்பெண்களும், தமிழ்நாடு உயர்கல்வி துறையால் நிர்ணயிக்கப்பட்டடுள்ள 7 வருடங்களுக்கு மேலான கற்பித்தல் அனுபவத்திற்கு 15, நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு 10 என மொத்தம் 34 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.''

 change is needed in the appointment of associate professors

''இந்த 7.5 வருட கற்பித்தல் அனுபவத்தை உயர்கல்வி துறை ஏற்படுத்திய காலத்தில் இருந்தே பேராசிரியர் பணிக்கு கடைபிடித்துகொண்டு வருகிறது. கற்பித்தல் அனுபவம் முக்கியமே, ஆனால் இந்த அனுபவத்தை, பாடத்திட்டத்தின் நுட்பத்தினை ஒருவர் 1-2 வருடங்களிலே பெற்றுவிடுவார். அதற்கு பிறகு அவர் நன்றாக பாடம் எடுப்பாரா, இல்லையா என்பது அவரது ஆர்வம் மற்றும் தன்பணியில் கொண்ட ஈடுபாட்டினை பொறுத்ததே. தொலை தொடர்பு வசதி, இணைய பயன்பாடு, குறைந்த எண்ணிக்கையிலான PhD முடித்தவர்கள், அறிவை வளர்க்க நூலகம் மட்டுமே இருந்த காலத்தில் தகுதியான பேராசிரியரை தேர்ந்தெடுக்க அதிக பணி அனுபவ தேவை என்பதை கருத்தில் கொள்ளலாம்.''

''இவ்வளவு தொலை தொடர்பு வசதி கொண்ட சகாப்தத்தில் 21 நூற்றாண்டு தேவைக்கான திறமைகளை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க தேர்வு செய்யும் பேராசிரியர்களை பழைய முறையின்படி இன்னும் தேர்ந்து எடுப்பது மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். யுஜிசி-2009 ல் PhD கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு பிறகு PhD முடித்தவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகமிக அதிகம். உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வுவின் படி மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் 2018 ம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 5800 PhD பட்டங்களை வழங்கி உள்ளது. எனவே அரசுக்கு பற்றாக்குறையின்றி திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் காலியிடங்களுக்கு அதிகமாகவே வெளியே காத்துகொண்டு இருக்கிறார்கள்.''

''ஒரு பொறியியல் கல்லுரியில் 7.5 வருட அனுபவம் பெற்றவரை கலை-அறிவியல் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு நியமிப்பது ஏதோ அடிப்படையிலே தவறாக தெரியவில்லையா? ஏனனில், பாடத்திட்டம் என்பது இரண்டிற்கும் முற்றிலும் வேறுபட்டது. பொறியியல் கல்லுரியில் 7.5 வருட அனுபவம் இருந்தாலும் அவர் பணி நியமனத்திற்கு பிறகு கலை- அறிவியல் கல்லூரியின் பாடத்தை முதன் முறையாகத் தான் எடுப்பார். இதிலிருந்து பணி அனுபவத்திற்கு கொடுக்கப்படும் முக்கித்துவம் மாறுதலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிகிறது.''

''இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி யில் துணை பேராசிரியர் பணிக்கு கற்பித்தல் பணி அனுபவம் முற்றிலுமாக தேவையில்லை. இப்பேராசிரியர்கள் உலக தரத்தில் இங்கு பாடம் கற்பிக்க வில்லையா? எத்தனை அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர்கள் தன் முதுநிலை படிப்பை ஐஐடியிலோ அல்லது வெளிநாடுகளிலோ படிக்கிறார்கள்? அரசின் தவறான அணுகுமுறையால் இந்த 7.5 வருட பணி அனுபவம் ஜெராக்ஸ் கடையின் வேலைக்கு தான் போட்டியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. ''

"கெத்து".. கமலை ஓவர்டேக் செய்வாரா சீமான்.. "அந்த" இடம் யாருக்கு.. ரிசல்ட்டை நோக்கி தமிழகம்..!

''தன் துறையில் தற்கால உலகம் எங்கு பயணித்து கொண்டு இருக்கிறது என்பதை இளம் மனங்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆராய்ச்சி அனுபவம் இன்றியமையானது. ஏனெனில் மேல்நிலைக் பள்ளிக் கல்வியில் உள்ளது போல் கல்விதுறையின் வினா வங்கி உயர்கல்வி தேர்விற்கு இல்லை. PhD என்பது தன் துறையில் உயர்ந்த பட்டம் எனினும், இப்படிப்புகாலம் தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள பெரும் ஒரு பயிற்சியே. PhD முடித்த பிறகு முதுமுனைவர் பணியை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டில் உள்ள ஆய்வகங்களிலோ பெற முடியும்.''

''திறமையான மற்றும் வெளிநாட்டில் கல்வி அனுபவம் பெற்றவர்களை பயன்படுத்தும் விதமாக இந்த 7.5 வருட கற்பித்தல் அனுபவத்தை 4-5 வருடமாக குறைத்து கண்டிப்பாக 2-3 வருட வெளிநாடு ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர்களை துணை பேராசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்க எவ்வித தயக்கம் இன்றி அரசு முன்வர வேண்டும்.''

''மேலும் G.O No. 32 படி நேர்முகத்தேர்வில் கற்பித்தல் திறனுக்கு வழங்கப்படும் 10 மதிப்பெண்களில் 5 மதிப்பெண்கள் ஆராய்ச்சி கட்டுரை பிரசித்ததற்கு வழங்கப்பட வேண்டும். எவ்வாறு கற்பித்தல் அனுபவம் எளிமையாக புரியும் வகையில் கற்பிக்க பயன்படுகிறதோ அதுபோல ஆராய்ச்சி கட்டுரைகளை நல்ல நேர்த்தியான பதிப்பகங்ளில் வெளியிட, தன் ஆய்வு முடிவுகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் சொல்லும் விதங்களை பொருத்தும் அமையும். இன்று உலகின் மிகப்பெரிய பணக்காரண எலோன் மாஸ்க் தன் நிறுவனங்களில் தற்கால ஆராய்ச்சி முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதனால் மட்டுமே இவ் உயரத்தை எட்ட முடிந்தது.''

 change is needed in the appointment of associate professors

''ஒரு நாட்டிற்கு எவ்வாறு இராணுவம் முக்கியமோ அதேபோல் கல்வித்துறைக்கு ஆராய்ச்சி முடிவுகள் முக்கியம் என்பதை உயர் கல்வி கொள்கை வகுப்பாளர்கள் உணர வேண்டும். கலை-அறிவியல் கல்லூரிகளில் இணைப்பேராசிரியராக பணி உயர்வு பெற எதற்காக ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்? துணைபேராசிரியர் பணியின் போது ஆராய்ச்சி செய்ய வில்லை எனில் எவ்வாறு இணைப்பேராசிரியராகி ஆராய்ச்சியில் ஈடுபட முடியும்? எதற்காக கல்லூரிகளில் முதுநிலை ஆராய்ச்சி துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது? எவ்வாறு கலை-அறிவியல் கல்லூரிகள் PhD பட்டம் மாணவர்களுக்கு வழங்குகிறது? அம்மாணவர்கள் எவ்வித ஆராய்ச்சி வசதியும் இல்லாமல் எங்கு தனது ஆராய்சியை முடித்தார்கள்? தன் பதவி உயர்வுக்காக மட்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனில் அறிவியலை அசுத்தப்படுத்துவதில் வளரும் நாடுகளின் பங்கு முக்கியமானது என்ற கூற்று உண்மையாகிறது. ஆராய்ச்சி மக்களின் பயன்பட்டிக்காக செய்ய படவேண்டுமே தவிர பணி உயர்வுக்காக அல்ல.''

''வருங்கால மாணவர்கள் அறிவுத் திறன் குன்றி இல்லாமல், தன் மேற்படிப்பிற்கு இந்தியாவின் மற்றும் உலகின் சிறந்த கல்வி நிறுவங்களின் இடம்பிடிக்க, உயர்கல்வியில் அதிக சேர்கை விகிதம் மட்டும் இன்றி திறன்மிகுந்த வேலை வாய்ப்புகளையும் பெற, தற்கால உலகம் பயணிக்கும் அறிவை பெற திறமையான, உலகளாவிய பணி அனுபவம் பெற்று உள்ள தகுதியான துணை பேராசிரியர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி அமர்த்த தமிழக உயர்கல்வி துறை தயாராக வேண்டும்.''

சிறப்புக் கட்டுரையாளர்

பேராசிரியர். ராஜபூபதி மணி

ஆல்டோ பல்கலைக்கழகம், பின்லாந்து

English summary
change is needed in the appointment of associate professors
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X