• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"சுனில்.. நான்தான்"... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (23)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

அதிகாலை 5 மணி இருக்கும்.. சுனிலுக்கு முழிப்பு தட்டியது. ராத்திரி சரியாகவே தூக்கம் வரவில்லை. நீண்ட நேரம் ப்ரீத்தியை நினைத்துக் கொண்டே இருந்தவனுக்கு 2 மணிக்கு மேல்தான் தூக்கமே வந்தது. ஆனால் அதிகாலையில் மீண்டும் விழித்துக் கொண்டான்.

அருகில் டேபிளில் இருந்த விளக்கைப் போட்ட அவன், செல்போனை எடுத்து ஆன் செய்தான். விரல்கள் தானாக ப்ரீத்தியின் எண்ணை டயல் செய்தது. வழக்கம் போல சுவிட்ச் ஆப்... மனதுக்குள் ஒரு சோர்வு.. அப்படியே நெட்டை ஆன் செய்தான்..

வாட்ஸ் ஆப் பக்கம் கண்கள் சென்றது.. அதை ஆன் செய்த அடுத்த சில நொடிகளில் புதிய எண் ஒன்றிலிருந்து ஒரு வீடியோ மெசேஜ் வந்திருப்பதைப் பார்த்து துணுக்குற்றான். அதை ஓபன் செய்தபோது.. அதில் ப்ரீத்தி!

Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 23

கண்ணெல்லாம் வீங்கிப் போய், அழுதபடி அதில் பேசியிருந்தாள் ப்ரீத்தி.

"சுனில்.. நான்தான்.. இது யாருடைய போன் என்று தெரியலை.. என்னை 5 பேர் சேர்ந்து கடத்தி வந்திருக்காங்க. அத்தனை பேருமே தமிழில்தான் பேசறாங்க.. 2 பேருக்கு 30 வயசுக்குள்ள இருக்கும். மத்த 3 பேரும் 40 வயசுக்காரங்க மாதிரி இருக்காங்க. எதுக்கு என்னை கடத்தியிருக்காங்கன்னு தெரியலை. நான் கேட்டதற்கு அதில் ஒருத்தன் என்னை நல்லா அடிச்சுட்டான். கையைத் தூக்க முடியலை.. இந்த போன் அந்த இடத்தில் கிடைச்சது.. அதில் வாட்ஸ் ஆப் இருந்தது. அதான் அனுப்பினேன்.. எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க.. என்னால முடியலை.. நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு.. தயவு செய்து காப்பாத்து சுனில்.. நான் தைரியமாத்தான் இருக்கேன்.. அதை விட உன் மேல ரொம்ப நம்பிக்கையா இருக்கேன்.. எப்படியாவது காப்பாத்து.. இதுவரை எந்தத் தப்பும் இங்க நடக்கலை.. தைரியமா இரு.. சீக்கிரம் வந்து என்னை காப்பாத்திரு.. லவ்யூ சுனில்" என்று முடிந்தது அந்த பேச்சு.

தூக்கி வாரிப்போட்டபடி எழுந்தான் சுனில். உடனே ஜெயசிங்குக்கு போனைப் போட்டான். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது.. துடைத்துக் கொண்டே போனை காதில் வைத்தான். நீண்ட நேரம் ரிங் போய் பின்னர் அட்டெண்ட் ஆனது.

"ஜெயசிங் ஹியர்"

"சார்.. நான் சுனில்.. சார் ப்ரீத்தி வீடியோ அனுப்பியிருக்கா சார்.. வாட்ஸ் ஆப்புல.. யாருடைய போனிலிருந்தோ அனுப்பிருக்கா. உடனே உங்களைப் பார்க்கணும் சார்"

"இஸிட்.. உடனே கிளம்பி என்னோட வீட்டுக்கு வாங்க.. அட்ரஸ் நோட் பண்ணிக்கங்க"

"ஓகே சார்.. வந்துர்றேன்"

முகவரியை குறித்துக் கொண்ட சுனில்.. மின்னல் வேகத்தில் டிரஸ்ஸை மாற்றிக் கொண்டு அம்மா இருந்த அறைக்கு ஓடினான். அம்மா அங்கே தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை எழுப்ப மனம் வரவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த அவன், பூட்டு போடாமல், மெயின் சாவியை வைத்து கதவை பூட்டிக் கொண்டான் (கதவை வீட்டுக்கு உள்ளிருந்தும் திறக்க முடியும்). பிறகு அம்மாவின் வாட்ஸ் ஆப்புக்கு தான் வெளியே செல்வதாகவும் விரைவில் வந்து விடுவதாகவும் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு பைக்கை கிளப்பி பறந்தான்.

அடையார், சாஸ்திரி நகர் 4வது தெருவில் ஜெயசிங்கின் வீடு. வீட்டை அடைந்த அவன் ஓட்டமும் நடையுமாக கதவை நெருங்கி காலிங் பெல்லை அழுத்தினான். 2 அழுத்தல்களுக்குப் பிறகு கதவு திறந்தது. போலீஸ் உடுப்பில் கதவைத் திறந்தார் ஜெயசிங்.

"வாங்க சுனில்.. திருவண்ணாமலைக்கு ரெடியாகிட்டு இருந்தேன்.. போனைக் கொடுங்க"

உள்ளே சென்ற இருவரும் இருக்கைகளில் அமர, செல்போனை ஆன் செய்து அந்த வீடியோவை ஆன் செய்து அதை ஜெயசிங்கிடம் நீட்டினான் சுனில்.

வீடியோவை நிதானமாக பார்த்தார் ஜெயசிங். 2, 3 முறை திரும்பத் திரும்ப பார்த்தார். பிறகு சுனிலிடம் திரும்பினார்.

"குட்.. இதுல நிறைய விஷயம் நமக்கு ப்ரீத்தி மூலமாக கிடைச்சிருக்கு. கடத்தல்காரர்கள் 5 பேர், ஐவரும் தமிழில் பேசியுள்ளதால் உள்ளூர்க்காரர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். வெளி மாநிலக்காரர்கள் யாரும் இதில் தொடர்பில்லைன்னு முதல் கட்டமா முடிவுக்கு வரலாம். "தப்பு" நடக்கலைன்னு சொல்லிருக்காங்க.. ஸோ, அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆபத்து வர வாய்ப்பில்லை. இது பணத்துக்காக நடத்தப்பட்ட கடத்தலா இருக்கலாம் அல்லது ஏதாவது பழிவாங்கலாக இருக்கலாம் அல்லது வேறு காரணம் இருக்கலாம். இந்த வாட்ஸ் ஆப் நம்பரை வச்சு முதல்ல இடத்தை டிரேஸ் அவுட் பண்ணலாம். கவலைப்படாதீங்க.. இந்த வீடியோ நமக்கு ரொம்ப உதவும்.. " என்று பேசிய ஜெயசிங்கின் முகத்தில் நம்பிக்கை தெறித்தது.

தனது செல்லிலிருந்து ஒரு எண்ணை அழுத்தினார் ஜெயசிங்.

"ராம்.. ஒரு செல்போன் வாட்ஸ் ஆப் நம்பர், அதிலிருந்து வந்த வீடியோ அனுப்பி வைக்கிறேன். நேத்து ராத்திரி 3 மணிக்கு மேல வந்திருக்கு. அந்த வீடியோ எங்க இருந்து வந்தது, அந்த போன் நம்பர் இப்போது ஆக்டிவாக உள்ள இடம் இது மாதிரி விவரம் தேவை. கிட்நாப் கேஸ்.. கடத்தப்பட்ட பெண்ணே இதை அனுப்பியிருக்காங்க.. அவங்க நம்பரையும் அனுப்பறேன்.. அதையும் டிரேஸ் அவுட் பண்ண முடியுமான்னு பாருங்க. அர்ஜன்ட்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் டீட்டெய்ல் தேவை"

"சுனில்.. டோன்ட் ஒர்ரி.. நிச்சயம் இன்னும் சில மணி நேரத்தில் ஒரு தெளிவு கிடைச்சிரும்.. தைரியமா இருங்க"

"நன்றி சார்.. இந்த வீடியோவைப் பார்த்ததுமே பதறிப் போய்ட்டேன். அவளை அடிச்சிருக்கானுக சார்.. அவனுகளை சும்மா விடக் கூடாது. பொம்பளையை கை நீட்டி அடிச்சிருக்கானுக ராஸ்கல்ஸ்.." என்று ஆக்ரோஷமாக குமுறினான் சுனில்.

அவனை அமைதிப்படுத்திய ஜெயசிங், "கூல் டவுன் சுனில்.. இன்னிக்குள்ள எப்படியும் இருப்பிடத்தை கண்டுபிடிச்சரலாம்.. அப்புறம் அவனுகளுக்கு கச்சேரி காத்திருக்கு.. கவலைப்படாதீங்க.. டீ சாப்படறீங்களா" என்று கேட்டபடி வீட்டுக்குள் குரல் கொடுத்து டீ கொண்டு வரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் வந்த டீயை கோபம் சற்றும் குறையாமல் வேகம் வேகமாக குடித்தான் சுனில்.

"சார்.. நீங்க திருவண்ணாமலை போறீங்களே.. நானும் வரட்டுமா.. என்னையும் கூட்டிட்டுப் போங்க சார். ப்ளீஸ்"

" இல்லை.. இப்ப இந்த வீடியோ வந்திருக்கே.. ஸோ.. முதல்ல இந்த வீடியோவைப் பத்தின டீட்டெய்ல்ஸை வாங்கிக்கலாம். அதன் பிறகு திருவண்ணாமலை பிளானை டிசைட் செய்யலாம். முடிஞ்சா உங்களையும் கூட்டிட்டுப் போகப் பார்க்கிறேன்.. பீ ரிலாக்ஸ்ட்.. இப்ப வீட்டுக்குக் கிளம்புங்க.. நானே டீட்டெய்ல் வந்ததும் கால் பண்றேன்" என்றார் ஜெயசிங்.

சரி என்று தலையாட்டிய சுனில், அரைகுறை மனதுடன் வெளியே வந்தான்.. நன்றாக விடிந்திருந்தது.. வழக்கமான காலை நேர பறவை ஒலிகள், வாகன சத்தங்கள், மக்களின் வாக்கிங்குகள் என சென்னை நகரம் தனது இயல்பை தொடங்கியிருந்தது.

சுனிலின் மனசுக்குள்தான் ஏகப்பட்ட அழுத்தங்கள்.. கைக்கு எட்டிய ஏதோ ஒரு தூரத்தில்தான் என்னுடைய ப்ரீத்தி இருக்கா.. எங்கே இருக்கான்னு தெரியலியே.. எப்படி இருக்கான்னு புரியலையே.. அடிச்சிருக்கானுகளே அயோக்கிய ராஸ்கல்ஸ் என்று நெஞ்சு குமுறியது.. பைக்கை எடுத்த அவன் எங்கு போவது என்று தெரியாமல் அப்படியே சாலை போன போக்கில் போனானான்.. .பெசன்ட் நகர் பக்கம் வண்டியை விட்ட சுனில்.. நேராக பீச்சில் போய் நின்றான்.

காலை நேரத்து கடற்கரை ரம்மியமாக இருந்தது. சுனில் மனதிலோ வெறுமை வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. தீராத வேதனையில் மணலில் போய் விழுந்தான். தூரத்தில் தெரிந்த கடலில் எழுந்த அலைகள் ப்ரீத்தியைப் போலவே சுனிலுக்குத் தோன்றியது.. என்னை வந்து கூட்டிக் கொண்டு போ.. வா வா .. வா சுனில் என்று அலை பாய்ந்து அழுவதைப் போல இருந்தது. வேதனை கண்களை முட்ட அப்படியே உடைந்து போய் அழுதான் சுனில்.. பீச்சுக்கு வந்தவர்கள் அவனை வித்தியாசமாக பார்ப்பதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. நீண்ட நேரம் அப்படியே அழுதபடியே கிடந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தான் என்று தெரியவில்லை. பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் சிணுங்கியதைக் கேட்டு அதைக் கையில் எடுத்தான் சுனில்.. அம்மா.

"ஹலோம்மா"

"எங்கப்பா போய்ட்டே காலையிலேயே.. என்னாச்சுடா.. ப்ரீத்தி குறித்த தகவல் ஏதும் கிடைச்சுதா"

"இல்லம்மா.. ஒரு வீடியோ வந்திருக்கு.. ப்ரீத்திதான் அனுப்பிருக்கா.. ஏதோ ஒரு இடத்துல அவளை அடைச்சு வச்சிருக்காங்க. அங்க இருந்த ஒரு போனை எடுத்து வீடியோ அனுப்பிருக்கா. மனசுக்கு கஷ்டமா இருக்கும்மா.. ஜெயசிங் சார் கிட்ட போய் வீடியோவைக் கொடுத்திருக்கேன்.. அவர் விசாரணைக்கு அனுப்பி வச்சிருக்கார். கொஞ்ச நேரத்துல வீடியோ எங்க இருந்து வந்துச்சுன்னு தெரிஞ்சிடும்மா.. அதான் அதையும் தெரிஞ்சுட்டு போகலாமேன்னு பீச்சுக்கு வந்துட்டேன்.. நீ கவலைப்படாம இரும்மா" என்று பேசிய சுனிலின் கண்களில் அழுகை வழிந்தோடிக் கொண்டிருந்தது. கேட்டுக் கொண்டிருந்த ரேவதியாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை.

போனை பேசி முடித்த சுனில் மீண்டும் ப்ரீத்தி அனுப்பிய வீடியோவை ஆன் செய்தான். அந்த வீடியோவை இப்போது ஒரு துப்பறிவாளனைப் போல ஆராய ஆரம்பித்தான்.

ப்ரீத்தியை விட்டு விட்டு அவளது சுற்றுப்புறங்களை ஆய்வு செய்தான். ஏதாவது தகவல் கிடைக்குமா என்ற நப்பாசை அவனுக்குள். அப்படியே பார்த்துக் கொண்டு வந்த அவனுக்கு ப்ரீத்தியின் பின்னால் இருந்த டேபிள் மீது கண்கள் நிலை குத்தியது.. வீடியோவை ஸ்டாப் செய்த அவன் அப்படியே ஜூம் செய்தான்.. டேபிளில் ஒரு பை இருந்தது. ஜவுளிக் கடைகளில் கொடுப்பார்களே அந்த கட்டப் பை.. அதில் இருந்த அட்ரஸைப் பார்த்த அவன் அதை இன்னும் ஜூம் செய்தான்.

"விஷ்ராந்தி ஸ்டோர்ஸ், புது வண்ணாரப்பேட்டை, சென்னை -600021."

அதைப் பார்த்த அவனுக்கு பொறி தட்டியது. பையில் சென்னை அட்ரஸ் இருக்கு.. அப்படின்னா இந்த இடம் சென்னையா இருக்க வாய்ப்பிருக்கா என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

ஒரு வேளை சென்னைப் பையை கையில் வைத்துக் கொண்டு வேறு ஊருக்குப் போயிருக்கலாம் இல்லையா என்றும் எதிர் கேள்வி கிளம்பியது. மண்டை குழம்பியது சுனிலுக்கு.. ஆனால் இதில் ஏதோ தட்டுப்படுவதாக அவனது உள்ளுணர்வு உசுப்பியது.

உடனே ஜெயசிங்குக்கு போனைப் போட்டான்.

"சார்.. நான்தான். அந்த வீடியோவில் ஒரு தகவல் இருக்கு சார்.."

"சுனில்.. நானே உங்களை கூப்பிடலாம்னு இருந்தேன்.. இந்த வீடியோ சென்னையிலிருந்துதான் அனுப்பிருக்காங்க.. ராயபுரத்திலிருந்து வீடியோ வந்திருக்கு.. ஸோ, ப்ரீத்தி சென்னையில்தான் அடைச்சு வைக்கப்பட்டிருக்காங்க. உடனே கிளம்பி நீங்க ஸ்டேஷனுக்கு வந்திருங்க.. க்விக்"

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X