For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (21)

Google Oneindia Tamil News

- சுதா அறிவழகன்

பூந்தமல்லி ஹைரோட்டை நோக்கி பறந்தது ஜீப்.

ஜீப்புக்குள் அமர்ந்திருந்த சுனிலின் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் அலை மோதின.

ப்ரீத்தி தன்னுடன் இல்லாத இந்த நிமிடம்தான் நரகம் என்று உணர்ந்தான். மனசு அனலாய் கொதித்தது.

காதலிக்க ஆரம்பித்த புதிதில் அவளுடன் பேசிய ஒரு உரையாடல் இப்போது நினைவுக்கு வந்தது.

"சுனில்.. ஒரு கேள்வி கேட்கட்டுமா"

"இல்லை, 2 கேள்வியா கேளு"

"விளையாடாதீங்க.. கேட்டா தப்பா நினைச்சுக்கக் கூடாது"

"நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களா"

"ஏன் அப்படி கேட்கறே"

"இல்லை.. நல்லா பேசறீங்க.. ஸ்மார்ட்டாவும் இருக்கீங்க.. காமெடி சென்ஸும் இருக்கு.. பெண்கள் விரும்புற எல்லா விஷயமும் உங்க கிட்ட நிறையவே இருக்கு.. ஸோ.. ஏதாச்சும் இருந்துச்சா.. இப்ப இல்லாட்டியும்.. படிச்சப்போ.. அந்த மாதிரி"

"ம்ம்.. இதுக்கு எப்படி பதில் சொல்வது.. நான் உண்மையில் யாரையும் காதலிக்கலை.. ஆனால் என்னை சிலர் காதலிச்சாங்க."

"அப்படீன்னா"

"அப்படீன்னா.. அது அவங்களோட ஒரு தலைக் காதல்.. நான் ஏத்துக்கலை.. காலேஜ் படிச்சப்போ என்னோட வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்த பொண்ணு.. என் கிட்ட தன்னோட காதலைச் சொன்னா. அப்போ எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. படிப்பே முடிக்காத என் கிட்ட என்ன தகுதி இருக்குன்னு காதலிக்கிறதா சொல்றே.. தகுதி இல்லாத எதுவுமே நிலைக்காது. அழகும், பேச்சும்தான் காதல்னா.. அது நிச்சயம் காதலே கிடையாது.. அதுக்குப் பேரு இன்ஃபாக்சுவேஷன்.. அதுவும் நிலைக்காது. நாளைக்கு என்னை விட அழகான ஒருத்தன் வந்தா மனசு அந்தப் பக்கம் ஷிப்ட் ஆயிடும்.. ஸோ.. என்னை விட்ரு. நீயும் நல்லா படி.. நானும் நல்லா படிக்கணும்.. எனக்கு என்னோட எதிர்காலம் முக்கியமா தெரியுதுன்னு சொல்லிட்டேன்"

"ஓ.. அப்புறம்"

"அப்புறம்.. வேலையில் சேர்ந்தப்போ என்னோட ஆபீஸ்லேயே ஒரு பொண்ணு என் கிட்ட நல்லா பழகினாங்க.. பட். எனக்கு இன்டரஸ்ட் வரலை. அவங்க நல்ல மெச்சூர்ட்தான். காதலை வெளிப்படையா சொல்லலை. பட் உணர்த்தினாங்க.. ஒரு முறை இரண்டு முறை இல்லை, பலமுறை. நானும் புரிஞ்சுக்கிட்டேன். ஆனால் என்னவோ விருப்பம் வரலை. அதை நானும் பக்குவமா, அவங்க மனசு புண்படாத வகையில் உணர்த்தினேன். அவங்களும் அதை புரிஞ்சுக்கிட்டாங்க.. அமைதியாகிட்டாங்க.. இன்னும் என் கூடதான் வேலை பார்க்கிறாங்க.. ரொம்ப கண்ணியமானவங்க.. இப்போ கல்யாணம் ஆயிருச்சு.. Gentlewoman"

"கிரேட்.. பிறகு ஏன் என்னைக் காதலிச்சீங்க சுனில்"

"அதுதான் தெரியலை.. நிச்சயம் அழகு காரணம்னு நான் சொல்ல மாட்டேன். அழகு இருக்குதான்.. ஆனால் அதைத் தாண்டி மனசுக்குள்ள ஒரு ஈர்ப்பு உருவாச்சு உன்னைப் பார்த்த முதல் நொடியிலேயே. இது சினிமாத்தனமாக இருக்கலாம். ஆனால் உணர்ந்தது உண்மை. அன்னிக்கு நாம போட்ட சண்டை கூட ரொம்ப சாப்ட்டாதான் இருந்துச்சு. அதை நீ கவனிச்சியான்னு தெரியலை. எனக்குள்ள ஏதோ உணர்வு அப்ப தோணுச்சு. அது காதல்னு கூட எனக்கு அப்ப தெரியல்லை. நாம காதலிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அதை நானும் உணர்ந்தேன். அதேசமயம், உனக்கும் என் மேல ஒரு அபிப்பிராயம் வந்திருச்சுன்னும் பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அதாவது இருவருமே ஒரே மாதிரியான மன நிலையில் நம்மோட முதல் சந்திப்பிலேயே இருந்திருக்கோம்.. அதை காதல்னு புரிஞ்சுக்க நமக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டிருக்கு"

"உண்மைதான் சுனில்.. என்னோட வாழ்க்கையில் நான் பலரை சந்திச்சிருக்கேன். என்னிடமும் நிறையப் பேர் காதலைச் சொல்லிருக்காங்க.. ஏன் நானே கூட சிலரைப் பார்த்து இவர் போல புருஷன் கிடைச்சால் நல்லாருக்குமேன்னு கூட நினைச்சிருக்கேன்.. ஸாரி.. எனக்கு உண்மையா பேசத் தோணுது.. அதான் வெளிப்படையா சொல்றேன் சுனில்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. பட் அந்த எண்ணமெல்லாம் அடுத்த சில விநாடிகளில் போய் விடும். நீங்க சொன்ன மாதிரி அதெல்லாம் இன்ஃபாக்சுவேஷனா கூட இருந்திருக்கலாம். ஆனால் உங்க விஷயத்தில் நான் டோட்டலா மாறிப் போயிட்டேன்"

Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 21

"அப்படி என்ன என்னிடம் உன்னை ஈர்த்தது ப்ரீத்தி"

"தெரியலை.. ஏதோ ஒரு சார்ம்.. அழகா. பேச்சா. குரலா. குழந்தைத்தனமா. அறிவா.. எதுன்னு சொல்லத் தெரியலை.. ஆனால் மனசுக்குள்ள ஒரு தென்றல் மாதிரி குடியேறிட்டீங்க. அதை உணர்ந்தேன். பிறகுதான் உங்களிடம் ரொம்ப நெருங்க ஆரம்பிச்சேன். வெட்கத்தை விட்டு நானே வந்து என்னை உங்களிடம் வெளிப்படுத்தவும் அதுதான் காரணம். அதுக்காக நான் கொஞ்சம் கூட தயங்கவில்லை. யோசிக்கலை.. முடிவு பண்ணிட்டுத்தான் உங்ககிட்ட வெளிப்படுத்தினேன்"

"உண்மைதான்.. ஆனால் நான்தான் லைட்டா டியூப்லைட்டா இருந்திருக்கேன்.. உடனே புரியலை எனக்கு"

"அப்ப மட்டும் இல்லை.. இப்பவும்தான்"

"எது..?"

"டியூப்லைட்".. பகபகவென அவள் சிரித்தபோது அந்த இடமே நந்தவனம் போல தெரிந்தது சுனிலுக்கு.

"எனக்கு இப்ப ஒரே ஒரு ஆசைதான் சுனில்"

"என்ன ப்ரீத்தி"

"கடைசி வரை பிரியக் கூடாதுன்னு எல்லோரும் சொல்வாங்க.. ஆனால் நான் அப்படிச் சொல்ல விரும்பலை.. நமக்கு கடைசி என்ற ஒன்றே இருக்கக் கூடாதுன்னு ஆசைப்படறேன்"

"அது இயற்கைக்கு முரணானது ப்ரீத்தி.. கண்டிப்பாக முடிவு உண்டு எல்லோருக்கும்.. முடியும் வரை இணைந்திருப்போம்.."

"என்னால உங்களைப் பிரிஞ்சு இருக்க முடியாது சுனில்.. கனவுல கூட அதைப் பத்தி நினைக்கவே முடியலை.."

"க்ரீச்ச்ச்ச்ச்ச்"

திடீரென டிரைவர் போட்ட சடர்ன் பிரேக்கில்.. நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த சுனில் நிஜத்துக்கு வந்தான். ப்ரீத்தியின் அருகாமை இல்லாத அந்த வெறுமை அவனது கண்களில் மீண்டும் நீரூற்றை திறந்து விட்டது. கண்ணை கையால் மூடிக் கொண்டு அழுதான்.

ஜீப் அயனாவரம் காவல் நிலையம் முன்பு நின்றது.. இறங்கி வேகமாக உள்ளே போனார்கள். அங்கு சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் காத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் சென்ற ஜெயசிங், " சொல்லுங்க பரந்தாமன்"

"ஸார்.. இந்தக் கார் ஆந்திராவைச் சேர்ந்தது.. சித்தூர் பக்கம் ஒரு ஊரிலிருந்து கார் ஒன்று காணாமல் போய் புகார் கொடுத்திருக்காங்க. அந்தக் கார்தான் இது. காரைக் கடத்திய கும்பல், நம்பர் பிளேட்டை மாத்தி நம்ம ஊருக்குள்ள வந்திருக்காங்க.. இதுல உள்ள நம்பர் டூவீலருடையது. அந்த டூவீலர் புதுப்பேட்டைக்கு வண்டி பிரிக்க வந்த பழைய டூவிலர். அந்த நம்பர் பிளேட்டை இதில் மாட்டி கடத்தலுக்குப் பயன்படுத்தியிருக்காங்க. அந்த நம்பர் பிளேட்டை 1000 ரூபாய்க்கு விற்பனை பண்ணிருக்காங்க. விற்ற நபரை தூக்கியாச்சு. பட், அந்தாளுக்கு வாங்குனது யாருன்னு தெரியலை. அவன் பொய் பேசலை"

"என்ன நோக்கத்திற்காக ப்ரீத்தியை கடத்தியிருக்காங்க"

"அது தெரியலை சார்.. விசாரணையை முடுக்கி விட்டிருக்கோம்.. கார் போகும் திசையை வச்சுத்தான் ஒரு அனுமானத்திற்கு வர முடியும். பெங்களூர், ஆந்திரா இந்த இரண்டு பக்கமும் செல்லும் அத்தனை சாலைகளிலும் உள்ள ஸ்டேஷன்களுக்கு அலர்ட் கொடுத்தாச்சு. எல்லா பக்கமும் வெஹிக்கிள் செக் நடந்திட்டிருக்கு. நிச்சயம் சில மணி நேரத்தில் நமக்கு உருப்படியான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு சார்"

"இந்தக் கார் கடைசியா எங்கு பார்க்கப்பட்டது"

"பூந்தமல்லி ஹைரோடு சார். ஆனால் அது ஆந்திரா நோக்கி போயிருக்க வாய்ப்பிருக்கு.. "

"கர்நாடகா சைட் போகக் கூட வாய்ப்பிருக்கே..."

அப்போது செல்போன் அழைப்பு குறுக்கிடவே.. அதை எடுத்து காதில் வைத்தார் பரந்தாமன்.

"ஹலோ.. சொல்லுங்க.. அப்படியா.. எப்போ.. சரி.. எத்தனை பேர்.. ஓ.. சரி எனக்கு ஃபுட்டேஜை அனுப்பி வைங்க. நான் அங்க வர்றேன்"

ஜெயசிங்கிடம் திரும்பிய பரந்தாமன் "சார், ராணிப்பேட்டை டோல்கேட்டை இந்தக் கார் கடந்துருக்கு.. சிசிடிவி ஃபுட்டேஜ் கிடைச்சிருக்கு"

"ஓ.. .பார்டர் காவல் நிலையங்களை இம்மீடியட்டா அலர்ட் பண்ணுங்க. இவனுகளை விடக் கூடாது."

உத்தரவிட்ட ஜெயசிங்கின் செல்போன் அலறியது. எடுத்து காதில் வைத்த ஜெயசிங் மறு முனையில் வந்த தகவலைக் கேட்டு அதிர்ந்தார்.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 19 20 ]

English summary
Nilavukku Neruppendru Peyar, New Tamil series Written by Sutha Arivalagan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X