For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 22... "தேவதூதன்"

Google Oneindia Tamil News

அன்றைக்கு என்னுடைய பிறந்த நாள் ..திடீரென்று எண்ற ஊட்டுக்காரர் "இந்தா புடி ..."னு சொல்லி ஒரு சாவியை என் கையில் குடுத்து "அப்பாட்மெண்ட் கீழே போயி பாரு" ங்கிறாரு ..எனக்கோ குழப்பம் ...பிறந்த நாள் பரிசு என்ன டேங்கர் லாரிலயா வந்திருக்கு !னு கிண்டலா கேட்டுகிட்டே லிப்ட்ல இறங்குறேன் ..கீழ போயி பாத்தா புத்தம் புதுசா இரு சக்கர வாகனம் .அட ! எனக்கா ? ம்ம் ங்கிற மாதிரி தலையை ஆட்டுகிறார் .

என்னடா இது முன்னபின்ன ஓட்டுனது இல்ல ..கையில இரண்டரை வயது ஜெர்ரி குட்டி வேற ! ஒரு பக்கம் சந்தோசம் ...இந்த சென்னைலயா ...நானா ?! வண்டி ஒட்டவா ?! னு ஒரு பக்கம் என்னென்னவோ யோசனை .ஆமாங்க இங்க இருந்து முக்கு திரும்புறதுக்கே நூறு ரூவா கேக்குற ஆட்டோகாரர்கள் ...அதுவும் உள்ளூர்காரன் , ரூட்லாம் நல்ல தெரிஞ்சிகினோம்னா நூறு அல்லாங்காட்டி இருநூறு ! இதுதான் சென்னை ! ஒவ்வொன்னுக்கும் ஆட்டோவை எதிர்பாத்து இருக்க முடியாது இல்லையா ..மேலும் என் கணவர் வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்க கூடியவர் .அதுவும் வண்டி வாங்க ஒரு முக்கியமான காரணமாக அமைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் .

Sillunnu Oru Anubavam Devathoothan written by Vijaya Giftson

எட்டாப்பு படிக்கும் போதே அப்பா பி. எஸ் . ஏ சைக்கிள் வாங்கி குடுத்துவிட்டார்கள் .அவர்களும் நாங்களும் சில வருடங்கள் வேலை காரணமாக வெவ்வேறு இடங்களில் தான் வசிக்க நேரிட்டது .. ஆமா அப்புறம் தம்பிக்கும் , தங்கச்சிக்கும் , ரப்பர் , பென்சிலு , நோட்டு , புத்தகம் , செராக்ஸ் , எடுக்க -- அம்மாக்கு வீட்டு சாமான் வாங்கனு எல்லாமே அதுலதான் .. மை பர்ஸ்ட்டு பெஸ்ட்டு ப்ரண்டு யாருனு கேட்டா நா என்னுடைய சைக்கிளைத்தான் சொல்லுவேன் ..முன்னாடி அழகா ஒரு கூடை வேற வைத்திருப்பார்கள் ..அவ்வளவு சாமானையும் வாங்கி அதிலே போட்டு கொண்டு "அந்த நாள் முதல் இந்த நாள் வரை --வானம் மாறவில்லை !

வான் மதியும் மீனும் கடல் காற்றும் நதியும் மாறவில்லை ..மனிதன் மாறிவிட்டான் ..மதத்தில் ஏறிவிட்டான் " னு பாட்டு பாடிகிட்டே வீட்டுக்கு வந்து சேர்வதெல்லாம் பெரும்சுகம். வெளிய போகும் போது அநேகமாக பாக்கட் மணி ஒரு ரூபாய் தருவார்கள்..அதுவும் ஏதாது ஒரு டயர்ல காத்து போச்சுன்னா அடைக்கதுக்குதான் ! மிச்சம் இருந்தால் அன்றைக்கு இலந்தைபழ அடையோ அல்லது கல்கோனாவோ அந்த காசில் உபயம் !

அப்போதெல்லாம் காத்து அடைக்க ஐம்பது பைசா தான் .."நா ஊர்ல இல்லாத நேரத்துல நீ யாரையும் எதிர்பாக்காம உன் வேலையை செய்யாலாம் இல்லையா ..அதே மாதிரி ஒரு எமர்ஜென்சினாலும் அது உனக்கு உதவுமே " என்கிறார் என் கணவர் ..ஒரு விதத்தில் அவருடைய வார்த்தைகள் நியாயமானதுதான் . தளபதி படத்துல மணிரத்னம் சார் டயலாக் வருமே "யாரு ? --தேவா " னு அது மாதிரி "பட் திடீர்னு எப்படி ?" னு நா பொத்தாம் பொதுவா கேக்க ..அவரு அதை புரிஞ்சிகிட்டு "லோன் தான் " னு டக்குனு சொல்ல எங்களுக்குள் குபீர் சிரிப்பு ..சரி வாங்கும் போதுதான் சும்மா ஸ்டைலா வாங்கிட்டோம் ...என்னதான் கல்லூரி நாட்கள் வரை சைக்கிள் ஓட்டி இருந்தாலும் ஸ்கூட்டரினுடைய தன்மை வேறு ..முதலில் அவ்வளவு வெயிட்டை பாலன்ஸ் பண்ணுவதே பெரும் கலை. அதுக்குமேல குட்டி பயல வேற வச்சு சென்னை போக்குவரத்துல ..அப்பப்பா ...பட் மறுநாள் காலைலேந்து அப்பாட்மென்ட்குள்ள இருக்குற கிரவுண்டுலேயே அரை பெடல் போட்டு சைக்கிள் ஓட்டுனது கணக்கா "டுர் ...டுர் "..னு ஆக்சிலேட்டரை திருக்கி திருக்கி பழக ஆரம்பிச்சாச்சு ...

"எப்டி பாத்தாலும் வண்டி நேரா மட்டும் தான் போவுது வருது ...மொத்தத்துல பதினொன்னு மட்டும்தான் போடுறேன் ...என்னைக்கு சாமி நா எட்டு போட?" னு மனசுக்குள்ள பாரம் ...இப்புடியே ஆறு மாசம் ஓடிட்டு ...கொஞ்சம் கொஞ்சமாக பழகியாச்சு ..லைசன்ஸ் எடுக்கோணுமா இல்லையா ...நாங்க இருந்தது முகப்பேர் பகுதி ..அதுனால புழல் பக்கம்தான் ஆர்.டி.ஓ வரும்னு சொல்றாங்க ..அங்க போனா ஆனாளப்பட்ட க்யூ ! முப்பத்தியாறு ஆண்கள் ..நா ஒரே ஒரு பொண்ணு ...பாத்தோனயவே வயித்த கலக்கீருச்சு ..ஆர் .டி.ஓ வேற ரெம்ம்ம்ப ஸ்ட்ரிக்ட் ஆப்பீஸரா இருப்பாரு போல! முதல் மூணு பேருமே ஓட்டும் போது காலகீழ வச்சுட்டாய்ங்க ..சோலி முடிஞ்சுது ..பெயில் ஆக்கி விட்டுட்டாரு . அடுத்த அஞ்சு பேரு பாஸ் !

ஒன்பதாவதா --"உள்ள இருந்து தங்க விஜயா ...னு பேரு வாசிக்கிறாங்க ... "வண்டியே கீழ விழுந்தாலும் நாம கால கீழ வச்சிராப்படாது" னு அண்ணன் ரெம்ப வைராக்யத்தோட ஸ்டார்ட் பண்ணிட்டேன் ...மெது மெதுவா ஒடிச்சு ஒடிச்சு ஓட்டி ஒரு வழியா எட்டு போட்டுட்டேன் ! அவரு எம்முகத்தை பாத்துட்டு ஒண்ணுமே சொல்லல ..அடுத்து "பொன்வேலு " னு பேரை மட்டும் கூப்புட்றாரு ..நா மரத்தடியில போயி வண்டிய நிறுத்தீட்டு ஊட்டுக்காரர்கிட்ட சாவிய குடுத்துட்டு ..நைசா ஆபீஸ்குள்ள போயி ரிசல்ட் பாத்திரலாம்னு போனேன் .."இந்தாங்கம்மா அய்யா உங்களை வெளிய வெயிட் பண்ண சொன்னாரு .கொஞ்சம் கழிச்சு கூப்பிடுவோம் "..னு சொல்லி அனுப்பீட்டாய்ங்க

..சரி டிபாட்மென்ட் சொன்னா கேட்டுதான ஆகனும் ...பையில இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து தண்ணி குடுச்சிட்டு ஜெர்ரி குட்டியையும் தூக்கிகிட்டேன் . சிறிது நேரத்திற்கு அப்புறம் .."ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன் " மொமண்ட் ..ரெம்ப பெருமையா இருந்துச்சு ..அம்புட்டு பயலுவளுக்கு நடுவுல நம்ம பாஸ்னு ! அப்புறம் என்ன அதான் லைசென்ஸ் கையில கிடைச்சுருச்சே ... பிரெட் வாங்க டூ வீலரு , பழம் வாங்க டூ வீலரு, பாலு வாங்க டூ வீலருனு வீ...ரா...ப்...பா எல்லாத்துக்கும் நா போறேன் , நா போறேன்னு வண்டிய எடுத்ததும்தான் தெரிஞ்சுது இனிமேட்டு ஆல் பர்ப்பஸ் ட்ரைவர் நம்ம தாம்னு !

ஜெர்ரிகுட்டி பள்ளிக்கூடம் மிக அருகாமையில் தான் ..சொல்லப்போனால் நடக்கின்ற தூரம் தான் ...ஆனாலும் நம்ம வண்டியில போயிதான் இறக்கி விடறது ...அங்க பிரின்சிபால் அம்பாசமுத்திரத்துக்காரர் . "ஏம்மா ரெண்டாவது பெல் சத்தம் கேட்டோன்ன தான வண்டிய எடுத்தீங்க னு "நேராவே கேட்ருவார் . "அம்புட்டு தெளிவாவா கேக்குது !" னு பதிலுக்கு நம்ம . அப்டித்தான் ஒரு நாள் அண்ணாநகர் வரை போக வேண்டியிருந்தது . தேவையானதை எடுத்துக்கொண்டு ஜெர்ரி குட்டியையும் ரெண்டு காலுக்கு நடுவுல நிக்க வச்சிக்கிட்டு கிளம்பியாச்சு ..சென்னையில் நேராக ரூட் புடிச்சு போனா ஒன்அவர் , குறுக்கு சந்துல வண்டிய விட்டீங்கனு வச்சுக்கோங்க எப்படியும் அரை மணி நேரத்துல போயிரலாம் ..ஹி ... ஹி ...இது சந்து பொந்துகளோட ஸ்பெஷாலிட்டி ....நீல்கிரிஸ் தாண்டி போய்க்கிட்டு இருக்கேன் ..திடீர்னு மூஞ்சிக்கு நேர பெரியகார் வருது ...அவனாவது இடது பக்கம் ஒடிக்கிறானா அதுவும் இல்லை ..சட்டுனு அப்டி பாத்தோன என்ன செய்யனு மூளைக்கு வெளங்கல !

முன்னாடியோ குழந்தை ...டக்குனு பிரேக்கும் அடிக்க முடியாது ...ஆனா ரொம்ப நிதானமா தான் ஓட்டிட்டு போறேன் ..சோ வேற வழி இல்லாம ரோட்டுக்கு கீழ வண்டிய இறக்க வேண்டியதா போச்சு ..அங்க வேற என்ன இருக்கும் ..சைடுல சாக்கடைதான் ..பட் ஏதோ தைரியத்துல பாலன்ஸ் பண்ணி லேசா வண்டி மட்டும் சரியிற மாதிரி ஆயிட்டு ... ஆனா அந்த பெரியகார்காரன் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை ...அவன் பறந்துட்டான் ..உடனே நிலைமையை பாத்த பக்கத்து பெட்டிக்கடைகாரர் ஒருவர் வந்து முதலில் குழந்தையை கையில் தூக்கிவிட்டார் ....நமக்கு என்ன ஆகுதோ இல்லையோ ...குழந்தை மேலதான் கண்ணு இருந்துச்சு ...அதுக்குப்பிறகு வண்டியையும் கைத்தாங்கலாக தூக்கியும் விட்டுவிட்டார் ...எதிர்பாராம நடந்ததுனால எனக்கு ஒருவித ஷாக் ! ஆனா ஜெர்ரி குட்டி கொஞ்சம் கூட பதட்டப்படவில்லை ..உடனே "ம்ம்மா இனிமே நீ சூப்பரா வண்டி ஓட்டுவ பாரும்மா! "னு கொஞ்சமும் யோசிக்காம அந்த மழலைக் குரலில் சொல்லுது ..எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை ...குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்களே அது இதுதானா?

என் முகத்துல ஈ ஆடலை ...அவனையே பாத்திட்டு இருக்கேன் அந்த கணத்தில் எனக்கு அதுவே பெரிய ஆறுதலாய் இருந்தது. .."ம்மா ஒண்ணுமில்லம்மா ...இப்டி உக்காருங்க ...னு கடைக்கார தாத்தா தண்ணிய குடுக்குறாரு ...இந்த ஊரில் இப்படியும் மனிதர்களா ?! மனசுக்குள் ஆண்டவனுக்கு நன்றி சொல்லிட்டு ,"ரொம்ப நன்றிங்கைய்யா" னு அவருக்கும் சொல்லிவிட்டு ...ஜெரி குட்டி வண்டியில் ஏற -தாத்தா உடனே "ம்மா என்னைய தெரியலையா ? ங்கிறாரு ...!" மன்னிக்கனும் தாத்தா ஞாபகம் இல்லை. "நாதாம்மா கருப்பசாமி ..நீங்க திருநவேலில படிக்கும்போது பக்கத்துல டீக்கடை வச்சிருந்தேன்ல ..அவரு! பொழப்புக்காக இங்கவந்து பத்து வருசத்துக்கு மேல ஆச்சும்மா !" ங்கிறாரு . எனக்காகவும் என் குழந்தைக்காகவும் ஏற்ற நேரத்தில் உதவிய அவர் எனது கண்களுக்கு கருப்பசாமியாய் மட்டும் தெரியவில்லை --காபிரியேல் தூதனாகவும் தான் !

#வாழ்தல் இனிது
#விஜயா கிப்ட்சன்

--விஜயா கிப்ட்சன்

( [email protected] )

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22" title="8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22" />8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about Devathoothan written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X