For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 14... "டூரிங் டாக்கீஸ்"!

Google Oneindia Tamil News

சின்ன வயதில் கேம்ப் வாழ்க்கை என்பது மிகுந்த சுவாரஸ்யமே ..நம் வயதிற்கு இணையான அநேக குழந்தைகள் எப்பொழுதும் தெருவில் விளையாண்டு கொண்டே இருப்பார்கள் ..யார் வீட்டுக்குள்ளும் எப்போ வேணும்னாலும் ஒளிஞ்சு கண்ணாமூச்சி ஆடுவோம் ..

"ஏய் நீ இங்கன வந்து ஒளிஞ்சிருக்க ..எங்க வீட்டு செந்திலை காலைலேந்து காணூம்? னு தாணு மாமா ஏசுவாரு ..அவனா அவன் துரை வீட்டுக்கு போனாலும் போயிருப்பான் மாமா ..அங்க தான் கிரிக்கெட் பேட்டு , பந்து சகிதமா நிறைய பேரு நின்னாங்க னு சொல்லிட்டு வெளிய ஓடிருவோம் ...பெரியய்ய பிளே கிரவுண்டு சுத்தி செழிப்பா நிறைய நிறைய மரங்கள் இருக்கும் ...உக்காந்து பேச கல் பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும் ..., ஆளுக்கு ஒரு சைக்கிள் சகிதமா வெளிய கிளம்புனா எப்போ வீட்டுக்கு வருவோம்னே தெரியாமல் கழிந்தன ஞாயிற்றுக்கிழமைகள் ..

Sillunnu Oru Anubavam touring talkies written by Vijaya Giftson

போற போக்குல கேம்ப்க்கு நடுவில் இருக்கும் குட்டி பெட்டிக்கடையில் ஆளுக்கு ஒரு ரூவாய்க்கு பபிள்கம் வாங்கி வாயில சவச்சுக்கிட்டே இருப்போம் .... உ....ப்...ப் புன்னு ஊதும் போது யாருக்கு பெரிய்ய சைசுல பபிள் வருதோ அவுங்க வின்னர் ..(இப்போ நினச்சா இதெல்லாம் ஒரு கேம்மாடா !) னு தோணுது .ட்ரெயினிங் வந்த ஜூனியர் லெவல் என்ஜினீயர்ஸ் அண்ணன் எல்லாரும் வாலிபால் , பால் பேட்மிட்டன் என்று குரூப் குரூப்பாக விளையாடுவார்கள் ..குட்டி சுட்டிஸ் எல்லாரும் அவங்க சப்ஸ்டிட்யூட் லெவல் பிளேயர்ஸ்சா கூட இறங்கீருவோம்

..எங்களையும் மதிச்சு கூப்டு வச்சு அப்போல்லாம் மேட்ச் வின் பண்ணிருக்காய்ங்க ! அப்டி இல்லைனா கூட கேம்ப்கு நடுவில் அழகான "மனமகிழ் மன்றம்" ஒன்னு இருக்கும் ...இப்போ ரிசார்ட்ஸ்க்கு போனீங்கன்னா "கிட்ஸ்- பிளே ஏரியா" னு ஒன்னு இருக்கே அது மாதிரின்னு வச்சுக்கலாம் ...அது ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் இருக்கற ஒரு பெரிய ஹால் ..எல்லா விளையாட்டு சாமான்களும் இருக்கும் ...யாருனாலும் எதுனாலும் எடுத்து விளையாண்டுட்டு திரும்ப பத்திரமா வச்சுரனும் .. அதில் இண்டோர் கேம்ஸ் , அவுட்டோர் கேம்ஸ் எல்லாமே அடங்கும் ..முக்கியமா கேரம் போர்ட், செஸ் டோர்னமெண்ட் ரொம்ப பிரபலம் .பெரியவர்களும் வந்து கலந்துக்குவாங்க ...

சரி குடும்ப தலைவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் இப்பிடின்னா ..நம்ம குடும்ப தலைவிகள் வீட்டுலயே முடங்கி கிடப்பாங்களா இல்லையா ..அதுக்காகவே மிகப்பெரிய ஓபன்ஏர் தியேட்டர் கட்டி வச்சிருப்பாங்க ..ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு சினிமா திரையிடப்படும் ..(இதுலாம் டிடி தமிழ் மட்டும் இருந்த காலம் ..மேலும் சன் தொலைக்காட்சி தன்னுடைய அறிமுக ஒளிபரப்பை ஆரம்பித்திருந்த காலம் .. ) சனிக்கிழமை படம்னா டோட்டல் கேம்ப்பும் அங்க தான் இருப்போம் ...அதுக்காகவே பிளான் பண்ணி டீச்சர் குடுத்த வீட்டுப்பாடம்லாம் ஓரளவுக்கு முன்னாடியே எழுதி வச்சிருவோம் . நம்ம தியேட்டர்ல பாக்குற மாதிரி பெரிய திரை --வெள்ளையடிக்கப்பட்ட சுவர் தான் , நல்ல ஹயிட்ல ப்ரொஜெக்டர் ரூம் இருக்கும் ..புது படங்கள் பார்த்த ஞாபகம் இல்லை ..

கொஞ்சம் முன்னாடி வெளிவந்த எண்பதுகளின் படங்கள் சில நாள் ....சில சமயம் பெரியவங்களுக்காகவே பிளாக் அண்ட் வொயிட்டு திரைப்படங்களா பாத்து எடுத்துட்டு வருவாங்க..அன்னைக்கு என்ன படம் னு தெரிஞ்சுக்க தியேட்டர் கேட் பக்கமா போனா ஒரு கரும்பலகையில கலர் சாக்பீஸ் வச்சு வளச்சு வளச்சு டிஸைனா "மாப்பிள்ளை ,கரகாட்டக்காரன் , ராஜாதி ராஜா, " அப்டின்னு எழுதி போட்ருப்பாங்க ..அத பாக்குறதுக்காகவே மதியம் சாப்டுட்டு சைக்கிள் எடுத்துட்டு எங்க வீட்டு திவ்யா பாப்பாவையும் பின்னாடி கேரியர்ல டபுள்ஸ் வச்சுக்கிட்டு போயி பாத்துட்டு வருவோம்.... அவளை சைக்கிளில் உக்கார வைக்கும் போது "ரெண்டு காலையும் முன்னாடி பின்னி வச்சு உக்காந்துக்கணும் என்ன ..உள்ள விட்டுறக்கூடாதுன்னு அட்வைஸ் மழை வேற ..அது பாட்டுக்கு லாலி பாப்பை வாயில வச்சுக்கிட்டு ,"ம்ம் ம்ம்ம் அக்கா" னு சொல்லும் ..இன்னிக்கு எங்க குழந்தைகள் சேர்ந்து விளையாடுவதைப் பார்க்கும் போது சிறு வயது கேம்ப் வாழ்க்கையை நினைத்துக்கொள்கிறோம் ....... ...

நமக்கு எப்புடி ரஜினி -கமல் படம்னா ஒரு சந்தோஷமோ அதே மாதிரி அம்மா அப்பாவுக்கு குலேபகாவலி, ஆயிரத்தில் ஒருவன், சந்திரலேகா , அலிபாபாவும் நாற்பது திருடர்களும் , எதிர்நீச்சல் ,பாமா விஜயம் , இருகோடுகள் , அபூர்வ ராகங்கள் ,அவர்கள் , அவள் அப்படித்தான் லாம் போட்டுட்டா அவுங்க கால் தரையிலேயே இருக்காது ..அதுலேயும் "வரவு எட்டணா , செலவு பத்தணா , அதிகம் ரெண்டணா , கடைசியில் துந்தனா , துந்தனா , துந்தனா " பாட்டு வந்துட்டா போதும் ..இதுலாம் நாங்க அந்த காலத்துல இலங்கை வானொலியில கேட்ருக்கோம் .. அன்பு அறிவிப்பாளர் சாகுல் ஹமீது அந்த பாடலுக்கான விளக்கத்தைச் சொல்லி பாட்டு போடுவாரு ..அதுல கேப்போம்னு பெருமையா சொல்லிக்குவாங்க..அதே மாதிரி படம் மூணு மணி நேரம் வேறயா ..சாயந்தரம் இருட்டுனப்பிறகு தான் ஏழு மணி வாக்குல ஆரம்பிப்பாங்க ..படம் பத்து , பத்தரை மணி வரை ஓடும் ..அதுக்கு ஏத்தாப்புல நாங்க பிஸ்கட்டு , தண்ணி பாட்டிலு , கடலை , மணல்ல உக்கார துண்டு , குட்டிஸ் பாதிலேயே தூங்க போர்வை , தலையணை சகிதமா போறதெல்லாமே பெரிய டூர் போற மாதிரி.. (அதுனாலதான் அந்த காலத்துல "டூரிங் டாக்கீஸ்" னு பேரு வச்சாங்களோ என்னவோ!) ...அதுலேயும் முன்னாடி உக்கார்ரவங்க பெரியவங்களா இருந்தா நமக்கு அவுங்க மண்டை மறைக்கும் ... அதுனால மண்ணையெல்லாம் குவியலா கூட்டி வச்சு அதுக்குமேல துண்டு போட்டு உக்காந்து படம் பாப்போம்! ...வெளிய கேண்டீன் காரங்க மட்டும் எப்பவாச்சும் சூடா டீ வச்சிருப்பாங்க ..சில சமயம் அதுவும் இருக்காது .

ஒரு நாள் எனக்கு என்னமோ படத்துக்கு போக பிடிக்கவில்லை ..நான் மட்டும் வீட்டுல பத்திரமா இருந்துகிறேன் னு சொல்லிட்டேன் ..ஒன்பதாவது வகுப்பு தான் ...பரீட்சை என்னவோ இருந்தது ..(சரி படிக்கலாம்னு ...ஹி ..ஹி..ஹி )..ஒரு பிளாக்கில் ஆறு வீடுகள் ..அதுனால பயமில்லை ...கேம்ப் ஆட்கள் தவிர யாரும் வரவும் மாட்டார்கள் ...ஆனா நடந்ததென்னவோ பெரிய கதை ..சொல்லிட்டோமே தவிர எல்லாரும் போனதுக்கு அப்புறம் ப....ட...க் ப...ட...க் குனு இருக்கு ..பயாலஜி ல படம் வரைஞ்சு ரெக்கார்ட் சப்மிட் பண்ணனும் ..சரின்னு ரெக்கார்ட் நோட், பென்சில் , ரப்பர் ,பயாலஜி புக் , ஷார்ப்னர் சகிதமா உக்காந்துட்டேன் ..ஆனா பாருங்க எப்டி தூங்குனேன் னு தெரியல ..கண்ணு முழிச்சு பாத்தா என்னைய சுத்தி பெரிய கூட்டம் ...

"என்னடா நம்ம வீட்டுல என்ன விஷேஷம்?! அதுவும் இந்த அர்த்த ராத்திரியில இவங்கல்லாம் இங்க என்ன பன்றாங்க ?னு பாக்குறேன் மணி பன்னெண்டு ...எல்லாரும் படம் பாத்துட்டு வந்து பெல் அடிச்சு பாத்திருக்காங்க ..அக்கா-- நாதான் தூங்கி அரை சாமம் ஆயிட்டே ...கதவை திறக்கல ..முதல் மாடி தான் ..சோ ஒருத்தர் அங்க இருந்த பால்கனி வழியா ஏறி வந்து பால்கனி கதவை தட்டு தட்டுன்னு தட்டி பாத்திருக்காரு ..ம்ம்ஹும் ....நோ ரியாக்சன் ...ஜன்னல் வழியா கூவி கூவி கூப்ட்டும் பாத்திருக்காய்ங்க ..ம்ம்ஹும் ...நோ ரெஸ்பான்ஸ் ...பெல் வேற தொடர்ந்து அடிச்சதுல பெல் வொயர் கருகி சன்னல் வழியா புகை மண்டலமா வந்திருக்கு ..

ஆத்தீ வீட்டுக்குள்ள என்னமோ ஆயிட்டுன்னு ஒரு மாமா மட்டும் ஓடி வந்து வாசக்கதவை ஒடச்சு உள்ள வந்து பாத்தா அக்கா சூப்பரா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்திருக்கேன் .கண்ணு முழிக்கும் போது அதான் அம்புட்டு கூட்டம் என்னைய சுத்தி ....அப்புறம் என்ன தீவாளி தான் ...நம்மள தாளிச்சு தள்ளீடாய்ங்க ....இனிமே தூக்கம் வந்தாலும் கிரவுண்டுல வந்து தூங்குங்கற கதையா ஆயிட்டு ...ஆமா பொறவு தலைவர் டயலாக் மாதிரி இந்த இருமலு, தும்மலு , விக்கலு, தூக்கம்லாம் வந்தா அடக்கவா முடியும்?! ..எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச சா ! அதுலேந்து ஒழுங்கு மரியாதையா ஆல் பிலிம்ஸ்கும் குடும்பத்துல எல்லாருமே போவோம் இல்லைனா யாரும் போக மாட்டோம் ! வரலாறு முக்கியம் அமைச்சரே ...

ஞாயித்துக்கிழமை அப்புடியே கொஞ்ச தூரம் நடந்து போனாலே தூத்துக்குடி கேம்ப்டூலேர்ந்து கடலும் , கடற்கரையும் வந்துரும்.. ......என்னவொரு ஆனந்தமான வாழ்க்கை ..இன்றைக்கும் கேம்ப் நண்பர்கள் சந்தித்து கொள்ளும் போது இதை மிக சந்தோசமாக அசை போடுவோம் ...

#வாழ்தல் இனிது
#கேம்ப் குட்டி ஸ்டோரி
விஜயா கிப்ட்சன்

[email protected]

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13, 14]" title="8, 9, 10, 11, 12, 13, 14]" />8, 9, 10, 11, 12, 13, 14]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about touring talkies written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X