For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எபோலா ஆற்றங்கரையில் பிறந்து உலகை உலுக்கி வரும் எபோலா வைரஸ் காய்ச்சல்!

Google Oneindia Tamil News

-புன்னியாமீன்

எபோலா' என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள லைபீரியா, நைஜீரியா, சியாராலோன், கினியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பரவி வருகிறது.

இந்த நோய்க்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக் கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை கட்டுப்படுத்த மருந்து எதுவும் இல்லை. எனவே இது உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது. மேலும் அவசர கால பிரகடனமும் அறிவித்துள்ளது.

ebola

''எபோலா நோய் மேற்கு ஆப்பிரிக்காவில் மிக வேகமாகப் பரவிவருகிறது'' என்றும், ''ஆனால் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மந்தகதியிலேயே நகர்கின்றன'' என்றும் உலக சுகாதார கழகத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் கூறியுள்ளார். எபோலா வைரஸ் தொற்று, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்றும் இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும் எபோலா தொற்று நோயை முறியடிக்க, பரந்துபட்ட அளவில் சோதனை மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும் என, அந்தத் தொற்றைக் கண்டுபிடித்தவரான பேராசிரியர் பீட்டர் பியாட் தெரிவித்துள்ளார். இந்தத் தொற்று நோய் மேற்கு ஆப்பிரிகாவில் பரவி வருவதால், பெருமளவிலானவர்கள் உயிரிழந்துள்ளனர். சோதனை மருந்துகளை பரந்துபட்ட அளவில் பயன்படுத்தி பரிசோதிப்பதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எபோலா தொற்று நோயால் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் அதிகரித்து வரும் வேளையில், அதை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பில், உலக சுகாதார நிறுவனம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார நிறுவனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லைபீரியா, சியாராலோன், கினியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் எபோலா தொற்றினால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் சர்வதேச நாடுகள் இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மார்க்ரட் சேன் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவுதலை முற்றாகக் கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எபோலா தொற்று தொடர்பான அவசர ஆய்வு கூட பரிசோதனையை மேற்கொண்ட லண்டன் சுகாதார மருத்துவ அமைப்பின் தலைவர் பேராசிரியர் டேவிட் ஹெய்மன் கருத்து தெரிவிக்கையில்- காற்று மூலம் இந்த தொற்று பரவுவதில்லை என்பதினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதி வேகமாக பரவிவரும் எபோலா வைரஸ் தற்போது ஏனைய நாடுகளையும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேசம் இது குறித்து விழிப்புடன் செயற்படுமாறு மார்க்ரட் சேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவி வரும், கொடூர விளைவுகளை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் தாக்கத்தையடுத்து இலங்கையிலிருந்து எவரையும் இனிமேல் லைபீரியாவுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதில்லை எனவும் தற்போது லைபீரியாவில் தங்கியுள்ள 200 இலங்கையர்களையும் அவர்களது உறவினர்கள் ஊடாக திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் அறித்துள்ளது.

எபோலா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஹஜ் விசா மற்றும் உம்ரா விசா வழங்குவதை சவூதி அரேபியா நிறுத்தியுள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்நோயைப்பற்றி நாமும் சற்று தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்

எபோலா வைரஸ் நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா இரத்தப் போக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று இந் நோய் அறியப்பட்டுள்ளது. இது ஓர் உயிர் காவி நோயாகும். கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

முதன் முதலாக இந் நோய் 1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர் நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா வைரஸ் என்ற பெயர் ஏறபட்டது.

எபோலா காய்ச்சல் பாதித்தால் முதலில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்படும். பிறகு ஏராளமாக இரத்தம் வெளியேறும். கண், காது, மூக்கு, வாய் மற்றும் மர்ம உறுப்புகளில் இருந்தும் ரத்தம் வெளியேறும். இதன் காரணமாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, வயிற்று வலி, மூட்டு வலி, தொண்டை வலி ஏற்படும். உடல் முழுமையாக தளர்ந்து விடும்.

முதலில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடுவதுண்டு. ரத்தம் அதிகமாக வெளியேறிய பிறகுதான் விபரீதத்தை உணர்வார்கள். இந்த காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் இரத்த அழுத்தம் குறையும். நாடித்துடிப்பும் பல மடங்கு உயரும்.

இது எபோலா வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விட்டதை உறுதி செய்யும். அதன்பிறகு எபோலா காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால் எழுந்து உட்கார கூட முடியாது. படுத்த படுக்கையாகக் கிடந்து போய் சேர வேண்டியதுதான்.

தொடுதல், முத்தமிடுதல், கட்டித் தழுவுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவலாம். ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, தண்ணீர் மற்றும் உயிரணுக்கள் மூலமும் இவ்வகை வைரஸ் பரவும்.

இந்த நோய் வைரஸினால் உண்டாவதால் இன்னும்மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் உயிர் பிழைக்கின்கும் வாய்புண்டு. எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்குஇ வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர் இழப்பைச் கீராக்க அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும்.

அமெரிக்க ஆராய்ச்சி கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வரும் எபோலாவுக்கு எதிராக மாற்று மருந்தின் ஆராய்ச்சியில் ஆரம்பநிலை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எபோலாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த இரு அமெரிக்கர்களுக்கும் சோதனை முயற்சியாக இந்த மருந்து அளிக்கப்பட்டு, அவர்கள் எபோலாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

'ஸ்மேப்' என பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தினை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து எபோலாவுக்கு மேலும் பல உயிர்கள் பலியாவதை தடுத்து உதவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு நைஜீரிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை அமெரிக்க அதிபர் ஒபாமா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

நைஜீரியாவுக்கோ, மற்ற தென்னாப்பிரிக்க நாடுகளுக்கோ ஆராய்ச்சி நிலையில் இருக்கும் ஒரு மருந்தினை எபோலாவுக்கான மாற்று மருந்தாக தன்னால் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்து விட்டதாக நைஜீரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

English summary
Lankan writer Punniyameen has narrated the dangerous Ebola viral fever and its impact.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X