For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் -3: ஹார்மோன் கலாட்டா

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

இது நான் ஏற்கெனவே எழுதியதுதான் என்றாலும், இன்றைக்கும் படிக்கப் புதிதாக இருப்பதால் ஒன்இந்தியா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உடம்புக்குள் நடந்துகொண்டிருக்கும் எத்தனையோ 'கெமிக்கல் ப்ராஸஸ்'களில் இந்த காதலும் ஒன்று.

பதின்மூன்று வயது வரை 'தேமே' என்று சோம்பிக் கிடக்கும் ஹார்மோன்கள், அதற்குப் பிறகு வன்முறையில் ஈடுபட்டு கலாட்டா செய்யப் போக- ஒரு டீனேஜ் ஆண் மகனுக்கு எதிர்வீட்டு வேலைக்காரப் பெண் சுவாரஸ்யமாய்த் தெரிகிற வைபவத்துக்குப் பெயர்தான் காதல்.

ஒரு பெண்ணுக்கும் அதே வயதில்தான் ஹார்மோன்களின் கலாட்டா ஆரம்பமாகி கண்ணாடி முன் அதிக நேரம் நிற்க ஆரம்பிப்பாள். எதிர்வீட்டு சதீஷைப் பார்த்ததும் ஒழுங்காய்ப் போட்டிருக்கிற தாவணியைச் சரிப்படுத்திக் கொள்வாள்.

Rajeshkumars Naan Mugam Paartha Kannadigal -3

எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, இந்தக் 'காதல்' என்கிற வார்த்தையின் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஒரு ஆணும் பெண்ணும் முதன்முதலாய் தொட்டுக் கொள்ளத் துடிக்கும் உணர்ச்சிகளுக்கு முன்னோடிதான் காதல் என்னும் வார்த்தை! இதில் ஜெயிக்கிற காதல்களை விட தோற்றுப் போகிற காதல்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். தோற்றுப் போகிற காதல்கள் எல்லாமே தெய்வீகக் காதல்கள் என்கிற லிஸ்ட்டுக்குப் போய்விடும்.

இந்தக் காதல் என்னை நேரடியாக எப்போதுமே எதிர் கொண்டதில்லை. நான் அதை அலட்சியப்படுத்துகிறேன் என்கிற நினைப்பிலோ என்னவோ அது வேறுவிதமாக என்னிடம் விளையாடிப் பார்த்தது.

1968-ல் கோவை அரசுக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, என்னோடு படித்த என் உயிர் நண்பன் ரகு (பெயரை மாற்றி இருக்கிறேன். இத்தனை வருஷங்களுக்குப் பின் அவனுடைய குடும்பத்தில் பூகம்பம் வேண்டாமே!) அதே கல்லூரியில் பிஎஸ்ஸி ஜுவாலஜி படித்த சுமதியை (இதுவும் பெயர் மாற்றியிருக்கிறது) காதலித்தான். சுமதி அவனைக் காதலிக்கிறாளா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

"டேய் கேயார்..." என்றான் ரகு.

அப்போது நான் ராஜேஷ்குமார் இல்லை. கேஆர் ராஜகோபால்தான்.

"என்ன...?" என்றேன்.

"சுமதி என்னைக் காதலிக்கிறாளா இல்லையா...?"

"தெரியலையே..."

"எப்படித் தெரிஞ்சிக்கிறது?"

"ஒரு லெட்டரை எழுதிக் கேட்டிடு. ஒரு விஷயத்தை மனசுல வெச்சு புழுங்கிட்டு இருக்கிறதைக் காட்டிலும் 'பளிச்'னு ஒரு லெட்டர் மூலமா மனசை அலிபாபா குகை மாதிரி காட்டிடறது நல்லது."

Rajeshkumars Naan Mugam Paartha Kannadigal -3

"சரி... நீயே ஒரு லெட்டர் எழுதிக் கொடு..."

"என்னது நானா?"

"ஆமாடா... ப்ளீஸ்.. என்னோட கையெழுத்து கோழி கிறுக்கின மாதிரி இருக்கும்... உன்னோட கையெழுத்து முத்து முத்தா டைப்படிச்ச மாதிரி இருக்கும். அட்லீஸ்ட் கையெழுத்தைப் பார்த்தாவது அவளுக்கு என்மேல் காதல் டெவலப் ஆகலாம் இல்லையா...?"

நான் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன்.

அவன் சொல்லச் சொல்ல நான் ஒரு முழு வெள்ளைத் தாளை அழகான கையெழுத்தால் காதல் கடிதமாக்கிக் கொடுத்தேன்.

மறுநாள் சுமதி, காலேஜ் லைப்ரரியில் இருந்தபோது, ரகு ஒரு புத்தகத்தில் கடிதத்தை வைத்து அவளிடம் சேர்ப்பித்துவிட்டு, அவளுடைய பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

மாலையில் கல்லூரி முடிந்து போகும்போது ஒரு துண்டு பேப்பரில் பதில் வந்தது.

'ஸாரி ரகு! உங்களை காதலிக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றவில்லை. வேறுபக்கம் முயற்சி செய்யுங்கள்...!'

'இட்ஸ் ஓகே!' என்கிற தினுசில் ரகு அந்தக் காதல் தோல்வியை ஏற்றுக் கொண்டு சகஜமாகிவிட்ட போதிலும், மூன்றாவது நாள் காலை பிரச்சினை வேறு விதமாய் எட்டிப் பார்த்தது.

அன்றைக்கு காலை 11 மணிக்கு லாங்குவேஜ் வகுப்பு முடிந்து பாட்டனி டாக்ஸானமி வகுப்புக்கு நான் தனியாய் சென்று கொண்டிருந்தபோது அந்த சுமதி எதிர்ப்பட்டாள்.

"எஸ்க்யூஸ் மீ..", என்று சொல்லி நிறுத்தினாள்.

"எஸ்..." என்றேன்.

"உங்க நண்பர் ரகுவுக்காக லெட்டர் எழுதிக் கொடுத்தது நீங்கதான்னு கேள்விப்பட்டேன் உண்மையா...?"

"ஆ... ஆமா..."

"உங்க கையெழுத்து ரொம்ப அழகா இருந்தது.. டைப் பண்ணின மாதிரி எப்படி அவ்வளவு அழகா எழுத வருது", என்று கேட்டுத் தொடர்ந்தாள்:

"நீங்க தப்பா நினைக்கலேன்னா... நான் ஒரு உதவி கேட்கலாமா?"

"வெல்கம்..."

"உங்க கையெழுத்து அழகா இருக்கிறதுனால..."

"சொல்லுங்க..."

"என்னோட ஜுவாலஜி ரெகார்ட்ஸ் நோட்டு முதல் பக்க இன்டக்ஸை சிரமம் பார்க்காம எழுதித் தர முடியுமா...? ரெண்டே ரெண்டு பக்கம்தான்..."

"இவ்வளவுதானா... ரெக்கார்ட் நோட்டைக் கொடுங்க... எழுதித் தர்றேன்..."

"தேங்க் யூ.. வெரிமச்..." - சுமதி போய்விட்டாள்.

பத்தடி கூட நடந்திருக்க மாட்டேன். என் முதுகில் கை விழுந்தது. திரும்பினேன். ரகு நின்றிருந்தான். முகத்தில் வழக்கமான புன்னகை மிஸ்ஸிங். குரலை இழுத்து இழுத்து நிதானமாய்க் கேட்டான்.

"இது எத்தனை நாளா நடக்குது...?"

"எது?"

"சுமதிகிட்ட பேசறது..."

"நான் இன்னிக்குதான் பேசறேன்... அதுவும் என்னோட கையெழுத்து அழகா இருக்கிறதுனாலே... அது ரெக்கார்ட் நோட்டுல இன்டெக்ஸ் எழுதிக் கொடுக்கச் சொல்லி..."

ரகு கையமர்த்தினான். "இந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம்... சுமதிக்கு நீ ஏதோ சொல்லிக் கொடுத்துதான் அது எனக்கு அப்படி நெகடிவ்வா லெட்டர் எழுதியிருக்கணும்..."

நான் படபடத்தேன்.

"டேய்...! அபத்தமா பேசாதே..."

"வேண்டாம்... இனிமே நீ என்கிட்ட எதுவும் பேச வேண்டாம்.... எப்பவும் பேச வேண்டாம்..." ரகு சொல்லிவிட்டு விருட்டென்று போய்விட்டான்.

அதற்குப் பிறகு அவனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் எனக்குக் கிடைத்தது தோல்விதான்.

ரகு என்னிடம் கடைசி வரைக்கும் பேசவே இல்லை. ஒரு ஆழமான நட்பை படுகொலை செய்த 'காதல்' என்கிற வார்த்தையை அந்த நிமிஷத்திலிருந்தே நான் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்.

இப்படி கல்லூரி நாட்களிலேயே எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த இந்தக் காதல், என் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் சின்னச் சின்ன திடுக்கிடல்களையும் கொடுக்கத் தவறவில்லை. அப்படி ஒருமுறை எனக்கு கொடுக்கப்பட்ட 'திடுக்கிடலை' மட்டும் இப்போது சொல்லப் போகிறேன்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் வேதாரண்யத்திலிருந்து ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார்:

'அன்புள்ள எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு, உங்களுடைய வாசகன் எழுதிக் கொண்டது. நான் ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடமாய் காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். நாங்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக உங்களைச் சந்தித்து ஆலோசனைப் பெற விரும்புகிறோம். உங்களை உடன் பிறவா அண்ணனாக நினைத்து இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒரு தேதியைக் குறிப்பிட்டு எழுதினால், நாங்கள் இருவரும் கோவைக்கு வந்து உங்களைச் சந்திக்கிறோம். இப்படிக்கு உங்கள் வாசகன்.'

கடிதத்தின் வரிகள் என் இதயத்தின் ஒரு மிருதுவான மூலையைத் தொட்டுப் பார்த்துவிடவே, ஒரு தேதியைக் குறிப்பிட்டு இரண்டு பேரையும் வரச் சொன்னேன்.

குறிப்பிட்ட தேதியில் காலை 6 மணிக்கெல்லாம் இருவரும் வந்துவிட்டார்கள். வாசகருக்கும் அந்தப் பெண்ணுக்கும் சம வயதுதான் இருக்கும். இருவரும் வெவ்வேறு மதம் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. காபி கொடுத்து, உபசரித்து - பொதுவான விசாரிப்புக்குப் பின் விஷயத்தைத் தொட்டேன்.

"ரெண்டு பேருமே மனப்பூர்வமா ஒருத்தரையொருத்தர் விரும்பறீங்களா?"

"ஆமா சார்..." - வாசகர் தலையாட்டினார்.

"உங்க காதலுக்கு எது குறுக்கே நிக்குது... மதமா?"

"இல்லை சார்."

"உங்களுக்கு அப்பா அம்மா இல்லேன்னு லெட்டர்ல எழுதியிருந்தீங்க... பெண்ணோட அப்பா - அம்மா இந்தக் காதலை எதிர்க்கிறாங்களா?"

"இல்லை சார்..."

"பின்னே யார்தான் உங்க காதலுக்கு எதிர்ப்பு...?"

அந்தப் பெண் தலையைக் குனிந்து கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள். "என் புருஷன்..."

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"என்னது...?"

"ஆமா சார்... ரெண்டு வருஷத்துக்கு முந்தி எனக்குக் கல்யாணமாச்சு... எனக்கு புருஷனா வாய்ச்சவன் ஒரு குடிகாரன். ஒழுங்கா வேலைக்குப் போறதில்லை. குடிச்சிட்டு வந்து என்னைக் கண்டபடி அடிப்பான். வாழ்க்கையே வெறுத்துப் போய் தற்கொலை பண்ணிக்கப் போற நேரத்தில்தான் இவரைப் பார்த்தேன். இவர் என் மேல் காட்டின அன்பு இப்போ காதலா மாறிடுச்சி. புருஷன் உயிரோட இருக்கும்போதே, வேறு ஒருத்தரை எப்படிக் காதலிக்கிறது? தப்புதான். நல்லாவே தெரியுது. ஆனாலும் இவரை என்னால மறக்க முடியலையே.. என்ன பண்றது...?"

நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தேன்.

"சார்... உங்க கதைகள்ல எத்தனையோ பிரச்சினைகள் வருது. அதையெல்லாம் க்ளைமாக்ஸ்ல க்ளியரா தீர்த்து வைக்கிற மாதிரி இந்தப் பிரச்சினையிலும் எனக்கு தகுந்த ஆலோசனைகளைச் சொல்லி தீர்த்து வைக்கணும்..."

நான் கைகளைக் குவித்தேன். "இந்தப் பெண்ணை இப்ப நீங்க காதலிச்சிக்கிட்டிருக்கிறதா சொல்றது கூடத் தப்பு. அதைவிட பெரிய தப்பு இங்கே கூட்டிட்டு வந்தது. இந்தப் பெண்ணோட புருஷனுக்கு விஷயம் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?"

"தெரியாது சார்... அவன் இப்ப ஜெயில்ல இருக்கான். அடிதடி வழக்குல ஆறுமாசம் உள்ள போட்டுட்டாங்க..."

நான் அந்தப் பெண்ணிடம் திரும்பினேன்.

"இதோ பாரம்மா.. நீ இவரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா ஒரே ஒரு வழிதான் இருக்கு..."

"சொல்லுங்க சார்..."

"உன் புருஷன்கிட்டேயிருந்து முறைப்படி டைவோர்ஸ் வாங்கணும். அதுக்கு அப்புறம்தான் இவரை நீ காதலிக்கவே ஆரம்பிக்கணும். டைவோர்ஸ் வாங்கற வரைக்கும் நீ இவரைப் பார்க்கக் கூடாது. பார்த்தாலும் பேசக் கூடாது. அப்படி ஒரு கட்டுப்பாட்டோட இருந்தா, உங்க புழக்கடை காதல், கல்யாணத்தில் போய் முடிய வாய்ப்பிருக்கு. இல்லேன்னா அரிவாள் வீச்சிலதான் போய்த்தான் முடியும்..."

"நீங்க சொன்னபடியே நடந்துக்கிறோம் சார்.. கோர்ட் மூலமா முறையான அங்கீகாரம் கிடைக்கிற வரை நாங்க ரெண்டு பேரும் இனிமே ஒருத்தரையொருத்தர் பார்த்துக்க மாட்டோம்... கூடிய சீக்கிரம் அழைப்பிதழோடு வருவோம் சார்..."

"வாங்க..." - கை கூப்பி வழியனுப்பி வைத்தேன்.

அடுத்து வந்த நாட்களில் தினசரி நாளிதழ்களைப் புரட்டி செய்திகளைப் படிக்கும்போது, ஏதாவதொரு மூலையில் 'கள்ளக் காதலர்கள் வெட்டிக் கொலை' என்கிற தலைப்புச் செய்தி கண்களில் படும்போது - என் இதயத்துக்குள் ஒரு 'திக்' உற்பத்தியாகும். அவர்களுடைய பெயர்களை ஞாபகப்படுத்திக் கொண்டு செய்தியைப் படித்துப் பார்ப்பேன். அது அவர்களைப் பற்றிய செய்தியல்ல என்று தெரிந்ததும் ஒரு நிம்மதி மனசுக்குள் பரவும்.

'அதெல்லாம் இருக்கட்டும் ராஜேஷ்குமார்... உங்களுக்கு யாரையாவது காதலித்த அனுபவம் உண்டா?'

எனக்கு கல்யாணம் நடப்பதற்கு முன்னால் ஆறு மாசம் வரைக்கும் நானும் ஒரு பெண்ணைக் காதலித்தேன்.

'அப்படி வாங்க வழிக்கு...'

"யார் சார் அந்தப் பொண்ணு?"

"அது வந்து..."

'பயப்படாம சொல்லுங்க சார்...'

நான் பெண் பார்க்கப் போனது ஒரே ஒரு இடம்தான். பெண் பிடித்து நான் சம்மதம் சொன்ன பிறகு, கல்யாணத்தை உடனடியாய் நடத்தி முடிக்காமல் ஏதோ ஒரு ஜாதக தோஷத்தைக் காரணம் காட்டி, ஆறு மாதம் தள்ளித்தான் கல்யாணத்தை நடத்தினார்கள். அந்த ஆறு மாத காலமும் நான் பார்த்துவிட்டு வந்த பெண்ணையே, மானசீகமாகக் காதலித்துக் கொண்டிருந்தேன். வழியில் இரண்டு முறை தற்செயலாய் பார்த்துக் கொண்டோம். தீபாவளி, பொங்கல் வாழ்த்துகளை தபாலில் பரிமாறிக் கொண்டோம். பெண் பார்த்துவிட்டு வந்த பெண்ணையே காதலித்து கல்யாணம் செய்து கொள்வது ஆபத்தில்லாத காதல். பெரியவர்களிடம் லைசென்ஸ் வாங்கிக் கொண்டே காதலிக்கலாம்.

'இந்தக் கதைதானே வேணாங்குறது...?'

"அட.. நிஜமாத்தான்...!"

'சரி, எழுத்துலகில் நீங்கள் பிரபலமான பிறகு உங்களுக்கு எந்தப் பெண்ணிடமிருந்தாவது காதல் கடிதம் வந்ததுண்டா?'

"காதல் கடிதம் என்று சொல்லிவிட முடியாது. அதுமாதிரி சாயலில் சில கடிதங்கள் வந்ததுண்டு..."

'அது மாதிரியான கடிதங்களை எப்படி ஹேண்டில் பண்றீங்க...?'

"ஒரு சுலபமான வழி இருக்கு..."

'என்ன வழி சார்...?'

"அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு கடிதத்தோட ஆரம்ப வரிகளை இப்படி எழுதுவேன்..."

'எப்படி...?'

"அன்புள்ள வாசக சகோதரிக்கு..."

-மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை...

English summary
The third Chapter of Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X