For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் - 4: ஆகஸ்ட் 15-ம் நானும்

By Shankar
Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

சென்ற வாரம் நாட்டின் 69வது சுதந்திர தின விழாவை வழக்கம்போல் மிட்டாய் சாப்பிட்டு கொண்டாடி முடித்தோம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் கொடியை ஏற்றி வைத்து ஒரு ஐந்து நிமிடம் சிறப்புரை செய்ய வேண்டுமென்று ஏதாவது ஒரு பள்ளியில் இருந்தோ அல்லது ஒரு சமூக அமைப்பிடம் இருந்தோ எனக்கு அழைப்பு வரும். அப்படி அழைப்பு வரும்போதெல்லாம் என்னுடைய அடி மனதுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் 12 வயது ராஜேஷ்குமார் மெல்ல எடட்டிப் பார்த்து கேலியும் கிண்டலும் ஒரு புன்னகையும் பூப்பான்.

அந்தப் புன்னகைக்குப் பின்னால் ஒரு ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒளிந்து கொண்டிருப்பது எனக்கே தெரியாத ரகசியம். அதைத்தான் நான் இப்போது சொல்லப் போகிறேன்.

கோவையில் உள்ள தேவாங்க உயர்நிலைப் பள்ளியில் நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திர தினத்துக்கு முதல் நாள் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்க்குலர் வந்தது.

Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal -4

'நாளை சுதந்திர தின விழா, நம்முடைய பள்ளி வளாகத்தில் நடைபெறும். காலை எட்டு மணிக்கு பள்ளியின் தாளாளர் கொடியேற்றி வைப்பார். எல்லா மாணவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். வராத மாணவர்களுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.'

வெள்ளைச் சட்டையில் மூவர்ணக் கொடியைக் குத்திக் கொண்டு மிட்டாய் சாப்பிடுவது மட்டுமே சுதந்திர தினம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதுவும் ஒரு சந்தோஷம் என்பதால் நான் சுதந்திர தினத்தன்று காலை ஒரு மணி நேரம் முன்பே பள்ளி சென்றுவிடுவேன்.

அந்த வருடமும் நான் சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டேன். விழா எட்டு மணிக்கு என்பதால், ஸ்கூல் வளாகம் வெறிச்சோடிப் போயிருந்தது. வெகு சில மாணவர்களே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆதில் என்னுடைய நண்பன் தண்டபாணியும் ஒருவன். என்னைப் பார்த்ததும் ஓடிவந்து இணைந்து கொண்டான்.

இருவரும் விளையாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் கொடியேற்றும் விழா நடக்கும் இடத்துக்கு வந்தோம். கொடிக் கம்பத்தின் உச்சியில் மலர்களை வைத்துக் கட்டப்பட்ட மூவர்ணக் கொடி தெரிய, கம்பத்தின் கீழே கொடியை ஏற்றுவதற்கான கயிறு கம்பத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டு இருந்தது.

என் நண்பன் தண்டபாணி அதைப் பார்த்துவிட்டு சொன்னான்.. "இதோ பாத்தியா.. கொடிக் கம்பத்துல கட்டப்பட்டு இருக்கிற இந்த ரெண்டு கயித்துல, இந்தக் கயித்தைப் பிடிச்சி இழுத்தா போதும், உடனே கொடி கம்பத்துல இருக்கிற கொடி அவிழ்ந்து பறக்க ஆரம்பிச்சிடும்!"

"எந்தக் கயிற்றைச் சொன்ன.. இதா...?" என்று நான் கேட்டுக் கொண்டே அந்தக் கயிறைத் தொட்டேன். விரல் சற்று அழுத்தமாய் அந்த முடிச்சின் மேல் பட்டு, அவிழ்ந்து கொள்ள, கொடிக் கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டு இருந்த மூவர்ணக் கொடியும் தன்னுள் பதுக்கி வைத்திருந்த வண்ணப் பூக்களை உதிர்த்து எங்களின் மேல் கொட்டிக் கொண்டே காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தண்டபாணி பதறினான்.

"என்னடா இப்படிப் பண்ணிட்டே?"

நான் திடுக்கிட்டுப் போய் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எதிரேயிருந்த ஆசிரியர் அறையில் உட்காந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த கணக்கு வாத்தியார் நஞ்சப்பண்ணன் இந்த சம்பவத்தைப் பார்த்துவிட்டு வேகவேகமாய் வெளியே வந்தார். என் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு காதைப் பிடித்தார். தண்டபாணி ஓடிவிட நான் மட்டும் மாட்டிக் கொண்டேன். எனக்குக் கண்ணில் நீர் முட்டியது.

Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal -4

"தெரியாம பண்ணிட்டேன் ஸார்...!"

"அந்தக் கயித்தைப் போய் ஏன்டா தொட்டே?"

"தண்டபாணிதான் இந்தக் கயித்தைப் பிடிச்சி இழுத்தா கொடி பறக்கும்ன்னு சொன்னான் ஸார்"

"அவன் சொன்னா.. உனக்கு எங்கேடா போச்சு புத்தி?"

மறுபடியும் முதுகில் ஒரு அடி விழுந்தது. இன்னொரு ஆசிரியர் எனக்காக பரிந்து பேசினார்.

"அட விடுங்க ஸார்.. சின்னப் பையன். ஏதோ விளையாட்டுத்தனமாய் பண்ணிட்டான். கொடியை மறுபடியும் இறக்கி, பூக்களைக் கட்டி முடிச்சி போட்டு வெப்போம். இன்னும் கொஞ்ச நேரத்துல ஹெச்.எம்.மும் கரஸ்பாண்டென்ட்டும் வந்துடுவாங்க...!"

ஆனால் நஞ்சப்பண்ணன் வாத்தியார் என்னை விடலை. ஒரு வகுப்பறைக்குக் கூட்டிச் சென்றார்.

"இங்கேயே முட்டிப் போட்டு உட்கார். கொடி ஏத்தற ஃபங்ஷன் முடிகிற வரைக்கும் நீ வெளியே வரக்கூடாது..."

கதவைச் சாத்திக் கொண்டு போயிவிட்டார். நான் அழுதபடியே முட்டி போட்டுக் கொண்டு நின்றேன். எட்டு மணிக்கு ஆரம்பித்த கொடியேற்று விழா எட்டரை மணிக்கு முடிந்து மாணவர்கள் எல்லாரும் கலைந்து சென்ற பின்புதான் எனக்கு விடுதலை கிடைத்தது.

மேற்கண்ட சம்பவம் நடந்து 38 ஆண்டுகள் கழித்து. 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காலை பதினோறு மணியளவில், நான் என்னுடைய மாடி அறையில் உட்கார்ந்து ஒரு தொடர்கதைக்கான அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தபோது என் மகனின் குரல் அறை வாசலில் கேட்டது.

"அப்பா.."

"என்ன?"

"உங்களைப் பார்க்கிறதுக்காக தேவாங்கா ஹை ஸ்கூலிலிருந்து சில டீச்சர்ஸ் வந்து இருக்காங்க!"

நான் திகைப்போடும் குழப்பத்தோடும் என் எழுத்துப் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு கீழே இறங்கிப் போனேன். ஐந்து டீச்சர்ஸ் கீழே காத்திருந்தார்கள். பரஸ்பரம் வணக்கங்களைப் பரிமாறிக் கொண்ட பின் அவர்களில் ஒரு ஆசிரியர் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்.

"ஸார்..! நீங்க இன்னிக்கு பிரபல நாவலாசிரியராய் இருந்தாலும் தேவாங்கா உயர்நிலைப் பள்ளியின் பழைய மாணவர் என்கிற உரிமையில் உங்ககிட்டே ஒரு சம்மதம் கேட்க வந்து இருக்கிறோம்!"

"சொல்லுங்க... என்ன விஷயம்?"

"இந்த 1997-ம் ஆண்டு சுதந்திர தின பொன் விழா ஆண்டு. இந்த பொன்விழா ஆண்டை மிகச் சிறப்பான முறையில் கொண்டாட பள்ளி நிர்வாகம் முடிவு பண்ணியிருக்கு... அதன் தொடர்பாய் இன்னிக்கு பிரபலமாய் இருக்கிற நம் பழைய பள்ளி மாணவர் ஒருவர் கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு மத்தியில் பேசணும்னு விருப்பப்பட்டோம். நம் பள்ளியின் எத்தனையோ பேர் பெரிய பெரிய வேலைகளிலும் பதவிகளிலும் இருந்தாலும், நீங்க வந்து கொடியேற்றி வெச்சு, ஒரு ஸ்பீச் குடுத்தா நல்லாருக்கும். மறுப்பு சொல்லாம நீங்க ஒத்துக்கணும்."

அந்த ஆசிரியர் இப்படி பேசிவிட்டு பேச்சை நிறுத்த, எனக்கு 38 ஆண்டுகளுக்கு முன்பாய் நடந்த அந்த சம்பவம் நினைவில் வந்து மோதியது. கொடிக் கயிற்றை இழுத்த காரணத்துக்காக நஞ்சப்பண்ணன் வாத்தியார் என் முதுகில் இரண்டடி போட்டதும், ஒரு வகுப்பறைக்குக் கூட்டிக் கொண்டு போய் சுதந்திர தின விழா முடியும் வரை முட்டிப் போட வைத்ததும் என் கண் முன்னே நிழலாடின.

நான் மௌனமாய் இருப்பதைப் பார்த்ததும் என்னை அழைக்க வந்த ஆசிரியர்கள் லேசாய் பதட்டப்பட்டனர்.

"ஸார்...! அன்னிக்கு உங்களுக்கு வேற ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா?"

நான் புன்னகைத்தேன்.

"அன்னிக்கு எனக்கு எந்த ப்ரோக்ராமும் கிடையாது. அப்படியே ப்ரோக்ராம் இருந்தாலும் அதை கான்சல் பண்ணிட்டு நம்ம பள்ளிக்கு வருவேன். சுதந்திர இந்தியாவின் பொன்விழா ஆண்டில் ஒரு மாணவனுக்கு தான் படித்த பள்ளியிலேயே கொடியேற்றி வைக்கும் பாக்கியம் எத்தனைப் பேர்க்குக் கிடைக்கும்? அந்த வகையில் நான் பாக்கியசாலி. கண்டிப்பாய் வர்றேன்.."

"ரொம்ப சந்தோஷம் ஸார்"

"சந்தோஷப்பட வேண்டியது நான். எத்தனை மணிக்கு வரணும்?"

"எட்டு மணிக்கு! கார் அனுப்பி வைக்கிறோம் ஸார்"

"எனக்கு கார் எல்லாம் வேண்டாம்... நானே என் ஸ்கூட்டரில் வந்துடறேன்....!"

1997-ம் வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி எட்டு மணிக்கு நான் பள்ளிக்கூட வளாகத்தில் இருந்தேன்.

நான் படித்த பள்ளி புதிய பெயின்ட் பூச்சில் பளபளப்பு காட்டினாலும் வகுப்பறைகளும், பள்ளியின் முன்புறம் இருந்த அந்த மே ஃப்ளவர் மரங்களும் அப்படியே மாறாமல் ஸ்டில் போட்டோ மாதிரி இருந்தன.

காக்கிச் சீருடை அணிந்த என்சிசி மாணவர்கள் அணிவகுத்து நின்று எனக்கு மரியாதை கொடுக்க, தரையில் விரித்துப் போடப்பட்டு இருந்த சிவப்பு கம்பள பாதையில் நடந்தேன். பள்ளியின் தலைமையாசிரியர் எனக்கு ஒரு பெரிய பொக்கே கொடுத்து வரவேற்றார்.

அதே மைதானம்

அதே கொடிக்கம்பம்.

பள்ளியின் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே மாறியிருந்தனர்.

அன்று விளையாட்டுத்தனமாய் கொடி ஏற்றியதற்கு தண்டனையாக நஞ்சப்பண்ணன் வாத்தியார் என் முதுகில் போட்ட இரண்டு அடிகளும், நான் முட்டி போட்டு நின்றதும், அந்த விநாடி என் ஞாபகத்துக்கு வர, என்னையும் அறியாமல் கண்களில் நீர் நிரம்பிவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நஞ்சப்பண்ணன் நினைத்துக் கொண்டு கயிற்றைப் பிடித்து இழுத்தேன்.

கொடி அவிழ்ந்தது.

பூக்கள் காற்றில் சிதறின. நான் அண்ணாந்து பாத்தேன். மூண்ணக் கொடி இப்போது நிதானமான வேகத்தில் சீராய் பறந்து கொண்டிருந்தது.

-அடுத்த வெள்ளியன்று...

English summary
The Fourth episode of Writer Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X