For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்கள் நம்மை ஆள்கின்றதா? நானும் நியூமராலஜியும்!

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

எழுத்துலகில் நான் எல்.கே.ஜியாய் இருந்த 1979-ல் வருடம். காலை பதினோரு மணி. கோவை ஒப்பணக்கார வீதியில் இருந்த பேங்க் ஒன்றில் கேஷ் வாங்குவதற்காக டோக்கனோடு காத்துக்கொண்டிருந்த போது என் முதுகில் ஒரு குரல் கேட்டது.

"ஒரு ரெண்டு நிமிஷம் உங்ககிட்டே பேசலாங்களா?"

திரும்பினேன். அந்த இளைஞர் நின்றிருந்தார். சிவப்பு நிறம். ஒடிசலான தேகம். பளிச்சென்ற சிரிப்பு.

"நீங்க எழுத்தாளர் ராஜேஷ்குமார்தானே?"

எனக்கு பெருமையாய் இருந்தது. எழுத்துலகம் என்னை அடையாளம் காட்ட ஆரம்பித்துவிட்டது!

"ஆமா!"

"குமுதம், விகடன், போன்ற இதழ்கள்ல உங்களோட கதைகளைப் படிச்சிட்டு வர்றேன். நல்லாயிருக்கு. ரொம்பவும் சிறப்பாகவும் இருக்கு. பாராட்டுக்கள்"

"நன்றி"

"உங்க பேரே ராஜேஷ்குமார்தானா, இல்லை அது புனைப் பெயரா?"

"புனைப் பெயர்தான்!"

"நீங்களே வெச்சுகிட்டீங்களா... இலை வேறு யாராவது சொல்லி அந்த 'ராஜேஷ்குமார்' என்கிற பேரை வெச்சுகிட்டீங்களா ?"

ஏதோ போலீஸ் விசாரணை தோரணையில் அவருடைய கேள்விகள் இருந்தாலும் எனக்கு ஏனோ அவர் மீது கோபம் வரவில்லை.

"யாரும் வெக்கலை. என்னோட இயற்பெயர் ராஜகோபால். நானாகத்தான் பேரை மாத்தி ராஜேஷ்குமார்ன்னு வெச்சுகிட்டேன்."

"அப்படி ராஜேஷ்குமார்ன்னு பேர் வெச்சுகிட்டதுக்கு என்ன காரணம்?"

"பெரிசா எந்த ஒரு காரணமும் இல்லை. என்னோட கடைசித் தங்கையின் பெயர் ராஜேஸ்வரி. பெரிய தங்கையின் மகன் பெயர் ஆனந்தகுமார். இவங்க ரெண்டு பேர் மேலயும் எனக்குக் கொஞ்சம் பிரியம் அதிகம். அதனால ரெண்டு பேரோட பெயர்களிலேயும் பாதி பாதி எடுத்து 'ராஜேஷ்குமார்' ன்னு வெச்சுகிட்டேன்."

"நியூமராலஜி பார்த்து வெச்சுகிட்டீங்களா?"

"அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. சும்மா அப்படியே வெச்சுகிட்டேன்."

"நியூமராலஜியில் ஏன் உங்களுக்கு நம்பிக்கையில்லை?"

Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series -17

"அது ஒருவகையான எண்கள் சம்பந்தப்பட்ட ஜோதிடம். கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் தனக்கு உபயோகப்படும் விதத்தில் எண்களை உருவாக்கிக் கொண்டான். என்னைப் பொருத்தவரைக்கும் எண்கள் வெறும் குறியீடுகளே! "

அவர் ஒரு மெலிதான சிரிப்போடு சொன்னார்.

"இனிமே நீங்க இந்த எண்ணத்தை மாத்திக்கணும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. அந்த எண்களை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் நாம் உயர்ந்த நிலைமைக்குப் போகலாம்...."

"அப்படியா?" என்றேன் சுவாரஸ்யம் இல்லாமல்.

"நீங்க நம்பலை போலிருக்கு... ஒவ்வொரு எண்ணும் எதோ ஒருவகையில் சக்தி வாய்ந்ததாய் இருக்கு. உதாரணத்துக்கு எண் 1ஐ எடுத்துக் கொண்டால் ஒன்றே இறைவன். 2ஐ எடுத்துக் கொண்டால் தாய் தந்தை, 3க்கு முப்பெருந் தேவியர், 4க்கு நான்கு வேதம், 5க்கு பஞ்ச பூதம், 6க்கு அறுசுவை, 7க்கு சப்தஸ்வரங்கள், 8க்கு அஷ்டலட்சுமிகள், 9க்கு நவகிரகங்கள். இப்படி சொல்லிகிட்டே போகலாம்."

'அட....பரவாயில்லையே... எண்களை இப்படியொரு கோணத்திலும் பார்த்து இருக்காரே!' என்று மனசுக்குள் வியந்து நான் பாராட்டிக்கொண்டு இருக்கும் போதே அவர் சொன்னார்.

"உங்களுக்கு இதுல நம்பிக்கை இருந்தாலும் சரி, நான் இப்போ சொல்லப் போகிற விஷயத்தை மட்டும் ஞாபகம் வெச்சுக்குங்க...!"

"சரி...! விஷயம் என்னன்னு சொல்லுங்க!"

"உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு வெச்ச பேர் ராஜகோபால். அந்த ராஜகோபால் என்கிற பெயரை நீங்க உபயோகப்படுத்திக்கிட்டு இருந்தவரை நீங்க ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து சாதனை செய்து இருக்க முடியாது. இந்தப் பெயரிலிருந்து மாறி ராஜேஷ்குமார் என்கிற புனைப் பெயரை வெச்சுகிட்ட பிறகுதான் உங்க மேல வெளிச்சம் விழுந்து இருக்கு. அதாவது எழுத்தாளர் என்கிற ஒரு பெயரை தொட்டு இருக்கீங்க... இது உண்மையா இல்லையா?"

"உண்மைதான்... !"

"இனிமேல் இதே ராஜேஷ்குமார் என்கிற பெயரில் உள்ள ஆங்கில எண்களைக் கூட்டினால் வரக் கூடிய எண் 32. இதனுடைய கூட்டு எண்ணிக்கை 5. இந்த எண் ஒரு யூனிவெர்சல் நெம்பர். இது எழுத்துலகில் உங்களுக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும். நாவல்களை எழுதிக் குவிப்பீங்க. அந்த நாவல்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். அது ஒரு சாதானையாய் மாறி பத்திரிகை உலகம் உங்களைக் கொண்டாடும்.... !"

நான் மனசுக்குள் 'அட ..... போப்பா ! ஒரு சிறுகதை எழுதி அது பிரசுரமாரதுக்குள்ளே போதும் போதும்ன்னு ஆயிடுது. இதுல நாவல் எழுதுறது எங்கே?' என்று சலித்து கொண்டேன்.

அவர் சிரித்தார்.

"என்ன ராஜேஷ்குமார்! நான் சொன்னதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா...? நான் எதோ மரத்தடி ஜோசியன் கிடையாது. எண்களை ஆராய்ச்சி செய்து அவைகளின் சக்தியை உணர்ந்து கொண்டவன். என்னோட கணிப்பு என்னிக்குமே பொய்த்தது கிடையாது. 2000-வது வருஷத்துக்குள்ள நீங்க எழுத்துலகில் சாதனை செய்வீங்க. அப்படி சாதனை செய்யும்போது என்னை நெனச்சுகுவீங்க ... நான் வரட்டுமா?"

நகர முயன்றவரை நிறுத்தினேன்.

"உங்க பேர்"

"கே.கே பாலசுப்ரமணியன். சுருக்கமா கே.கே.பின்னு கூப்பிடுவாங்க. ஊர் குனியமுத்தூர். மதுக்கரை ரோட்டு மேல வீடு."

அவர் சொல்லிவிட்டு போய்விட்டாலும், அவர் சொன்ன வார்த்தைகள் அன்று முழுவதும் மனசுக்குள் நினைத்த நேரம் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.

சிறுகதைகளையே எழுதிக் கொண்டிருக்கும் என்னால் நாவல் எப்படி எழுத முடியும்? அதுவும் நாவல்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டுமாமே?

எனக்கு நம்பிக்கை வரவில்லை.

ஆனால் அவர் சொல்லிவிட்டுப் போன அடுத்த மாதமே எனக்கு குமுதம் மாலைமதியிலிருந்து நாவல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியோ திணறித் திணறி எழுதி முடித்தேன். அந்த நாவல் 1980-ம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கல்கண்டில் தொடர் கதை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. நாவலும் தொடர்கதையும் நல்ல வரவேற்புப் பெறவே அடுத்தடுத்து அன்றைய காலகட்டத்தில் வந்து கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட மாத நாவல்களின் ஆசிரியர்கள் என்னிடம் நாவல்கள் கேட்கவே நான் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஒரு வருடத்திற்கு 50 நாவல்கள் வீதம் அடுத்து வந்த 20 வருட காலத்திற்குள் அதாவது 1999 க்குள் 1000 நாவல்கள் எழுதி முடித்தேன்.

என்னுடைய இந்த சாதனையைப் பாராட்டி ராது பைன் ஆர்ட்ஸும், ஜீயே பாப்ளிகேஷனும் இணைந்து 1999-ல் வருட டிசம்பர் 23-ல் தேதி சென்னை காமராஜர் கலையரங்கில் ஒரு விழா எடுத்தார்கள்.

அந்தப் பாராட்டு விழாவில் எழுத்தாளர்கள் உட்பட சினிமாவின் பிரபலங்களான நடிகரும் டைரக்டருமான டி.ராஜேந்தர், விஜயகாந்த் கலந்து கொண்டு என்னைப் பாராட்டிப் பேசினார்கள். அந்த விழாவிற்கு வந்து இருந்த கே.கே.பாலசுப்ரமணியன் விழா முடிந்ததும் என்னைத் தனிமையில் சந்தித்துப் பேசினார்.

"என்ன நான் சொன்னது சரியாப் போச்சா? உங்களால இவ்வளவு நாவல்கள் எழுத முடிஞ்சதற்குக் காரணம் உங்களுக்கு அமைஞ்ச அந்த நெம்பர்தான்"

"அந்த நெம்பர் 5க்கு அவ்வளவு பவரா?"

"ஆமா...அதுக்கு சரியான உதாரணம் இன்னிக்கு விழா நடந்த தேதி 23. தேதியோட கூட்டு எண்ணிக்கை 5"

Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series -17

நான் ஒன்றும் பேசாமல் மௌனமாய் இருக்கவே கேட்டார். "இன்னமும் என்மேல உங்களுக்கு நம்பிக்கை வரலன்னு நினைக்றேன்?"

"நம்பறதா வேண்டாமான்னு ஒரு குழப்பம் அதுதானே?"

"ஆமா...!"

"உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா ராஜேஷ்குமார்?"

"ரொம்ப...ரொம்ப...! நான் இன்னிக்கு ஒரு எழுத்தானாய் உருவாகி 1000 நாவல்கள் எழுதினதுக்குக் காரணம் அந்தக் கடவுளோட கருணைதான்னு மனப்பூர்வமாய் நம்பறேன்!"

"எனக்கு கடவுள் நம்பிக்கை அறவே கிடையாது. நான் இதுவரைக்கும் எந்த கோயிலுக்கும் போனதில்லை. ஆனால் இந்த உலகத்துல ஒரு அபூர்வமான, அதிசயமான சக்தி இருக்கு, அது எண்களில்தான் இருக்கு என்கிற உண்மையையும் தெரிஞ்சிகிட்டேன்!"

"எப்படித் தெரிஞ்சிகிட்டீங்க...?"

பாலசுப்ரமணியன் சொன்ன விஷயங்கள் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

உங்களுக்காக அவர் சொன்ன வியப்பான விஷயங்கள் அடுத்த வாரம் இதே பகுதியில் காத்திருக்கும்.

படிக்கத் தவறாதீர்கள்.

தொடரும்...

English summary
the 17th episode of Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X