
பதவியேற்றதும் முதல் வேலையாக.. கோயிலுக்கு சென்ற பிரதமர் ரிஷி சுனக்? தீயாக பரவும் தகவல்.. உண்மை என்ன
லண்டன்: பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கையோடு முதலில் ரிஷி சுனக் இஸ்கான் கோயிலுக்குச் சென்றதாகத் தகவல் பரவி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த சில முடிவுகள் அந்நாட்டின் பொருளாதாரம் சரியக் காரணமாக அமைந்துவிட்டது. இதையடுத்து கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது.
இதையடுத்து அவர் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். கடந்த மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்ற லிஸ் டிரஸ், வெறும் 45 நாட்களில் தனது பிரதமர் பதவியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"அவர் எப்படி பிரதமராகலாம்!" ரிஷி சுனக்கிற்கு எதிராக இனரீதியான தாக்குதல்.. கமெடியன் நோவா நறுக் பதிலடி

பிரிட்டன்
அங்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமர் பதவியில் இருப்பார் என்பதால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு மட்டுமே 140 எம்பிக்களின் ஆதரவு கிடைத்தது. அவரைத் தவிர வேறு எந்தவொரு வேட்பாளருக்கும் போட்டியிடத் தேவையான 100 எம்பிக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து ரிஷி சுனக் (42) போட்டியின்றி பிரிட்டன் பிரதமராகத் தேர்வானார்.

ரிஷி சுனக்
அவரை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பிரதமராக நேற்று அதிகாரப்பூர்வமாக நியமித்தார். இதன் மூலம் பிரிட்டன் பிரமராக மிகக் குறைந்த வயதில் பதவியேற்றவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். நேற்று பிரதமராகப் பதவியேற்றதும் செய்தியாளர்களைச் சந்தித்த ரிஷி சுனக், பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்பதே தனது முதல் நோக்கம் என்றும் இதற்காக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்கான் கோயில்
இதனிடையே பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கையோடு ரிஷி சுனக் தனது மனைவியுடன் இஸ்கான் கோயிலுக்குச் சென்று வழிபட்டதாகத் தகவல் பரவியது. மேலும், இது தொடர்பாக வீடியோ ஒன்றும் கூட இணையத்தில் பரவியது. அதில் இஸ்கான் கோயிலுக்குச் செல்லும் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அங்குள்ள துறவிகளிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல உள்ளது. இதைப் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

பரவிய தகவல்
பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக் ஒரு ரியல் இந்து என்ற ரீதியிலும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இன்னும் சிலர் இறைவழிபாடு இருந்தாலே நமக்கு வெற்றி தானாக வரும் என்றும் அதை ரிஷி சுனக் நம்புவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், சிலர் இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு முதல் சில நாட்கள் பல வேலைகள் இருக்கும் என்பதால் அவர் கோயிலுக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று பதிவிட்டனர்.

உண்மை என்ன
இது தொடர்பாக நாம் தேடிய போது, ரிஷி சுனக் தனது மனைவியுடன் கோயிலுக்குச் சென்றது உண்மை தான் என்றாலும் அவர் இப்போது செல்லவில்லை. அவர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தான் இஸ்கான் கோயிலுக்குத் தனது மனைவியுடன் சென்று இருந்தார் அதைத்தான் இப்போது புதிதாகச் சென்றது போலப் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பான பல செய்திகள் அப்போதே வெளியாகி இருந்தது.

தவறானது
அனைத்தையும் தாண்டி ரிஷி சுனக்கே தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இஸ்கான் கோயிலுக்குச் சென்றதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் பிரதமராகப் பதவியேற்ற உடனேயே இஸ்கான் கோயிலுக்குச் சென்றதாகப் பரவும் தகவல் பொய்யானது என்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக், அங்குள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றனர்.
முடிவு
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றதை இப்போது சென்றது போலப் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.