For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா- சீனா இடையே திடீர் பேச்சுவார்த்தை: இலங்கையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறதா இந்தியா?

Google Oneindia Tamil News

-கொழும்பில் இருந்து அ.நிக்ஸன்-

இந்திய வெளியுறவுச் செயலாளர் Harsh Vardhan Shringla கொழும்பில் நிற்கும்போதே அமெரிக்கா சீனாவுடன் புதிய இராஜதந்திர உறவு மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. சீனாவுக்கு எதிரான பிராந்திய நகர்வுகளில் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்கு இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி வந்த அமெரிக்கா, கடந்த மாதம் ஆஸ்திரேலியா. பிரித்தானிய நாடுகளுடன் இணைந்து அக்கியூஸ் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டு மேற்படி பிராந்தியப் பாதுகாப்புக்குப் புதிய வியூகம் ஒன்றை வகுத்துமிருந்தது. அது சீனாவுக்கு எதிரானது என்பதே வெளிப்படை.

ஆகவே அக்கியூஸ் ஒப்பந்தத்தையும் கையில் வைத்துக் கொண்டு சீனவுடன் புதிய உறவை மேம்படுத்தும் பேச்சுக்களை ஜோ பைடன் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதுவும் தனது ஆகாயப்பரப்பில் சீனா அத்துமீறித் தனது போர் விமானங்களைச் செலுத்தி அச்சுறுத்துவதாக தாய்வான் அரசு குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே சீனாவுடன் புதிய உறவுக்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவைப் பின்தள்ள தாய்வான் அரசுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. அதன் மற்றுமொரு கட்டமாகவே தென் சீனக் கடல் பகுதியில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்த அவுஸ்திரேலியாவுடன் அக்கியுஸ் ஒப்பந்தமும் கைச்சாத்தானது.

இந்த நிலையிலேதான் அமெரிக்காவும் சீனாவும் தமகிடையேயான இராஜதந்திர உறவு மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை சுமுகமாக விரிவுபடுத்தும் பேச்சுக்களைக் கடந்த புதன்கிழமை ஆரம்பித்திருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிபிசி) மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரான யாங் ஜீச்சி, (Yang Jiechi) அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் (Advisor Jake Sullivan) ஆகியோர் புதன்கிழமை சந்தித்தித்துப் பேசியுள்ளனர்.

சென்ற செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் உரையாடியிருந்த சூழலில், புதன்கிழமை மேற்படி மற்றுமொரு உரையாடலும் இடம்பெற்றிருக்கின்றது. இரு தரப்பினரும், விரிவான மற்றும் ஆழமான கருத்துப் பரிமாற்றினர்.

India not able to contorl Srilanka?

செப்டம்பர் 10 ஆம் திகதி அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளிடையே இடம்பெற்ற தெலைபேசி உரையாடலில் மூலோபாய தகவல் தொடர்புகளை வலுப்படுத்துதல், வேறுபாடுகளை அடையாளம் கண்டு சரியாக நிர்வகித்தல், மோதல் மற்றும் மோதலைத் தவிர்ப்பது, பரஸ்பர நன்மைகளை உருவாக்குதல் ஆகியவை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு இருதரப்பினரும் ஒப்புக்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே புதன்கிழமை உரையாடலும் இடம்பெற்றிருக்கிறது.

உறவுகள் மற்றும் சர்வதேச பிராந்தியப் பிரச்சினைகள் பொதுவான கவலைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆக்கபூர்வமான பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டதாக சீனாவின் குளோபல் ரைமஸ் கூறுகின்றது. நியூயோர்க் ரைமஸ் என்ற அமெரிக்கச் செய்தித் தளமும் இருதரப்புச் சந்திப்புக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தது. ஆனாலும் முன் எச்சரிக்கையோடுதான் அமெரிக்கச் சீனப் பேச்சு நடந்து என்ற தொனியும் அந்தச் செய்தியில் தெரிந்தது.

சீனாவும் அமெரிக்காவும் தங்கள் உறவுகளைக் கையாள முடியுமா என்பது இரு நாடுகளினதும் அந்த மக்களின் அடிப்படை நலன்களையும், மற்றும் உலகின் எதிர்காலத்தையும் பொறுத்ததென யாங் ஜீச்சி அந்த உரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைக்கும்போது, இரு நாடுகளும் உலகமும் பயனடையும்; சீனாவும் அமெரிக்காவும் மோதலில் இருக்கும்போது, இரு நாடுகளும் உலகமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் யாங் மனம் திறந்து சொல்லியிருக்கிறார்.

சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய நோக்கங்கள் உறவுகளை அமெரிக்கா சரியாகப் புரிந்து கொள்ளுமெனவும் யாங் கூறுகிறார். சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லையென சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதை சீனா கவனித்து வருவதாகவும் இதனால் புதிய பனிப்போருக்கு இடமிருக்காதெனவும் யாங் நம்பிக்கையும் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா வெளிப்படையான உரையாடல்களை நடத்தும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய் திங்கட்கிழமை கூறினார், வோஷிங்டனில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் கேத்தரின் இவ்வாறு கூறியிருக்கிறார்.

சீனாவுடனான வர்த்த்தக ஒப்பந்தம் குறித்தும் அவர் அந்த உரையில் விபரிக்கிறார். டொனலட் ட்ரம்ப் நிர்வாகத்தால் ஆண்டுக்கு 370 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்காக ஒரு இலகுக் கட்டண விலக்குச் செயல்முறை பற்றியும் கேத்தரின டாய் குறிப்பிட்டுக் கூறினார்.

ட்ரம்ப் நிர்வாகம் 2018 ஆம் ஆண்டில் இருந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 370 பில்லியன் டொலர்களுக்கு வரி விதித்தது. ஜோ பைடன் நிர்வாகம் இன்னும் அந்த கட்டணங்களைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. ஆனாலும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் தொடருமெனவும் சீனா தனது வர்த்தககக் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதெனவும் குளோபல் ரைம்ஸ் விபரிக்கிறது.

அமெரிக்காவுடனான சீனாவின் மொத்த வர்த்தக அளவு 9 சதவீதம் சரிந்து 2.42 டிரில்லியன் யுவான் ($ 340 பில்லியன்), அதே நேரத்தில் வர்த்தக உபரி 7.7 சதவீதம் முதல் 1.33 டிரில்லியன் யுவான் வரை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை விரிவடைந்ததாகச் சீனச் சுங்கத் திணைக்களத்தின் செய்தித் தளம் கூறுகின்றது.

சீனச் சுங்கத்துறையின் பொது நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, முதல் எட்டு மாதங்களில் அமெரிக்கா சீனாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது, இது சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தக அளவில் 12 சத விகிதமெனக் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்குமான வர்த்தக நடவடிக்கைகள் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 48.16 பில்லியன் டொலர்களை எட்டியிருப்பதாகச் சீனக் கம்பியூனிஸின் குளோபல் ரைம்ஸ் என்ற ஆங்கிலச் செய்தித்த்தளம் கூறுகின்றது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்திய-சீன எல்லை மோதலினால், இருதரப்பு வர்த்தகம் 5.6 சதவீதம் குறைந்து எனவும் இத்தகைய சிக்கலான சூழலுக்கு மத்தியிலும்கூட, சீனா இன்னும் அமெரிக்காவை முந்திக்கொண்டு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா மாறியதெனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இறக்குமதி 90.2 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகின்றது.

இந்தியாவும் சீனாவும் உலகின் வேறு நாடுகளுக்குச் சிறந்த முதலீட்டு இடங்களாக உருவெடுத்து வருவதாக பிஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த யூன் மாதம் தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.

2019 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் சீன முதலீடுகள் 0.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2019 செப்டம்பர் மாத இறுதி வரை இந்தியாவில் ஒட்டுமொத்த சீன முதலீடு 5.08 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. செப்டம்பர் 2019 வரை சீனாவில் ஒட்டுமொத்த இந்திய முதலீடு 0.92 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் சீன வர்த்தக அமைச்சை மேற்கோள்காட்டி இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய சீனாவின் ஆர்சிஈபி எனப்படும பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (Regional Comprehensive Economic Partnership- RCEP) இந்தியா கைச்சாத்திடவில்லை. ஏனெனில் சீனாவோடு தனியான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்துடுவதற்கான விரும்பத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. அவ்வாறு இல்லையென்றாலும் இன்னும் ஒரு ஆண்டில் இந்தியா ஆர்சிஈபி எனப்படும் ஒப்பந்தத்தில் இணையவும் முடியும்.

ஆகவே சீனாவோடு அரசியல் ரீதியான பகைமை இந்தாலும் குறிப்பாக இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்திய- சீன எல்லை மோதல் போன்ற முரண்நிலை இருந்தாலும், வர்த்தக ரீதியில் சீனாவோடு உடன்பட வேண்டியதொரு தேவை அமெரிக்காவைிட இந்தியாவுக்கு அதிகம் உண்டு என்பதையே இந்த வர்த்தகச் செயற்பாடுகள் காண்பிக்கின்றன.

ஆனால் இலங்கைக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் கஸ்வர்த்தன ஸ்ரிங்லா. சீனாவுடன் இலங்கை உறவு வைத்திருப்பது தொடர்பான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். முன்னரும் புதுடில்லி அவ்வாறு எச்சரித்திருந்தது.

ஆனால் அமெரிக்கச் சீன வர்த்தக உறவு, இந்திய சீன வர்த்தக உறவுகள் அதன் லாபங்களைக் கணக்கிட்டால் இலங்கை சீனாவுடன் அவ்வளவு பெரிய வர்த்தக உறவில் ஈடுபடவில்லையெனக் கூறலாம். எனினும் மீள முடியாத பெருமளவு கடன்களை இலங்கை சீனாவிடம் இருந்து பெறுகின்றது மற்றும் நிலங்கள், துறைமுகங்கள் கடல் பிரதேசங்களையும் இலங்கை சீனாவிடம் இழந்து வருகின்றது என்பது உண்மையே.

இருந்தாலும் இந்தியா, சிறிய நாடான இலங்கையைக் கட்டுப்படுத்த அல்லது தனது ஆளுகைக்குள் வைத்திருக்கத் தவறியதே இதற்குப் பிரதான காரணம். அத்துடன் புதுடில்லியைக் கடந்தும் அமெரிக்கா இலங்கையோடு தனது நலன்சர்ந்து அணுகியுமிருந்தது. இதனால் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவை அவ்வப்போது புறக்கணித்துமிருந்தனர்.

ஆகவே அமெரிக்காவின் தூரநோக்கு நகர்வுகளைக் கணிப்படுவது கடினமாக இருந்தாலும், ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை விலக்கி இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களில் கவனத்தைச் செலுத்த முற்பட்டபோதே, அமெரிக்க உள் நோக்கங்களை இந்தியா உணர ஆரம்பித்திருக்க வேண்டும்.

இந்தியா தலைமையிலான குவாட் அமைப்பை மீறி அக்கியூஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதும், அதன் பின்னரான சூழலிலும் இந்தியா அமெரிக்காவுடன் தலிபான்களை எதிர்கொள்வது குறித்த இராணுவப் பேச்சு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றது.

ஆனால் அமெரிக்காவின் நகர்த்தல் வேறுபாதையில் செல்கிறது என்பதைக் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமெரிக்கச் சீனப் பேச்சுக்கள் காண்பிக்கின்றன. இது அமெரிக்காவின் நீண்டகால மூலோபாயமாக இருந்தாலும், இந்திய இராஜதந்திரம் ஏமாற்றப்படுகின்றது. அத்துடன் திசை திருப்பப்பட்டு. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவையும் வலுவிழக்கச் செய்யும் அமெரிக்க நகர்வு என்றும் கருதலாம்.

ஆகவே அரசியல். இராணுவ முரண்பாடுகளுக்கு அப்பால் பொருளாதார உறவின் மூலமாக அமெரிக்கச் சீன உறவு எதிர்காலத்தில் மேலும் இறுக்கமடையலாமென எதிர்பார்க்கப்படும் பின்னணியில், இந்தியா ரஷியாவுடனான பாரம்பரிய உறவை மீளவும் புதுப்பிக்க வேண்டுமென்ற கருத்துக்கள் இல்லாமலில்லை. ஆனால் அமெரிக்க விசுவாசம் மற்றும் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவோடு செய்யப்ப்பட்ட மூன்று ஒப்பந்தங்களும் அதற்கு இடம்கொடுக்குமா என்ற கேள்விகளும் உண்டு.

சீனாவைக் கடந்து பிராந்தியத்தில் இலங்கைத்தீவைத் தனக்குரிய பாதுகாப்பான பிரதேசமாக இந்தியா மாற்ற வேண்டுமானால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. இந்திய வெளியுறவுச் செயலாளர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எவரும் கொழும்புக்கு வந்து செல்ல வேண்டியதொரு தேவையுமில்லை. 1983 ஆம் ஆண்டில் இருந்து வரலாறு இந்தியாவுக்குப் பதில் சொல்லும். அணிசேராக் கொள்கையைக் கைவிட்டமை தவறான முடிவு என்றும் இந்தியாவுக்கு வரலாறு உணர்த்தும்

English summary
Here is an analysis story on India and Srilanka Relations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X