"கஞ்சி அருந்தச் செல்லும் கருணாநிதி ஏமாறுவார்"
சென்னை:
கஞ்சித் தொட்டித் திறக்கவும், கஞ்சி குடிக்கவும் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பம் கிராமத்திற்குச் செல்லவுள்ள கருணாநிதி, கஞ்சி வாங்க ஒரு நெசவாளரும் வராமல் ஏமாற்றமடையப் போகிறார் என்று தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சோமசுந்தரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெசவாளர்களுக்கு கஞ்சித் தொட்டித் திறப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி அம்மையார் குப்பம் கிராமத்திற்குப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன.
ஆனால் கருணாநிதிக்கு அங்கு ஏமாற்றம் தான் காத்திருக்கும். இந்த விஷயத்தை அரசியலாக்குவதே கருணாநிதியின் முக்கிய நோக்கம். நெசவாளர்கள் பட்டினி கிடக்கிறார்களே என்ற கவலையெல்லாம் அவருக்கு இல்லை.
அம்மையார் குப்பம் கிராமத்தில் மொத்தம் 2000 கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்களில் 340 பேர் மட்டுமே இலவச வேட்டி, சேலைத் திட்டத்திற்காக துணி நெய்து வருகிறார்கள். மற்றவர்கள் பிற வேலைகளில்தான் ஈடுபட்டுள்ளனர்.
எனவே கருணாநிதி கஞ்சி தொட்டி திறக்கச் செல்லும்போது அதை வாங்குவதற்கு ஒரு நெசவாளரும் அங்கு வரப் போவதில்லை. ஏமாற்றத்துடன்தான் கருணாநிதி சென்னை திரும்பப் போகிறார்.
மாநிலத்திலுள்ள நெசவாளர்களுக்கு உரிய தேவைகளை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மூலம் நெய்யப்பட்ட சேலைகள் மற்றும் வேட்டிகளை வாங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் அமைச்சர் சோமசுந்தரம்.
![]() ![]() ![]() |
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!