"இறந்தவர்" திரும்பினார்: "பேய்" என நினைத்து மக்கள் கல்லடி
காரைக்கால்:
இறந்து போனவர் என்று கருதப்பட்ட ஒரு நபர் உயிருடன் திரும்பி வந்ததைக் கண்ட ஒரு கிராமத்தினர் அவரைப் "பேய்" என்று நினைத்து கல்லால் அடித்து விரட்டினர்.
காரைக்கால் அருகே பூவம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு மகேஸ்வரி (12), மதனசெல்வி (7) ஆகிய இரு பெண் குழந்தைகள் உண்டு.
ரவிச்சந்திரன் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதால், தமிழரசி அடிக்கடி தன்னுடைய தாய் வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 1ம் தேதி ரவிச்சந்திரன் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் சண்டை போட்ட கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய ரவிச்சந்திரன் ஒரு வாரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் பயந்துபோன தமிழரசி போலீசாரிடம் புகார் செய்தார். இந்நிலையில் நவம்பர் 8ம் தேதி பூவம் அருகே உள்ள ஒரு காட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஒரு பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.
ரவிச்சந்திரன்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் சந்தேகித்தனர். அவருடைய மனைவியும் வந்து உடலைப் பார்த்தார். ஆனால் சரியாக அடையாளம் தெரியவில்லை என்று கூறினார் அவர்.
இருந்தாலும் அது ரவிச்சந்திரன் உடல்தான் என்று முடிவு செய்யப்பட்டது. போஸ்ட்மார்ட்டத்துக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தினரே அந்த உடலைப் பெற்றுக் கொண்டு போய் அதைத் தகனமும் செய்துவிட்டனர். ஈமக்கிரியைகளும் நடந்து முடிந்தன.
இந்நிலையில் நேற்றிரவு தன் வீட்டின் கதவை யாரோ தட்டவே, அதைத் திறந்து யாரென்று பார்த்தார் தமிழரசி. அங்கே ரவிச்சந்திரன் முழு உருவத்துடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை உயிருடன் பார்த்ததும் தமிழரசிக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இறந்துபோன (?) ரவிச்சந்திரன்தான் பேயாக மாறி வந்திருக்கிறார் என்று பயந்துபோய் மயங்கி விழுந்தார்.
ரவிசந்திரனின் ஆவி ஊருக்குள் வந்துள்ளதாக செய்தி காட்டுத் தீ போல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் தமிழரசியின் வீட்டின் முன்பாகக் கூடினர்.
தான் ரவிச்சந்திரன்தான் என்று எவ்வளவோ கூறியும் கிராம மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. சிலர் அவருடைய கையைக் கிள்ளியும் பார்த்தனர். இருந்தாலும் அவரைப் பேய் என்றே நினைத்த மக்கள், ரவிச்சந்திரனைக் கற்களை வீசித் தாக்க ஆரம்பித்தனர்.
இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்தார். ஆனாலும் மக்கள் அவரை விடாமல் துரத்தித் துரத்தி கல்லால் அடித்தனர்.
இதனால் ரவிச்சந்திரனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட அந்தத் தொகுதி எம்.எல்.ஏவான நளமகராஜனின் வீட்டுக் கதவைத் தட்டினார் அவர்.
ஆனால், எம்.எல்.ஏவும் இவரை பேய் என்று நினைத்து அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினார்.
ஆனால் ரவிச்சந்திரன் எம்.எல்.ஏவின் வீட்டு வாயிலில் விழுந்து அழுது கதறவே ஒரு வழியாய் தைரியத்தை திரட்டிக் கொண்டு வெளியே வந்தார் எம்.எல்.ஏ.
பேய் ரவிச்சந்திரனிடம விசாரித்த எம்.எல்.ஏ. உடனடியாகப் போலீசாரையும் வரவழைத்து அவர்களிடம் ரவிச்சந்திரனை ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழரசியிடம் ரவிச்சந்திரனை போலீசார் ஒப்படைத்தனர்.
ரவிச்சந்திரனின் உடல் என்று கூறி தவறான உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசாரின் திறமை குறித்து மக்களிடையே கோபம் எழுந்துள்ளது. அப்படியானால் கைப்பற்றப்பட்ட உடல் யாருடையது என்று தெரியவில்லை.
ஏதோ ஒரு உடலைக் காட்டி வழக்கை மூடிய போலீசார் இப்போது பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
-->


