ஸ்ரீ தேவியின் 8 மாடிக் கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
நடிகை ஸ்ரீதேவி கட்டி வரும் 8 மாடிக் கட்டடத்தின் முதல் நான்கு மாடிகளை இடித்துத் தள்ள சென்னை மாநகராட்சிஎடுத்த நடவடிக்கை சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவியும், சாந்தி பில்டர்ஸ் என்ற நிறுவனம் இணைந்து சென்னை மயிலாப்பூர் சி.ஐடி. காலனி பகுதியில்,8 மாடிக் குடியிருப்பை கட்டின. இதில் 4 தளங்களுக்கு மட்டுமே முறையான அனுமதி வாங்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 4 மாடிகளும் அனுமதியின்றி கட்டியுள்ளனர்.
இதனால் கட்டடம் வலு தாங்காமல் ஆட ஆரம்பித்தது. ஒரு முக்கிய தூண் இடிந்து விழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் புகார் கொடுக்கவே, கட்டடத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முதல் நான்குதளங்களை இடிக்க உத்தரவிட்டனர்.
இடிக்கும் பணியும் ஆரம்பித்து. ஆனால், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி சார்பில் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடிப்பதற்கு இடைக் காலத் தடை விதித்தது. பின்னர் 3பொறியாளர்கள் கொண்ட குழுவை நியமித்து ஆராய உத்தரவிட்டது.
இந்தக் குழு கட்டடத்தை ஆய்வு செய்து, கட்டடம் வலுவிழந்த நிலையில் அபாயகரமானதாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து நான்கு தளங்களை இடிக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைசரியானதே என்று நீதிபதி சதாசிவம் தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து இடிப்புப் பணி மீண்டும் தொடங்கவுள்ளது.


