For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமரி மீனவர்களைக் கொன்றது புலிகள்தான்;கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைக் கொன்றது, 12 பேரைக் கடத்திக் கொண்டு போனது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர்தான் என்பதை இதுதொடர்பாக கைதான 6 கடற்புலிகள் இயக்கத்தினர் கொடுத்துள்ள வாக்குமூலம் நிரூபிக்கிறது.

தமிழக மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை, கடத்தவும் இல்லை, யாரும் எங்கள் வசம் இல்லை என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அருகே பிடிபட்ட 6 கடற்புலிகளும் இதுதொடர்பாக தெளிவாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்று டிஜிபி முகர்ஜி தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி அருகே கைதான அருள், செல்வக்குமார், ரவிக்குமார், அருள் ஞானதாஸ், ராபின்சன், போனி பாஸ் ஆகியோர் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

இந்த 6 பேர் குழுத் தலைவருக்கு ராபின்சன் தலைவராக இருந்துள்ளார். போனி பாஸ் துணைத் தலைவராக இருந்துள்ளார். ராபின்சன் கியூ பிரிவு போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம்:

வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் எங்களுக்கு ஆயுதங்கள் வரும். நடுக் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களுக்கு சிறு சிறு படகுகளில் சென்று ஆயுதங்களை எடுத்து வருவோம். விடுதலைப் புலிகள் அமைப்புக்கென்றே சொந்தமாக கப்பல்கள் உள்ளன.

கப்பலிலிருந்து எடுத்து வரும் ஆயுதங்களை மன்னார் அருகே உள்ள கொக்கு புதையன் என்ற இடத்தில் இருக்கும் முகாமில் ஒப்படைப்போம்.

இப்படி கப்பல்களுக்குச் சென்று ஆயுதங்களை எடுத்து வருவதற்காக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 பேர் உள்ளனர். அவர்களில் இருவர் தலைவர், துணைத் தலைவர் ஆவர்.

நாங்கள் ஆயுதங்ளுடன் வரும்போது பலமுறை தமிழக மீனவர்களை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் அவர்களுடன் ஒருபோதும் சண்டை போட்டதில்லை. சகோதரர்களாகத்தான் பார்க்கிறோம். அவர்களுக்கு எங்களது தற்காப்புக்காக வைத்திருக்கும் மீன்களைக் கொடுத்து அனுப்புவோம்.

கடந்த மார்ச் மாதம் பெரிய கப்பலில் பெருமளவு ஆயுதங்கள் வந்தது. மரியா என்ற இயந்திரப் படகில் ஆயுதங்களை எடுத்து வரும் பணி நடந்து கொண்டிருந்தது. மணாளன் என்பவரது தலைமையிலான 6 பேர் ஆயுதங்களை எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் அவர்களை கன்னியாகுமரியைச் சேர்ந்த 9 மீனவர்களும் பார்த்துள்ளனர்.

மணாள் குழுவினர் வந்த படகை நிறுத்திய அவர்கள், ஒரு வாரமாக மீன்பிடிக்கிறோம். மீன் கிடைக்கவில்லை. உங்களிடம் உள்ள மீன்களைக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அத்தோடு நிற்காமல் தங்களது படகுடன் வைத்து புலிகளின் படகைக் கட்டியுள்ளனர். மேலும் படகில் ஏறிக் குதித்து புலிகள் வைத்திருந்த மீன் பிடி வலையை விலக்கி அங்கு மீன் உள்ளதா என்று பார்த்துள்ளனர்.

அந்த சமயத்தில் புலிகள் வைத்திருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டனர். இதனால் மணாளன் குழுவினருக்கு அவர்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம் வந்து விட்டது. இதையடுத்து அவர்களை சுட்டு விட்டு அங்கிருந்து கொக்கு புதையன் முகாமுக்கு வந்து விட்டனர்.

பின்னர் அதே மரியா படகில் எனது தலைமையிலான குழுவினர் கிளம்ப முயன்றோம். அப்போதுதான் ஏற்கனவே இந்தப் படகில் சென்ற மணாளன் குழுவினருக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு விட்டது. பார்த்துப் போய் வாருங்கள் என்று எங்களை எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் மரியா என்ற பெயரை அழித்து விட்டுச் செல்ல முயன்றோம். ஆனால் அது அழியவில்லை. இதையடுத்து அதே படகில் சென்றோம். ஆனால் படகில் கோளாறு ஏற்பட்டதால் வழி மாறி தூத்துக்குடி பக்கம் வந்து விட்டோம்.

நாங்கள் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் முதலில் கூறினோம். ஆனால் கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் உண்மையை சொல்ல நேரிட்டது.

12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தை எனக்கு கொக்குபுதையன் முகாமில் உள்ள நண்பரான திருமேணி சாட்டிலைட் போன் மூலமாக தெரிவித்தார். அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று நான் கூறினேன் எனக் கூறியுள்ளார் ராபின்சன்.

இதையடுத்து ராபின்சனையும், போனி பாஸையும் கொக்கு புதையன் முகாமுக்கு போலீஸார் பேச வைத்துள்ளனர். அப்போது அந்த முகாமில்தான் 12 மீனவர்களும் சிறை வைக்கப்பட்டிருப்பது உறுதியாக தெரிய வந்தது.

இந்த நிலையில் மீனவர்கள் சுடப்பட்டது மற்றும் கடத்தல் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளதால் புலிகளின் தலைமை, மணாளனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

12 பேரையும் விடுவித்து பிரச்சினையை சரி செய்ய புலிகள் தலைமை எண்ணுகிறதாம். ஆனால் அப்படிச் செய்தால் உங்களின் பெயர் கெட்டு விடும், தமிழக மக்களின் ஆதரவு பறிபோய் விடும் என முக்கியமான சிலர் புலிகளின் தலைமைக்கு ஆலோசனை கூறியுள்ளனராம். இதன் காரணமாக 12 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தாமதம் நிலவுகிறது.

5 பேரை சுட்டுக் கொன்றதும் புலிகள்தான், 12 பேரை கடத்திச் சென்று சிறை வைத்திருப்பதும் புலிகள்தான் என்பதற்கு ராபின்சன் கொடுத்துள்ள வாக்குமூலமே சரியான சான்று. விரைவில் 12 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கியூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X