For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் யாத்திரை மெக்காவில் குவிந்த 20 லட்சம் யாத்ரீகர்கள்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்ச்சிக்காக, மெக்காவின் கிழக்கில் உள்ள அராபத் பாலைவனத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் யாத்ரீகர்கள் குவிந்துள்ளனர். இவர்களில் 1.5 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.

ஹஜ் யாத்திரை நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. அதில் முக்கிய நிகழ்ச்சியான, நபிகள் நாயகம் மறைந்த 632ம் ஆண்டின்போது அராபத் மலைக் குன்றின் மீதிருந்து அளித்த உரையை நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்காக அராபத் மலைக்குன்று அமைந்துள்ள பாலைவனப் பகுதியில் உலகம் முழுவதுலிமிருந்து வந்து குவிந்துள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் யாத்ரீகர்கள் திரண்டுள்ளனர்.

இதேபோல மினா நகரிலும் பெரும் திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக யாத்ரீகர்கள் ஒரே இடத்தில் குவிந்து விடாமல் தடுத்து பிரித்து அனுப்பி வருகின்றனர்.

புனித மெக்காவில் உள்ள காபா புனித இடத்தைச் சுற்றிலும் 7 முறை நடக்கும் சம்பிரதாயத்தையும் யாத்ரீகர்கள் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் 1 லட்சத்து 57 ஆயிரம் இந்திய யாத்ரீகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக வந்துள்ளனர். மற்றவர்கள் தனியார் டூர் ஆபரேட்டர்கள் மூலம் வந்தவர்கள் ஆவர்.

பக்தர்களின் வசதிக்காக மெக்காவிலும், ரியாத் நகரிலும் உள்ள இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

மேலும் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஏ.ஆர்.அந்துலே தலைமையில் இந்திய ஹஜ் குழுவினரும் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அல்லா இ ரஹீம், டெல்லி போக்குவரத்து அமைச்சர் ஹாரூண் யூசுப், லோக்சபா எம்.பி. மஹபூபா முப்தி, தமிழகத்தைச் ேசர்ந்த எம்.பி. காதர் மொஹைதீன், லோக்சபா எம்.பி. அஜீஸ் பாஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இஸ்லாமிய ஒற்றுமையின் சின்னம் ஹஜ்:

ஹஜ் புனித பயணம், இஸ்லாமியர்களின் ஒற்றுமையை பறை சாற்றும் அடையாளம். எனவே இஸ்லாம் போதிக்கும் போதனைகளை கடைப்பிடித்து உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள், இஸ்லாமிய ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என மெக்கா மசூதியின் இமாம் ஷேக் ஓசாமா கய்யாத் கூறியுள்ளார்.

மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை நடந்த வழிபாட்டின்போது அவர் நிகழ்த்திய உரையின்போது,

எனது மரணத்திற்குப் பின்னர் ஒருவரை ஒருவர் கொல்வதையும், ஒருவருக்கு மற்றொருவர் துன்புறுத்தலை கொடுப்பதையும் கைவிட வேண்டும் என்றார் நபிகள் நாயகம். உயிர்களைப் பாதுகாப்பதும், வன்முறையைக் கைவிடுவதும், பிறரின் சொத்துக்களைக் காப்பதும் முஸ்லீம்களின் கடமை. அதுதான் அவர்களது கெளரவமும் ஆகும்

எந்தக் காரணமும் இன்றி இன்னொரு உயிரைப் பறிப்பதற்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. தீவிரவாதச் செயல்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

இஸ்லாமியர்கள் தங்களது ஹஜ் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஒருவருக்கொருவர் அன்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். துவேஷத்தைக் கைவிட வேண்டும். தங்களைத் தாங்களே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பாவங்களை கழுவிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

இதற்கிடையே, புனித மெக்கா மற்றும் மதீனா மசூதிகளின் காப்பாளரான சவூதி மன்னர் அப்துல்லா, மெக்காவுக்கு வந்து யாத்ரீகர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதேபோல, உள்துறை அமைச்சரும், ஹஜ் கமிட்டி தலைவருமான இளவரசர் நயீப் வருகை தந்து இரு மசூதிகளையும் பார்வையிட்டார்.

உலகிலேயே பெருமளவு கூடும் மத நிகழ்ச்சியாக ஹஜ் யாத்திரை திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்த யாத்திரையில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது மதக் கடைமையை நிறைவேற்றுகின்றனர்.

இந்தியா, ஈரான், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்துதான் அதிக அளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரையாக வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அல்ஜீரியாவைச் சேர்ந்த இப்ராகிம் என்ற யாத்ரீகர் இதுகுறித்துக் கூறுகையில், சீனர்கள், பாகிஸ்தானியர்கள், அல்ஜீரியர்கள், ஏன் அமெரிக்கர்கள் பலரும் கூட இங்கு குவிகின்றனர். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு இங்கிருக்கும் அனைவருக்கும் ஏற்படுகிறது என்றார்.

ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை சவூதி அரசு நிர்வாகம் செய்துள்ளது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையாக ஈரான் அதிபர் முகம்மது அகமதியேஜத் கலந்து கொள்ளவுள்ளார். சவூதி மன்னர் அப்துல்லா விடுத்த அழைப்பின் பேரில், ஈரான் அதிபர் வருகை தரவுள்ளார்.

இந்த ஆண்டு மெக்கா மற்றும் மதீனா உள்ளிட்ட புனித இடங்களை இணைக்க ரயில் போக்குவரத்தும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாது என தரைப் போக்குவரத்துக் கமிட்டி தலைவர் டாக்டர் அலி ஹசன் நக்கூர் கூறியுள்ளார்.

பயணிகளின் வசதிக்காக 19.500 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இதில் 17 ஆயிரம் பேருந்துகளை வெளிநாட்டு பயணிகளுக்காக ஒதுக்கியுள்ளனர். மீதமுள்ள பேருந்துகள் உள்ளூர் பயணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

இந்தப் பேருந்துகளுக்கான வாடகையாக 35 ஆயிரம் சவூதி ரியால்கள் மற்றும் 70 ஆயிரம் ரியால்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X