For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாசுக்கு திமுக சூடு-கூட்டணி 'பணால்' ஆகிறது

By Staff
Google Oneindia Tamil News

Romdoss
சென்னை: டாக்டர் ராமதாசுக்கு அமைச்சர் துரைமுருகன் மூலம் திறந்த கடிதம் அனுப்பியுள்ளது திமுக. அதில் ராமதாசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக, உங்கள் எல்லா கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

துரைமுருகன் அனுப்பியுள்ள அந்த திறந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தோழமை கட்சிகளின் தலைவர், ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர், தமிழக அரசின் முதல்வர், இந்தியாவில் இருக்கும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவர் கலைஞர் என்ற மரியாதை கூட இல்லாமல் கருணாநிதி' என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறீர்கள். இதனால் கலைஞருக்கு மரியாதை குறைந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. கலைஞர் உங்களை டாக்டர் அய்யா என்று அழைப்பாரே. அந்த மரியாதையை தாங்கள் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு உள்ளது.

வேலை வாய்ப்பு பெருகும் என்று கருணாநிதி சொல்வது ஏமாற்று வேலை. சமூக நீதி பற்றி அவருக்கு என்ன தெரியும். சாராய வளர்ச்சி தவிர எதுவும் இல்லை. ஆட்சியில் தெளிவான கொள்கை இல்லை. அமைச்சர்கள் கருணாநிதி பேச்சையே கேட்பதில்லை. 1989ல் நாங்கள் தேர்தலை புறக்கணித்ததால் திமுக ஆட்சியை பிடித்தது.

கருணாநிதி தனது பங்குக்கு மானாட மயிலாட' (கலைஞர் டிவியின் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சி) என சமூகத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் 3 வேளை சாப்பிடுகிறார்களா என்ற கவலை முதல்வருக்கு இல்லை.

பெரிய மாநாடு என்றெல்லாம் சொல்லி ஷோ' நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் கட்-அவுட்' கலாசாரத்தை பாதுகாக்கிறார்கள். 1987 செப்டம்பர் 17ம் தேதி பாமக சாலை மறியல் போராட்டம் அறிவித்த போது, கருணாநிதி வேண்டுமென்றே திமுக முப்பெரும் விழாவை நடத்தினார்.

2011 சட்டமன்ற தேர்தலில் திமுக-அதிமுக இல்லாத இன்னொரு கூட்டணியை உருவாக்குவோம் என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் தனது ஆழ்மனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெட்டிக் கொண்டு போவது என்று முடிவுக்கு வந்து விட்ட பிறகு மட்டென்ன, மரியாதை என்ன' என்ற தங்களின் சித்தாந்தம் எங்களுக்கு புதியது. அதனால்தான் சற்று ஆதங்கப்பட்டோம். சரி போகட்டும் உங்கள் குற்றச்சாட்டில் ஏதாவது உண்மை தான் இருக்கிறதா?

1987ல் கலைஞர் முப்பெரும் விழாவை புதியதாக அறிவித்தது போல் தாங்கள் கூறி இருப்பதாவது நல்ல வேடிக்கை அதிமுக ஆட்சியில் உங்கள் தோழர்கள் மீது போட்ட வழக்கை எல்லாம் வாபஸ் வாங்கியவர், ஏன் தங்களை அழைத்து பேசி பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத ஒதுக்கீடு தந்தவர். இப்போது கருணாநிதி என்று சாதாரணமாக அழைக்கப்படும் எங்கள் தலைவர் கலைஞர்தான்.

கருணாநிதிக்கு சமூக நீதி பற்றி என்ன தெரியும் என்று பேட்டி கொடுக்க உங்களுக்கு கூச்சமாக இல்லையா என்பதுதான் என் கேள்வி. தாங்கள் சமூக நீதி என்று உச்சரிப்பதற்கு முன்பே சமூக நீதிக்காக களம் பல கண்டவர் எங்கள் தலைவர் கலைஞர்.

அமைச்சர்கள் கருணாநிதியின் பேச்சைக் கேட்பதில்லை என்பது சில நேரங்களில் உண்மைதான். உங்கள் பேட்டிக்கு நான் பதில் அளிக்கப் போவதாக சொன்னபோதெல்லாம் வேண்டாம் என்று கலைஞர் கூறினார். அதை மீறிதான் இந்த பதிலை கூறுகிறேன்.

மானாட மயிலாட' என சமூகத்தை கருணாநிதி தன் பங்குக்கு கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. கலைஞர் டி.வியில் வரும் ஒரு கலை நிகழ்ச்சிக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார். இதில் என்ன சீர்கேடு முளைத்து விட்டது. காலத்துக்கு ஏற்ப மாறுபடுவது கலை. உங்களுக்கு கலையில் நாட்டமில்லை. கலைஞரை சொற்களில் வாட்டுவதில் தான் நாட்டம் இருக்கிறது.

மக்கள் 3 வேளை சாப்பிட வேண்டும் என்ற கவலை இல்லாமலா ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுக்கிறார். பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை கொடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வேலைகளையும், வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு பேறு காலத்தில் ஆறு மாதத்துக்கு 6 ஆயிரம் ரூபாய், நிலம், நிலம் பட்டா வழங்குவது எதற்கு கலைஞரின் இந்த மகத்தான பணிகளை நாடறியும், நல்லவர்கள் அறிவார்கள். அவர்கள் வாழ்த்துகிறார்கள்.

சமூதாய வளர்ச்சி ஏதும் இல்லை என்கிறார்கள். விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி. தேசிய நெடுஞ்சாலைகளின் இரு பகுதிகளிலும் உருவாகும் தொழிற்சாலைகள், சேது சமுத்திர திட்டம், தமிழுக்கு செம்மொழித் தகுதி, வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம். இப்படி எத்தனையோ சாதனைகளை திமுக அரசு செய்து வருகிறது.

இவையெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. அரசு நடத்தும் டாஸ்மாக்' கடைகள் மட்டும் தங்கள் கண்களை உறுத்துகிறது. தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதை எல்லாம் இந்த அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் இத்தனை சாதனைகளையும் நிறைவேற்ற யார் மீதும் வரி போடாதது கலைஞரின் மிகப் பெரிய சாதனை.

மதுபான விற்பனை மூலம் அரசுக்கு சுமார் ரூ.8,000 கோடி வருவாய் வருகிறது. இது வரக் கூடாது என்று கருதுகிறீர்களா. உங்கள் வாதப்படியே மதுபான கடைகளை மூடி விட்டால் மதுவே ஒழிந்து விடுமா?, காந்தி பிறந்த மண்ணிலேயே முடியவில்லையே. அரசு மது கடைகள் மூடப்பட்டால் கள்ளச் சாராயம் காய்ச்ச ஊர் ஊருக்கு பலர் கிளம்பி விடுவார்கள். இதைதான் நீங்கள் விரும்புகிறீர்களா?

நெல்லை மாநாட்டை பெரிய மாநாடு என்று சொல்லி ஷோ' நடத்துகிறார்கள் என்கிறீர்கள். அது மாநாடல்ல மகா சமுத்திரங்களின் சங்கமம் அதை ஷோ' என்று தாங்கள் குறிப்பிடுவதால் அதன் சிறப்பு குன்றி விடாது. இமயத்தை பார்த்து சிறுகுன்று என்று கூறும் உங்களுக்குத்தான் சிறுமை வந்து சேரும்.

திமுக கட்-அவுட்' கலாசாரத்தை வளர்க்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறீர்கள். தங்களுக்கும் தங்கள் திருக்குமாரனுக்கும் கட்-அவுட் வைக்கிறார்களே. அதற்கு என்ன பெயர்?

ஊருக்கு உபதேசம் எனக்கும் என் மகனுக்கும் இல்லை என்கிறீர்களா அப்படி என்றால் சரிதான்.

இறுதியாக ஒன்று. சென்னை நகரம் விரிவாக்கம் செய்யக் கூடாது. விமான நிலையம் விரிவாக்கம் செய்யக்கூடாது. தொழிற்சாலைகளுக்கு நில ஆர்ஜிதம் செய்யக் கூடாது. மருத்துவ கல்லூரி-பொறியியல் கல்லூரியை எவரும் நடத்தக் கூடாது. சிறப்பு பொருளாதார மண்டலம் வரக் கூடாது, எவனும் மலிவு விலையில் காய்கறி விற்கக் கூடாது. சினிமாவில் பாட்டும் கூத்தும் இருக்கக் கூடாது. இதையெல்லாம்தான் எங்கள் அரசு செய்ய வேண்டும் என்றால், அதை திமுக அரசு ஏற்காது.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X