For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அறிக்கைக்கு குறள் மூலம் கருணாநிதி பதிலடி

By Staff
Google Oneindia Tamil News

karunanidhi

சென்னை: திருக்குறளை மேற்கோள் காட்டி, தமிழக அரசின் இலவச டிவி திட்டத்தை விமர்சித்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பல்வேறு திருக்குறள்களை மேற்கோள் காட்டி முதல்வர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதால் மக்களிடம் திமுக அரசுக்கு பெருகிவரும் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற இந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அந்தளவிற்கு ஆத்திரம்.

அறிக்கையின் தொடக்கத்தையே திருக்குறளில் ஆரம்பித்திருக்கிறார். காலம் எந்தளவுக்கு கெட்டுக் கிடக்கிறது பாருங்கள். ஜெயலலிதாவுக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம். அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பே நிதிநிலை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட திருக்குறளை உதாரணத்திற்கு அவர் பயன்படுத்தி அறிக்கையைத் தொடங்குகிறார்.

அந்தக் குறள்.

இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

என்பது தான்.

சரியாக எழுதாமல் இதைக் கூட அறிக்கையில் வல்ல அரசு என எழுதியிருக்கிறார். அதற்கு பொருள் கூறும்போது கூட, வழி வகுப்பது, சேர்ப்பது, காப்பது பாதுகாப்பதை சரியாக பிரித்துச் செலவழிப்பது இவற்றில் வல்லவன் அரசன் என்கிறார் திருவள்ளுவர் என்று ஜெயலலிதா
தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

வள்ளுவர் சொல்லியிருப்பது ஒரு அரசுக்குரிய இலக்கணத்தைத் தானே தவிர, அரசனுக்கு என்று வள்ளுவர் இதைக் கூறவில்லை. வள்ளுவர் வாக்குபடி நான் நடந்து கொள்ளவில்லை என ஒரு குற்றச்சாட்டினை என்மீது சுமத்துகிறார்.

திருவள்ளுவர் இந்த ஒருக்குறளை மட்டும் எழுதவில்லை. கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள,

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து - என்றும்,

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு - என்றும் எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவிற்காகவே எழுதப்பட்டுள்ள குறட்பாக்களையும், அவருக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த புலவர் மூலமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மறைந்த சீனிவாசன் இந்த அம்மையாரின் ஆட்சி அலங்கோலம் பற்றி அவரது தீர்ப்பிலேயே குறிப்பிட்டது, வள்ளுவன் பெருமானின் குறளை மேற்கொள் காட்டித்தான்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் என்று நீதியரசர் ஒருவராலேயே சுட்டிக் காட்டப்பட்ட ஜெயலலிதா, என்மீது குற்றம் சுமத்தி கூச்சலிட்டிருப்பது தான் விந்தையிலும் விந்தை.

அவரின் குற்றச்சாட்டுகளுக்கு வருகிறேன். அவற்றில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளட்டும்.

2006ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கலர் டிவி இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு கலர் டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், 2007ம் ஆண்டும் நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தில் வண்ண தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என கூறப்பட்டதாகவும், தற்போது எல்லா குடும்பங்களுக்கும் இலவச கலர் டிவி என்று சொல்லப்படுவதாகவும் இதில் மாபெரும் முரண்பாடு உள்ளது என ஜெயலலிதா கூறுகிறார்.

தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த 3 வாசகங்களில் ஏதாவது முரண்பாடு இருக்கிறதா என்பதை தமிழக மக்கள் தான் கூறவேண்டும். கலர் டிவி பெட்டிகள் வழங்குவோம் என சொல்லி விட்டு, தற்போது வழங்க மாட்டோம் எனச் சொன்னால் தான் முரண்பாடு.

கலர் டிவி பெட்டிகளை வழங்கும்போது அதற்குள்ள வரவேற்பினை பொறுத்து, மக்கள் ஆதரவை பொறுத்து மேலும் மேலும் அந்தத் திட்டத்தில் முன்னேற்றம் செய்வது ஒன்றும் முரண்பாடு ஆகாது என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது அதே அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருப்பதை போல, தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதை நிறுத்தினால் தான் அது முரண்பாடு. எனவே முரண்பாடான கருத்தினைத் தெரிவிப்பவர் ஜெயலலிதா தானே தவிர தமிழக அரசு கிடையாது.

ஜெயலலிதா தனது அறிக்கையில் அடுத்த முக்கிய குற்றச்சாட்டாகக் கூறியிருப்பது இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பற்றியதாகும். ஒதுக்கப்பட்ட தொகையில் மிச்சத் தொகை என்னவாயிற்று என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.

அவர் பல வருடகாலம் தமிழகத்தில் முதல்வராக இருந்தவர். அரசு கணக்கு விவரங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டால் அந்த தொகை முழுவதையும் பையிலே போட்டுத் தூக்கிக் கொண்டு கடைக்கு போய், வாங்கிக் கொண்டு, மீதம் உள்ளதை அப்படியே வீட்டிற்குக் கொண்டு போய்விடுவதல்ல.

ஒரு திட்டத்திற்கான மதிப்பீட்டைச் செய்து, அதற்கான நிதியை ஒதுக்கினால், அந்தத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டது போக மீதித் தொகை அரசு கணக்கிலே தான் இருக்குமே தவிர, அது எங்கும் போய் விடாது. அரசின் ஒவ்வொரு பைசா செலவிற்கும் மத்திய அரசின்
சார்பில் தணிக்கை உண்டு. சிறு தவறு ஏற்பட்டாலும் அந்த தவறு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்படும். அந்த தணிக்கை அறிக்கை சட்ட பேரவையிலே வைக்கப்படும்.

அப்படி வைக்கப்பட்டு அதிலே ஏதாவது குறை கூறப்பட்டிருந்தால் ஜெயலலிதா அதனை எடுத்துக் கூறலாம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற அறிக்கையில் குறைகள் கூறப்பட்டு, அது பல
ஏடுகளில் பல நேரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஜெயலலிதா அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க முடியாது.

2வது கட்டமாக 750 கோடி ரூபாய் என சொல்லப்பட்டது. ஆனால் நிதி நிலை அறிக்கையில் 685 கோடி ரூபாய் என உள்ளது. இது முரண்பாடல்லவா என்கிறார் ஜெயலலிதா.

திட்டம் வகுக்கப்பட்ட போது எதிர்பார்த்த மதிப்பு ரூ.750 கோடி. ஆனால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதில் தொலைக்காட்சி பெட்டியின் விலை நிர்ணயிக்கப்பட்ட பிறகு அதற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டபோது, தேவையானது ரூ.685 கோடி மட்டும் தான். மீதியுள்ள ரூ.65 கோடியை யாரும் எடுத்துக் கொண்டு போய்விடவில்லை. அந்த தொகை அரசுக் கணக்கில் தான் சேர்ந்துள்ளது.

3வது கட்டமாக ஒப்பந்த புள்ளிகள் கோரிய போது, குறைந்த விலையை நிர்ணயித்த தொலைக்காட்சி பெட்டியின் விலைக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரிய மற்றவர்களுக்கும், கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்களா என்றெல்லாம் விசாரணை நடத்தி அப்படிக் கொடுக்க முன் வந்தவர்களிடம் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த புள்ளிதாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போது விலை குறைக்கப்பட்ட காரணத்தினால் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்படட் நிதியில் மீதம் இருந்த காரணத்தினால் அந்த தொகைக்கும், கலர் டிவி பெட்டிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டது.

அதனால் முதலில் திட்டமிட்டது 30 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் என்பதற்கு மாறாக தற்போது 34 லட்சத்து 25 ஆயிரம் கலர் டிவி பெட்டிகள் வாங்கிட ஆணையிடப்பட்டுள்ளதாக முரசொலியில் கடந்த 27ம் தேதியன்று எழுதிய எனது கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.

அதை முழுவதும் படிக்காமல் அரைகுறையாக படித்துவிட்டு, அறிக்கை எழுதிக் கொடுத்தவரை நம்பி ஜெயலலிதா அறிக்கையிலே கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார்.

எனவே ஆத்திரத்தில் அவசரப்பட்டு அறிக்கை என்ற பெயரால் ஜெயலலிதா எழுப்புகின்ற குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X